பேசதா வீரனின் பேசப்படாத வரலாறு – ஊமைத்துரை

பேசதா வீரனின் பேசப்படாத வரலாறு – ஊமைத்துரை

Share it if you like it

ஊமைத்துரை பேசதா வீரனின் பேசப்படாத வரலாறு

25.05.1801 ஆம் ஆண்டு எட்டயபுரத்தில் நடைபெற்ற போரில் சிவ சம்பு என்ற வீரன் காயமுற்று போர்க்களத்தில் விழுந்து கிடந்தார். அவரைக் காண தாயார் முத்தம்மாள் வந்து சிவசந்திரன் காயங்க்கு மருந்து இட்டால் ஆனால் சிவசம்பு தாயாரிடம் தாயே நம்முடைய தலைவர் ஊமத்துரையை காப்பாற்றுங்கள் அவர் இருந்தா தான் நமக்கு விடுதலை கிடைக்கும் என்று கூறி உயிரை விட்டார்.

ஊமைத்துறை மீது மக்கள் இருந்த நம்பிக்கையும் அவரது தியாகத்தையும் தலைமை பண்பையும் இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

பிறப்பு

இவர் 1772 ஆம் ஆண்டு இன்றைய தூத்துக்குடியில் உள்ள ஓட்டப்பிடாரம் பகுதியில் பிறந்தார்.‌ இவரது இயற்பெயர் குமாரசாமி. தாயார் ஆறுமுகத்தமாள். இவரின் அண்ணன் சுகந்திர போராட்ட தியாகி வீரப்பாண்டி கட்டபொம்மன் ஆவார். இவருக்கு செவத்தையா என்ற தம்பியும் இருந்தார்.  அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த இவரின் தந்தை ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம் பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திரமாநிலம்  பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று. ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசக் கட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதிகட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டனர். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன். .

இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன் . தமிழ் நாட்டார் தரவுகள் இவரது பேச்சாற்றலைப் பகடி செய்யும் வண்ணம் இவருக்கு “ஊமைத்துரை” என்று பட்டப்பெயர் வந்ததாகச் சொல்கின்றன. இவரை எதிர்த்துப் போர் புரிந்த ஆங்கிலேயத் தளபதி மேஜர் வெல்ஷின் குறிப்புகள் இவர் பேச்சுத் திறன் குன்றியவர் என்பதால் இவ்வாறு அழைக்கப்பட்டார் எனத் தெரிவிக்கின்றன.

கட்ட பொம்மன் வரி செலுத்த மறுத்தல்:

வீரபாண்டிய கட்டபொம்மன் 1790 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் நாள் பாஞ்சாலங்குறிச்சியில் பாளையக்காரராகப் பதவி ஏற்றார். அப்பொழுது திருநெல்வேலி மாகாணத்தில் சுமார் 33 பாளையங்கள் இருந்தது. இந்தப் பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களை ஆரம்பத்திலேயே எதிர்த்துப் போராடி, முதல் இந்தியச் சுதந்திரப் போரை தொடங்கினர் என்கிறது இந்திய விடுதலைப் போர் வரலாறு!

கட்டபொம்மன் தமது செயல்பாடுகளுக்கும், நடவடிக்கைகளுக்கும், தம்பி ஊமைத்துரை மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். ஊமைத்துரையும் தமது அண்ணன் கட்டபொம்மனுக்கு அனைத்து வழிகளிலும் உதவி செய்தும், அவருக்குப் பாதுகாவல் அரணுமாக செயல்பட்டார்.

