இஸ்ரேல் பாலஸ்தீன விவகாரத்தில் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை மாற்றி இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது ஆக்டோபஸ் சீனா !

இஸ்ரேல் பாலஸ்தீன விவகாரத்தில் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை மாற்றி இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது ஆக்டோபஸ் சீனா !

Share it if you like it

எந்த ஒரு விவகாரத்திலும் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பது தான் சீனாவின் அரசியல் மரபு. இஸ்ரேல் பாலஸ்தீன விவகாரத்தில் பாரதத்தின் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டில் எதிராக தனது பாலஸ்தீன ஆதரவை வெளிப்படுத்தியது. பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் தேவை என்று வீரவசனம் பேசியது. ஆனால் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றி இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை சீனா உறுதி செய்திருக்கிறது.ஆனால் அது சீனாவிற்கு அரசியல் பொருளாதார ரீதியாக லாபம் கொடுத்தால் மட்டுமே சரி வரும். மாறாக நஷ்டத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு விவகாரத்திலும் சீனா களம் இறங்காது. அப்படித்தான் விவகாரத்திலும் ஆரம்பத்தில் பாலஸ்தீன ஆதரவு என்ற நிலைப்பாட்டின் மூலம் ஒட்டுமொத்த அரபு நாடுகளிடமிருந்தும் ஒரு முழுமையான ஒருங்கிணைப்பை பெற்றுக்கொள்ள முடியும். அது எதிர்காலத்தில் பெட்ரோல் எண்ணெய் பொருட்கள் உள்ளிட்ட வர்த்தகத்தில் ஏதேனும் லாபத்தை கொடுக்கும் என்ற கணக்கில் தான் சீனா பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது.

ஆனால் இந்த நிமிடம் வரை ஒட்டுமொத்த நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிராக வாய் திறக்காமல் பாலஸ்தீனுக்கு ஆதரவாக களமிறங்காமல் அமைதி காப்பதன் மூலம் அவர்கள் அனைவரும் ஒரு இறுதி முடிவுக்கு வந்துவிட்டதை சீனா உணர்ந்து கொண்டது. அதன் பின்னணியில் இருக்கும் பாரதத்தின் தொலைநோக்கு ராஜிய பார்வை தற்போது சீனாவிற்கு தெளிவாகிவிட்டது. இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையேயான யுத்தத்தில் எப்போதும் போல் அமெரிக்கா இஸ்ரேலுடன் கைகோர்த்து களம் இறங்கி விட்டது. பிரிட்டன் ஆஸ்திரேலியா ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளும் தங்களின் ஆதரவை இஸ்ரேல் நாட்டிற்கு தெரிவித்து வருகின்றன. ஆனால் இந்த யுத்தம் தொடங்கிய சில மணி நேரங்களில் முதல் நபராக வெளிப்படையான நிபந்தனையற்ற ஆதரவை பாரதத்தின் பிரதமர் இஸ்ரேலுக்கு வழங்கி தனது நிலைப்பாட்டை உறுதி செய்தார்.

எப்போதும் சர்வதேச நிலைப்பாடுகளில் பாரதத்திற்கு நேர் எதிரான நிலைப்பாடுகளை எடுப்பதுதான் சீனா மற்றும் பாகிஸ்தான் வழக்கம். அவ்வகையில் இரண்டு நாடுகளும் ஓரணியில் நின்று இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு எதிராக காய் நகர்த்தும். இது கடந்த காலங்களில் இலங்கை வங்கதேசம் நேபாளம் மியான்மர் மாலத்தீவு உள்ளிட்ட பல்வேறு அண்டை நாடுகளின் விவகாரங்களில் வெளிப்படையாக அரங்கேறியது. அவ்வகையில் எப்போதும் பாரதத்திற்கு நயவஞ்சக செயல்களையே செய்வதில் தேர்ந்த சீனா இம்முறையும் இஸ்ரேல் பாலஸ்தீன விவகாரத்தில் பாலஸ்தீனத்திற்கு தனது ஆதரவை வழங்கியது . மேலும் அரை நூற்றாண்டுகளாக கிடப்பில் இருக்கும் பாலஸ்தீனத்தின் அங்கீகாரம் உள்ளிட்ட விஷயங்களை இனியும் தாமதிக்காமல் ஐநா மூலமாக நிறைவேற்ற வேண்டும் என்று வழக்கம் போல தனது நரி தந்திர நகர்வை முன்னெடுத்தது.

