ஓபிசி 27% இட ஒதுக்கீடு, தாம்பரம் சித்த மருத்துவத்தை கொண்டு வந்தது திமுகவா? – அன்புமணி ஆவேசம் !

ஓபிசி 27% இட ஒதுக்கீடு, தாம்பரம் சித்த மருத்துவத்தை கொண்டு வந்தது திமுகவா? – அன்புமணி ஆவேசம் !

Share it if you like it

பாமகவின் சாதனைகளை தன்னுடையதாகக் கூறி அரசியல் பிழைப்பு நடத்தும் திமுகவுக்கும், இன்னொரு உயிரினத்தை சார்ந்து அதன் உணவை உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இப்படி ஓர் அரசியலை திமுக நடத்தக் கூடாது” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “இந்தியாவின் சமூக நீதி வரலாற்றில் மிகப் பெரிய மைல்கல்லாக போற்றப்படும் மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இடஒதுக்கீடு, தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனம், சேலம் ரயில்வே கோட்டம் போன்றவற்றைக் கொண்டு வந்தது திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தான் என்ற இமாலயப் பொய்யை திமுக நேற்று வெளியிட்ட அதன் தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறது. பாமகவின் சாதனைகளுக்கு திமுக சொந்தம் கொண்டாடுவது கண்டிக்கத்தக்கதாகும்.

சென்னையில் நேற்று வெளியிடப்பட்ட 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையில், ‘‘மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு, சென்னை தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனையாக தரம் உயர்த்தியது, சேலம் ரயில்வே கோட்டம், தமிழகத்தில் அனைத்து மீட்டர்கேஜ் ரயில் பாதைகளையும் அகலப்பாதைகளாக மாற்றியது, தமிழகத்தில் ரூ.1828 கோடியில் 90 ரயில்வே பாலங்களைக் கட்டியது’’ போன்றவை 2004 – 09 மன்மோகன்சிங் ஆட்சிக்காலத்தில் பதவி வகித்த திமுக அமைச்சர்களின் சாதனை என்று கூறப்பட்டிருக்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களாலும் படைக்கப்பட்ட இந்த சாதனைகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள திமுக முயல்வது அப்பட்டமான ஒட்டுண்ணி அரசியல் ஆகும். செய்யாததை செய்ததாக போலி பெருமை பேசுவதற்கு திமுக வெட்கப்பட வேண்டும்.

பாமகவின் சாதனைகளை தமது சாதனையாக திமுக முத்திரைக் குத்திக் கொள்வது இது முதல் முறையல்ல. இந்தியாவில் இதுவரை 50 லட்சத்திற்கும் கூடுதலான உயிர்களைக் காப்பாற்றியுள்ள 108 அவசர ஊர்தித் திட்டத்தை கொண்டு வந்தது மத்திய சுதாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்த நான் தான் என்பது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தெரியும். அதை கருணாநிதி அரசின் சாதனையாகக் காட்டிக் கொள்ள திமுக முயன்றது. ஆனால், உண்மை அம்பலப்பட்டு போனதால், அதை விட்டு விட்டு, பாமகவின் பிற சாதனைகளுக்கு சொந்தம் கொண்டாடிக் கொள்ள திமுக துடிக்கிறது.

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டைப் போராடிப் பெற்றுத் தந்தது பாமகதான் என்பது சமூகநீதி வரலாற்றில் பொறிக்கப்பட்ட உண்மை ஆகும். அதற்காக பாமக பல்லாண்டு போராட்டம் நடத்தியது. 2004ம் ஆண்டு மன்மோகன்சிங் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற போது, அதற்கான குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டத்தில், ஓபிசி 27% இட ஒதுக்கீட்டைச் சேர்க்கச் செய்தது பாமகதான்.

ஆனால், புதிய அரசு பொறுப்பேற்று இரு ஆண்டுகள் ஆகியும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு கொண்டு வரப்படாத நிலையில், அதுகுறித்து விவாதிப்பதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் இடதுசாரித் தலைவர்களின் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டும்படி ராமதாஸ் வலியுறுத்தினார்.

அதையேற்று 23.05.2006ம் நாள் அக்கூட்டம் கூட்டப்பட்டிருந்த நிலையில், அதற்கு ஒரு வாரம் முன்பாக 17.05.2006ம் நாள் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன்சிங் ஆகியோரை ராமதாஸ் சந்தித்து 27% இட ஒதுக்கீட்டுக்கு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதுமட்டுமின்றி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கூட்டத்திற்கு முதல் நாள் அப்போதைய திமுக தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் ராமதாஸ் சந்தித்து டெல்லியில் நடைபெறும் கூட்டணிக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்; 27% இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், சமூகநீதியைக் காப்பதற்கான அந்தக் கூட்டத்தில் திட்டமிட்டு கலந்து கொள்ளாமல் புறக்கணித்தவர் தான் கருணாநிதி ஆவார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கூட்டத்தில் 27% இட ஒதுக்கீட்டைக் கொண்டு வர வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்திய நிலையில், அப்போதைய மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜியும், ப.சிதம்பரமும் உடனடியாக 27% இட ஒதுக்கீடு கொண்டு வர முடியாது என்று அறிக்கை வாசித்தனர். அதை எதிர்த்து ராமதாஸ் குரல் எழுப்பினார்.

ஆனால், திமுக சார்பில் அக்கூட்டத்தில் கலந்து கொண்ட தயாநிதி மாறன் 27% இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக குரல் எழுப்பாமல் வேடிக்கைப் பார்த்தார். ராமதாஸின் ஆவேசத்தைக் கண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரை சமாதானப் படுத்தி இடஒதுக்கீடு சிக்கல் குறித்து மாலையில் விவாதிக்கலாம் என்று கூறி கூட்டத்தை ஒத்தி வைத்தார்.