அக்காலத்தில் ஆற்காடு நவாப் முகமது அலி ஆங்கிலேயரிடம் கடன்பட்டிருந்ததால் பாளையக்காரர்களிடம் வசூல் செய்யும் அதிகாரத்தை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தார். இந்த நோக்கத்திற்காக 1792 ஆம் ஆண்டு கர்நாடக உடன்படிக்கை கையெழுத்தானது. அதன்படி திருநெல்வேலிப் பாளையக்காரர்கள் ஆங்கிலேயரின் கீழ் படிப்படியாகக் கொண்டு வரப்பட்டனர். ஆங்கிலேயர்கள் புதிய கலெக்டர்களை நியமித்துப் பாளையக்காரர்களிடமிருந்து வரி வசூல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். வில்லியம் சார்லின்ஸ் ஜாக்ஸன் என்பவர் 1797 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் நாள் பாளையக்காரப் பகுதிகளுக்குக் கலெக்டராகப் பொறுப்பேற்றார். இவரது காலக்கட்டத்தில் திருநெல்வேலிப் பாளையக்காரர்கள் புரட்சி, கட்டபொம்மன் மற்றும் ஊமைத்துரை தலைமையில் வெடித்தது. ஜாக்ஸன் துரை கட்டபொம்மனிடமிருந்து ஆங்கிலேய ஆட்சிக்கு மிகப்பெரும் ஆபத்து நேரிடும் என நினைத்தார். சுட்டபொம்மன் ஒழுங்காக வரிப்பணம் கட்டாததை ஆங்கிலேய அரசுக்குத் தெரிவித்தார். ஜாக்ஸன் துரை கட்டபொம்மனுக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். மேலும், கட்டபொம்மன் மீது ஆங்கிலேய அரசுக்கு வெறுப்பு ஏற்படும் வகையில் சென்னை அரசுக்கு எழுதினார். அதனால், பகை சுடர் விட்டு எரிந்தது.

இச்சூழலில், கட்டபொம்மனின் ஆலோசகரான சிவசுப்பிரமணிய பிள்ளை ஊமைத்துரையின் தலைமையில் ஆங்கிலேய அரசுக்குச் சொந்தமான கரிசல் கோட்டாரம் என்ற இடத்தில் இருந்த நெற்களஞ்சியத்தைச் சூறையாடினார். இந்த நெற்களஞ்சியச் சூறையாடல் , ஜாக்ஸன் துரைக்கும் கட்ட பொம்மனுக்கும் இடையே உள்ள பகையை மேலும் வளர்த்தது. கட்ட பொம்மனைக் கைது செய்யும் உள்நோக்கத்துடன், ஜாக்ஸன் துரை வரிப்பணத்துடன் இராமநாதபுரம் வருமாறு கட்டளையிட்டான். இராமலிங்க விலாசம் என்ற இடத்தில் இருந்த கலெக்டர் அறைக்குக் கட்டபொம்மனை மட்டும் தனியாக வருமாறு கலெக்டர் கட்டளையிட்டான்.

அண்ணனை விடுவித்த தம்பி:

தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்ற பழமொழிக்கு இலக்கணமாக இருந்த ஊமைதுரை கட்டபொம்மனுக்கு பெரும் ஆபத்து ஏற்பட உள்ளதை உணர்ந்த ஊமைத்துரை பெரும் படையுடன் இராமலிங்க விலாசத்திற்குப் பின்னால் மறைந்து கொண்டார். ஊமைத்துரை எதிர்பார்த்தது போலவே கலெக்டர் ஜாக்ஸன் ( தமிழ் திரைப்படத்தில் வரும் கதாபாத்திரம் ) கட்டபொம்மனைக் கைது செய்யக் கட்டளையிட்டான். உடனே, கட்டபொம்மன் ஊமைத்துரைக்குச் சைகை காட்டினார். உடன் ஊமைத்துரை கட்டபொம்மனுக்கு அருகில் நெருங்கி வந்து கட்டபொம்மனுடன் இராமலிங்க விலாசத்திலிருந்து தப்பிச் சென்றார். ஆனால் கட்டபொம்மனுக்கு மொழிபெயர்ப்புக்காகச் சென்ற சுப்பிரமணியபிள்ளை ஆங்கிலேயரின் பிடியில் சிக்கினார்.

பின்னர் கட்டபொம்மனும் அவருக்கு உதவிய பாளையக்காரர்களும் 17-10-1799 ஆம் நாள் தூக்கிலிடப்பட்டனர். ஊமைத்துரையும் , பாளையக்காரர்களும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஊமத்துறை சிறையில் இருந்து தப்பித்தல்

ஊமைத்துரை சிறையிலிருந்து கொண்டே சிவகங்கையின் மருது பாண்டியர்களுடனும், விருப்பாச்சி பாளையத்தின் கோபால நாயக்கருடனும் இரகசியமாக கடிதத் தொடர்பு கொண்டார். ஊமைத்துரையைச் சிறையிலிருந்து விடுவிக்கத் திட்டம் உருவாகியது.

புரட்சியாளர்கள் இருநூறு பேர் 01.01.1801 ஆம் நாள், திருச்செந்தூர் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் போல் உடையணிந்து , காவடிகளைத் தூக்கிக் கொண்டு, இடுப்பில் மஞ்சள் கச்சையணிந்து மந்திரங்களை வாயில் முணுமுணுத்துத் திருநீறைப் பொதுமக்களுக்கு வழங்கிக் கொண்டே பாளையங்கோட்டை சிறைச்சாலைக்கு அருகில் வந்தனர். பின்னர், அவர்கள் தங்களது வேடங்களைக் கலைத்துவிட்டு , விறகுகள் மற்றும் வாழை இலைகள் , பழங்கள் ஆகியவைகளை விற்கும் வியாபாரிகளாகத் தங்களை மாற்றிக் கொண்டனர். இத்தருணத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வீரர்கள் சிறைக் காப்பாளர்களிடம் இறந்தவர்களுக்கு ஈமக்கிரியை செய்ய இப்பொருள்களை வாங்க அனுமதி பெற்றனர். உடனே தெரு வியாபாரிகள் கோட்டைக்குள் நுழைந்து சிறைவளாகத்திற்குச் சென்று ஊமைத்துரையும் அவரது தோழர்களும் அடைக்கப்பட்டிருந்த இடத்தையும் கண்டறிந்தனர்.

சிறையில் பெரியம்மை நோய் பரவியிருந்ததால் சிறைக்கைதிகள் கைவிலங்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தனர். ஊமைத்துரையிடமிருந்து சைகை கிடைத்தவுடன் விடுதலை வீரர்கள், விறகுக் கட்டைகளுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கிகள், ஈட்டிகள், வாள்கள் மற்றும் இதர ஆயுதங்களையும் வெளியே எடுத்து சிறைக்கதவுகளை உடைத்தெறிந்தனர். சிறைக்காப்பாளர்கள் தாக்கப்பட்டு வெளியே தூக்கியெறியப்பட்டனர். ஊமைத்துரை விடுவிக்கப்பட்டார். ஆங்கிலேயப் படையினர் தாக்கப்பட்டு சீர்குலைக்கப்பட்டனர். இந்த வீர நிகழ்ச்சி 02-02-1801 ஆம் நாள் நடை பெற்றது என்பது வரலாறு.

ஆங்கிலேயருக்கு எதிராக போரிடுதல் சிறையிலிருந்து தப்பிய ஊமைத்துரையும் அவரது தோழர்களும் பாஞ்சாலங்குறிச்சியை நோக்கி முன்னேறினார். ஊமைத்துரையின் படையினர் ஆங்கிலேயரின் கண்காணிப்பு இடங்களையும் , அவர்களது உணவுக் களங்சியங்களையும் சூறையாடினர். ஆங்கிலேயர் வசம் இருந்த பகுதிகளான ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம் , காடல்குடி, நாகலாபுரம், கோலார்பட்டி, தூத்துகுடி ஆகியன புரட்சியாளர்கள் வசம் வந்தன.

ஆங்கிலேய மேஜர் பானர்மென்னால் தரைமாக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை மறுபடியும் புதுப்பித்தனர். மக்களுக்கு போர்ப்பயிற்சி அளித்து ஆங்கிலேயருக்கு எதிரான போரை வலிமைப்படுத்தினர். ஆங்கிலேயரிடம் வீழ்ந்த பாளையங்களைக் கைப்பற்ற செயல்திட்டம் வகுத்தனர்.

பீதியடைந்த ஆங்கிலேய அரசாங்கம் ஊமைத்துரையை உயிருடன் பிடிக்க மேஜர் மெக்கலே என்பவன், ஆங்கிலேயப் படைப்பிரிவுகளை அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வரவைத்தான். கேப்டன் மார்டின், மேஜர் ஷெபர்டு, லெப்டினென்ட் வெல்லி ஆகியோர் மேஜர் மெக்காலேக்கு உதவி புரிய வந்தனர். மேஜர் ஷெபர்டு  03-02-1801 ஆம் நாள் சங்கரன்கோவிலிருந்து புறப்பட்டு வந்தான். ஆங்கிலேயப்படை 08-02-1801 அன்று குலசேகர நல்லூர் என்னும் இடத்தை அடைந்தது. ஆனால், புரட்சியாளர்கள் குலசேகர நல்லூரில் ஆங்கிலேயப் படையைத் தாக்கியதால், அப்படைகள், மூன்று பிரிவுகளாகப் பிரிந்து, மூன்று திசைகளில் சிதறி ஓடியது. ஊமைத்துரையின் படையில் நாற்பது புரட்சியாளர்கள் வீரமரணமடைந்தனர். ஆங்கிலேயப் படைவீரர்கள் ஆறுபேர் மாண்டனர்.

