கோபாலபுர குடும்பத்தின் இளவரசருக்கு ஒரு கேள்வி, சிரித்து மழுப்பாமல் பதில் சொல்ல வேண்டும் என்று நோபல் ப்ரிக்ஸ் நிறுவனம் பற்றி உதயநிதிக்கு கேள்வி எழுப்பி இருக்கிறார் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.
சென்னையில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க. தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதியாக ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்துவதாக கூறிவிட்டு, இன்னமும் செலுத்தவில்லை என்று குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு கடுமையாக பதிலடி கொடுத்திருந்தார் அண்ணாமலை. தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய உதயநிதியும், மோடி 15 லட்சம் தருவதாகக் கூறிவிட்டு தரவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், நோபல் ப்ரிக்ஸ் நிறுவனம் தொடர்பாக அமைச்சர் உதயநிதியிடம் கேள்வி எழுப்பி பதிலடி கொடுத்திருக்கிறார் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தினமும் 15 லட்சம் 15 லட்சம் என்று சொல்லாத ஒன்றைச் சொல்லி புலம்பி வருவதாக அறிகிறேன். ஆட்சிக்கு வந்து ஒரே ஆண்டில், 30,000 கோடி ரூபாய் கொள்ளை அடித்த பெருமை வாய்ந்த, கோபாலபுர குடும்பத்தின் இளவரசருக்கு ஒரு கேள்வி. சிரித்து மழுப்பாமல் பதில் சொல்ல வேண்டும். 1,000 கோடி ரூபாய் ஊழலுக்கு பேர்போன துபாய் நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் குழும நிறுவனமான நோபல் ப்ரிக்ஸ் நிறுவனமும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையும் ஒரே விலாசத்தில் எப்படி இயங்கி வருகிறது என்பதை தெளிவுபடுத்துவீர்களா?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.