இஸ்ரேல் பாலஸ்தீன விவகாரத்தில் ஒரு சிறு யுத்தம் நடைபெற இருக்கிறது . இதில் பாலஸ்தீன ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்து வைப்பதன் மூலம் பாலஸ்தீனத்தின் ஆதரவையும் பெற்றுக் கொள்ளலாம். அது சீனாவில் இருக்கும் உய்கூர் முஸ்லிம்கள் மீது சீன கம்யூனிச அரசு கட்டவிழ்த்து விடும் பயங்கரவாத நடவடிக்கைகளை சர்வதேச அளவில் பேசும் பொருளாக்காமல் முடக்குவதற்கு உதவியாக இருக்கும் என்று சீனா கருதி இருக்கலாம். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கும் பட்சத்தில் அமெரிக்காவின் நேர் எதிர் நிலைப்பாட்டில் இருக்கும் ரஷ்யாவின் பின் தொடர்ந்து பாலஸ்தீனத்தை ஆதரிப்பதே தனக்கு சரியான முடிவாக இருக்கும் என்ற ராஜ்யக் கணக்கு வகையிலும் சீனா பாலஸ்தீனத்தை ஆதரிக்கலாம் .சீனாவின் பாலஸ்தீன நிலைப்பாடு சீனாவின் கடந்த கால அரசியலுக்கும் சமகால ராஜ்ஜிய நிலைப்பாட்டிற்கும் பொருத்தமாக தான் இருந்தது. அதில் யாருக்கும் எந்த ஆச்சரியமும் அதிர்ச்சியும் இருக்கவில்லை. ஆனால் தற்போது தலைகீழாக சீனாவின் நிலைப்பாடு பாலஸ்தீன ஆதரவிலிருந்து இஸ்ரேலின் ஆதரவிற்கு மாறி இருப்பது தான் பேசு பொருளாக மாறி இருக்கிறது. ஒரு சிறு யுத்தமாக கடந்து போகும் என்று சீனா கணக்கிட்ட ஒரு நிகழ்வு ஒரு பெரும் யுத்தத்திற்கான முன்னோட்டமாக இஸ்ரேல் பாலஸ்தீன விவகாரம் மாறி வருவது அதை யோசிக்க வைத்திருக்கலாம்.

இந்திய ஆப்பிரிக்க ஐரோப்பிய காரிடோர் என்னும் தரைவழி சாலை கட்டுமானமும் அதன் காரணமாக வரக்கூடிய நீண்ட கால அரசியல் பொருளாதார சமூக மாற்றங்களும் சீனாவிற்கு தேவை. உள்நாட்டு நலன் வளர்ச்சி பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்களும் தான் தொலைநோக்கு பார்வையில் அரபு நாடுகளையும் உலக நாடுகளையும் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிறுத்தி இருக்கிறது என்பதை சீனா கொஞ்சம் தாமதமாக உணர்ந்து இருக்கிறது. அதன் காரணமாகத்தான் அவசர அவசரமாக இஸ்ரேலுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை மாற்றி இருக்கிறது. இதன் மூலம் சீனா தனது வெளியுறவுக் கொள்கைகள் எல்லாம் தனது தேசத்தின் லாபத்தை மட்டுமே முன்னிறுத்தும் என்பதை மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்திருக்கிறது. இதில் இந்தியா எதிர்ப்பு உலக நாடுகள் எதிர்ப்பு என்பதெல்லாம் இரண்டாம் பட்சமே. தனது சுயலாபம் ஆதாயம் மட்டுமே முதன்மையானது என்பதை இந்த இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டிற்கு மாறியதன் மூலம் மீண்டும் ஒருமுறை உலகிற்கு நிரூபித்து இருக்கிறது.

தான் முன்மொழிந்த பட்டுப்பாதை சாலை திட்டத்தை உலக நாடுகள் பலரும் மறுதலித்து வெளியேறியதில் சீனாவிற்கு ஏகப்பட்ட எரிச்சல் உண்டு. குறிப்பாக அதே மாதிரியான ஒரு திட்டத்தை உலகளாவிய திட்டமாக முன்மொழிந்து அதற்கு உலக நாடுகளை ஒருமித்த ஆதரவில் அணி திரட்டி ஒட்டுமொத்த உலகத்தையும் தன் பக்கம் நிறுத்திக் கொண்ட மோடியின் மீதும் பாரதத்தின் மீதும் சீனாவிற்கு அளவு கடந்த வன்மம் கூட இருக்கலாம். ஆனால் அதை எல்லாம் காரணமாக வைத்து ஜி 20 மாநாடுகளை புறக்கணித்தது . ரஷ்யாவையும் புறக்கணிக்க வைத்தது வரை சரி. ஆனால் ஜி 20 நாடுகளின் பங்களிப்பாக வரும் இந்திய ஆப்பிரிக்கா ஐரோப்பிய கேரிடார் திட்டத்தை புறக்கணிக்கும் அளவிற்கு சீனா ஒன்றும் அடி முட்டாள் இல்லை. அந்த சாலை திட்டம் செயல்பாட்டிற்கு வருமானால் அதனால் இந்தியாவிற்கு அடுத்தபடியாக அதிக அளவில் பொருளாதார ரீதியாகவும் போக்குவரத்து ரீதியாகவும் பெரும் பலன்களை அடைய இருப்பது சீனா தான். தான் கொண்டு வந்த திட்டம் தோல்வியில் முடிந்தாலும் அடுத்து பொது கட்டுமானமாக ஜி 20 நாடுகள் மூலம் கொண்டுவரப்படும் திட்டத்தை பயன்படுத்தி கடந்த கால இழப்புகளை மீட்டெடுக்கவே சீனா முயலும். மாறாக வீம்புக்கு அரசியல் பேசி அந்தத் திட்டத்தை எதிர்க்கவோ முடக்கவோ அல்லது அதிலிருந்து வெளியேறும் முட்டாள்தனத்தை ஒருபோதும் சீனா செய்யாது. காரணம் கொரோனா காலத்திற்குப் பிறகு பெரும் சிக்கலிலும் தள்ளாட்டத்திலும் இருக்கும் சீனாவின் பொருளாதாரத்தையும் உள்நாட்டில் இருக்கும் குழப்பங்களையும் என்று மீட்டெடுப்பதற்கு இந்த இந்திய ஐரோப்பிய காரிடார் திட்டம் சீனாவிற்கு இருக்கும் ஒரே அருமருந்து . அதை எப்படியாவது தக்கவைத்துக் கொள்ளவே சீனா முயற்சி செய்யும்.

இந்தத் திட்டத்தில் ஜி 20 நாடுகளின் வாயிலாக பலம் அடைய இருக்கும் ஒரு நாடு என்பதால் தார்மீக ரீதியாக இந்த திட்டத்திற்கு ஆதரவாக முன்னெடுக்கப்படும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பிற்கு எதிரான போரை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் மறைமுகமாக சீனாவிற்கு உண்டு. குறைந்தபட்சம் போருக்கு ஆதரவு இல்லை என்றாலும் கூட பாலஸ்தீனத்திற்கு ஆதரவு. இஸ்ரேலுக்கு எதிர்ப்பு என்ற நிலையிலிருந்து நிச்சயம் சீனா பின்வாங்கியே தீர வேண்டும். இல்லாத பட்சத்தில் அது ஜி 20 நாடுகளில் இருக்கும் அத்தனை நாடுகளின் விரோதத்தையும் சீனாவிற்கு சம்பாதித்து கொடுக்கும். உலக அளவில் தனிமைப்படுத்தப்படும் போது ஜி 20 அமைப்புகளில் இருந்து சீனாவை வெளியேற்றும் சூழல் கூட வரலாம். அப்படி ஒரு இக்கட்டான சூழலையும் அதன் மூலம் வரக்கூடிய இழப்புகளையும் தானோ தனது தேசமோ அனுபவிப்பதை ஒருபோதும் சீனா அனுமதிக்காது. சீனா தனது நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறது. எது எப்படி இருந்தாலும் சீனாவின் லாபமும் நலனும் மட்டுமே தனக்கு முதல் இலக்கு என்று எதைப் பற்றியும் கவலை கொள்ளாது தன்னுடைய சுயநலம் தனக்கான ராஜ்ஜிய லாபம் என்னவோ? அதை ஒட்டியே தனது முடிவுகள் மாறும் என்ற வழக்கமான ஓநாய் அரசியலில் சீனா மர்ம புன்னகையோடு அனைத்தையும் கடந்து போய்க் கொண்டிருக்கிறது.


Share it if you like it