 பீரங்கியால் தகர்க்க முடியாத கோட்டை

ஆங்கிலேயர் பெரும்படையுடன் 09-02-1801 அன்று மறுபடியும் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை நோக்கி நெருங்கி வந்தனர். எளிதாக ஊமைத்துரையை தோற்கடித்து அழித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் வந்த அவர்கள் கோட்டையின் தோற்றத்தைக் கண்டு மனம் தளர்ந்தனர். காரணம் கோட்டையை ஊமைத்துறை அவர்கள் பீரங்கியால் தகர்க்க முடியாத அளவிற்கு புதிய தொழில்நுட்பத்தை புகுத்தின்னார். அதாவது கற்கள் மற்றும் வைக்கோல் மூலமாக அந்த கோட்டையை புதுப்பித்தார். பீரங்கியால் தாக்கும் பொழுது. பீரங்கி குண்டுகள் வைகோலி சிக்கிக் கொண்டு சுவற்றிலே இருந்தன இதனால் ஆங்கிலேயர்களால் கோட்டையை தகர்க்க முடியவில்லை. மேலும் கோட்டையில் காணப்பட்ட பத்தாயிரக்கணக்கான வீரர்களைக் கண்டு தங்களது படை தோல்வியடைந்துவிடும் என்பதால் மேஜர் மெக்காலே தமது படையுடன் பின்வாங்கி 10-02-1801 அன்று பாளையங்கோட்டை சென்றடைந்தான்.

 ஊமத்துறையின் கருணை 

ஊமைத்துரை வீரபராக்கிரமபாண்டியன் என்பவரின் தலைமையில் புரட்சியாளர்கள் படையை, இழந்த பாளையங்களை மீட்கும் எண்ணத்தில் தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்தார். அங்கு ஆங்கிலேய அதிகாரியும், படைவீரர்களும் பிடிபட்டனர். பக்காட் என்ற ஆங்கிலேயப் பொறுப்பு அதிகாரி சிறைபிடிக்கப்பட்டான். ஆனால், அந்த அதிகாரியின் மனைவியான மெர்வின்னோலா என்பவரின் வேண்டுகோளுக்கிணங்க மனிதாபிமானத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டான்.

ஆங்கிலேயருக்கு எதிரான இறுதிப் போர்

ஊமைத்துரையை ஒழித்துக்கட்ட மீண்டும் 27-03-1801 அன்று , சுமார் 3000 படைவீரர்களுடன் மேஜர் மெக்காலே கயத்தாறு வந்தடைந்தான். பாஞ்சாலங்குறிச்சி செல்லும் வழியில் புரட்சியாளர்களால், ஆங்கிலேயப்படை தாக்கப்பட்டது. அதன் பின்னர் 31-03-1801 அன்று மெக்காலே பாஞ்சாலங்குறிச்சியை அடைந்து, நவீன ஆயூதங்களுடனும், பீரங்கிப்படையின் உதவியுடனும் கோட்டையைத் தாக்கினான். ஊமைத்துரை வீரமுடன் போராடி ஆங்கிலேயப் படையை விரட்டியடித்தார். இறுதி முயற்சியாக மெக்காலே, புரட்சியாளர்கள் தப்பித்துச் செல்வதைத் தடுக்க கோட்டையை முற்றுகையிட ஆணையிட்டான். ஆனால் அவனது முயற்சி தோல்வியுற்றது.