இடைப்பட்ட நேரத்தில் இடதுசாரி தலைவர்களான ஹர்கிஷன்சிங் சுர்ஜித், சீதாராம் யெச்சூரி, ஏ.பி.பரதன், து.இராசா, மத்திய அரசில் அங்கம் வகித்த லாலு பிரசாத், இராம்விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட தலைவர்களை ராமதாஸ் சந்தித்து தனது நிலைக்கு ஆதரவு தருமாறு வேண்டினார். ராமதாஸை பிரதமர் மன்மோகன்சிங் அழைத்து 27% கோரிக்கையை கைவிடுமாறு கோரினார்.

ஆனால், அதற்கு அவர் ஒப்புக்கொள்ளாததுடன், மாலையில் நடந்தக் கூட்டத்திலும், ஓபிசி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வாதாடினார். அதற்கு பிற கட்சிகளின் தலைவர்களும் ஆதரவு தெரிவித்ததால் உயர்கல்வி நிறுவனங்களில் 27% இடஒதுக்கீட்டைக் கொண்டு வர மத்திய அரசு ஒப்புக் கொண்டது. இந்த நிகழ்வுகளை தமிழ் மற்றும் ஆங்கில நாளேடுகள் செய்தியாக பதிவு செய்துள்ளன.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் அனைத்து மாநிலத் தலைநகரங்களுக்கும் சென்ற ராமதாஸ், அங்குள்ள காங்கிரஸ் கூட்டணி மற்றும் இடதுசாரி தலைவர்களைச் சந்தித்து 27% இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு திரட்டினார். பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி ஆகியோரை சந்தித்த நான், 27% இட ஒதுக்கீட்டை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். பாமக மேற்கொண்ட இத்தகைய நடவடிக்கைகளின் பயனாகவே மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் ஓபிசிகளுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

2007ம் ஆண்டு ஜனவரி 3ம் நாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஒப்புதலைப் பெற்று நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நீண்ட வரலாற்றை மறைத்து விட்டு, ஓபிசி 27% இட ஒதுக்கீட்டை திமுக அமைச்சர்கள் தான் கொண்டு வந்ததாக கூறுவது இமாலயப் பொய் ஆகும். இது கண்டிக்கத்தக்கது.

தாம்பரம் தேசிய சித்த மருத்துவர் நிறுவனத்தைக் கட்டியெழுப்பி திறப்பு விழா நடத்தியதும், அதன் மருத்துவமனைக்கு அயோத்திதாசப் பண்டிதரின் பெயரைச் சூட்டியதும் அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்த நான் தான். சேலத்தில் ரூ.139 கோடியில் எய்ம்ஸுக்கு இணையான அதிஉயர் சிறப்பு மருத்துவமனையைக் கொண்டு வந்ததும் மத்திய சுகாதார அமைச்சராக பணியாற்றிய நான் தான்.

சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் என்பது தந்தைப் பெரியாரின் கனவு ஆகும். அந்தக் கனவை நிறைவேற்றி வைத்தவர் அப்போதைய ரயில்வே இணையமைச்சராக பதவி வகித்த அரங்க.வேலு தான். சேலத்தில் ரயில்வே கோட்டம் அமைக்க கேரளத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும், அரசியல்வாதிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்ட போது, ராமதாஸ் அளித்த துணிச்சலாலும், தொடர்வண்டித்துறை அமைச்சர் லாலு பிரசாத் ஆதரவாலும் அவற்றை முறியடித்து சேலம் ரயில்வே கோட்டத்தை சாத்தியமாக்கியவர் பாமகவின் அரங்க.வேலு.

தமிழகத்தில் இருந்த அனைத்து மீட்டர்கேஜ் பாதைகளும் அகலப்பாதைகளாக்கப்பட்டது பாமகவை சேர்ந்த ரயில்வே அமைச்சர்களான ஏ.கே.மூர்த்தியும், அரங்க.வேலுவும் மேற்கொண்ட நடவடிக்கைகளால் தான். இந்தத் திட்டங்களுக்காக திமுக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. பாமகவின் சாதனைகளை தன்னுடையதாகக் கூறி அரசியல் பிழைப்பு நடத்தும் திமுகவுக்கும், இன்னொரு உயிரினத்தை சார்ந்து அதன் உணவை உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இப்படி ஒரு அரசியலை திமுக நடத்தக் கூடாது.

சமூக நீதியில் பாமக படைத்துள்ள சாதனைகள் இமயமலையை விட உயரமானவை; சமூகநீதிக்கான திமுகவின் பங்களிப்பு என்பது பரங்கிமலையை விட குட்டையானவை. இந்தியாவில் 6 மாநிலங்களில் சாத்தியமாக்கப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழகத்தில் நடத்த முன்வராத திமுகவுக்கு, உச்சநீதிமன்றமே ஆணையிட்ட பிறகும் தமிழகத்தின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்காமல் வன்னியர்களுக்கு துரோகம் செய்த திமுகவுக்கு சமூகநீதி குறித்து பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை.

சமூகநீதி குறித்து பேசுவதற்குக் கூட தகுதி இல்லாத திமுக, பாமக படைத்த சமூக நீதி சாதனைகளுக்கு சொந்தம் கொண்டாட முயல்வதற்கு அடுத்த மாதம் 19ம் நாள் நடைபெறும் தேர்தலில் தமிழக மக்கள் மறக்க முடியாத பாடம் புகட்டுவர் என்பது உறுதி” என்று தெரிவித்துள்ளார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *