ஓமனில் தவிக்கும் மீனவரை விரைவில் மீட்டுக் கொண்டு வருவோம் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கர் பதில் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
தமிழக மீனவர்கள் பலரும் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்லும்போது, இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படும் சூழல் நிலவி வருகிறது. அதேபோல, காற்றின் வேகத்திலும், திசைமாறியும் இலங்கை மற்றும் ஓமன் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றுவிடுவதும் அவ்வப்போது நடைபெறுகிறது. இவ்வாறு செல்லும் மீனவர்களை அந்நாட்டு அரசுகள் பிடித்து சிறையில் தள்ளுவது வழக்கமாக இருந்து வருகிறது. எனவே, மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்தும், திசைமாறி இலங்கை மற்றும் ஓமன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்று சிறையில் தவிக்கும் மீனவர்களையும் மத்திய அரசு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்த நிலையில், மேற்கண்ட கடிதத்துக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கர், அண்ணாமலைக்கு பதில் கடிதம் எழுதி இருக்கிறார். அக்கடிதத்தில், “ஓமனில் தவித்த மீனவர்கள் மீட்கப்பட்டிருப்பது குறித்து உங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மஸ்கட்டில் உள்ள நமது தூதரக அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். இவர்களில் 7 மீனவர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். எஞ்சிய ஒரு மீனவரை இந்தியாவுக்கு விரைந்து அனுப்ப ஏற்பாடுகள் நடந்து வருகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார். இக்கடிதத்தை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இதைப் பார்த்துவிட்டு பலரும் அண்ணாமலைக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.