ஆங்கிலேய அரசாங்கம் மெக்காலேயை பொறுப்பிலிருந்து விடுவித்து, லெப்டினெண்டு கர்னல் ஆக்னியூ என்பவனை ஆங்கிலேயப் படைத்தளபதியாக நியமித்தது. இவன் கனரகத் துப்பாக்கிகளை மலபார் பகுதிகளிலிருந்தும், திருச்சிராப்பள்ளியிலிருந்தும், திருநெல்வேலிக்கு வரவைத்தான். ஆக்னியூ 21-05-1981 அன்று பாஞ்சாலங்குறிச்சிக்குச் சென்றான். கோட்டையின் மீது தாக்குதலைத் தொடுத்தான். 24-05-1801 அன்று பாஞ்சாலங்குறிச்சி கோட்டை தகர்க்கப்பட்டுப் பிடிக்கப்பட்டது. ஆனால் , புரட்சியாளர்கள் நான்கு பக்கமும் சிதறித் தப்பிச் சென்றனர். இந்தப் போரில் 1050 புரட்சி வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஆங்கிலேயப் படைவீரர்கள் 600 பேர் புரட்சிப்படையினரால் கொல்லப்பட்டனர்.

ஆக்னியூ துரை 24-051981 அன்று ஆங்கிலேயப் படையினரை எட்டயபுரம் அனுப்பிப் புரட்சியாளர்களைக் கண்டுபிடிக்க ஆணையிட்டான். புரட்சியாளர்கள் ஆங்கிலேயப் படையினரை நேரில் மோதிப் போரிட்டனர். மறைந்திருந்து தாக்கும் போர் முறையிலும் (கொரில்லாப் போர் ) ஆங்கிலேயப் படையினருடன் போரிட்டனர். 25-05-1801 அன்று நடைபெற்ற போரில் பரட்சியாளர்கள் பலர் ஆங்கிலேயப் படையினரின் துப்பாக்கிக் குண்டுக்கு பலியாகி களத்தில் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டனர். இதனை அறிந்த கிராமப் பெண்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் புரட்சி வீரர்களைக் காப்பாற்ற ஒடிவந்தனர்.

காணப்படுகின்ற பிணக்குவியலில் ஒரு தாய் தமது மகன் சிவசம்பு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதைக் காண நேர்ந்தது. அந்த இளம் வீரன் தன் தாய் முத்தம்மாள் குரலைக் கேட்டுக் கண்ணைத் திறந்து, தனது அருகாமையில் மடிந்து கிடந்த வீரர்களில் ஊமைத்துரை பெரும் காயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்டான். தமது தாயிடம் ஊமைத்துரையை உடனே காப்பாற்றுமாறும் அவர்தான் எனது தெய்வம் என்றும் , அவரைக் காப்பாற்றினால் ஆங்கிலேய ஆட்சியை வேரோடு அழிப்பார் என்றும் கூறினான். இதனைத் தாயிடம் கூறிவிட்டு, அந்த வீரமகன் உயிரைவிட்டான். தமது மகனின் இறுதி ஆசையை நிறைவேற்றும் எண்ணத்தில் அந்தத்தாய் இரத்த வெள்ளத்தில் காணப்பட்ட ஊமைத்துரையை அவளது கிராமத்துக்கு தூக்கிச் சென்றாள். ஊமைத்துரையின் காயங்களுக்கு மருந்திட்டு காப்பாற்றி வந்தாள். அப்பொழுது, ஆங்கிலேயப்படையினர் அக்கிராமத்தை முற்றுகையிட்டு ஊமைத்துரையை கண்டுபிடிக்க வீடு வீடாகச் சோதனை செய்தனர். ஆனால், அந்தத் தாய் சில பெண்களை அழைத்து ஊமைத்துரையை ஒரு வெள்ளைத் துணியால் மூடித் தன் மகன் பெரியம்மை நோயால் இறந்து விட்டதாகப் படைவீரர்களிடம் கூறினாள். ஆங்கிலேயப் படை வீரர்களை நம்பவைக்க அங்கே கூடிய பெண்கள் தங்களது மார்பில் அடித்துக் கொண்டு அழுது புலம்பினர். ஆங்கிலேயப் படையினர் தங்களுக்கும் பெரியம்மை நோய் வந்துவிடக்கூடாது என்று திரும்பிப் பார்க்காமல் தலைதெறிக்க ஓடினர்.

ஊமைத்துரை காயம் ஆறியவுடன் கமுதி சென்றடைந்தார். மருது பாண்டியர்கள் ஊமைத்துரையை வரவேற்றனர். சிறுவயலில் தங்க வைத்து சிறப்பித்தனர். மக்கள் நன்கொடைகளை அள்ளித் தந்தனர்.

ஆக்னியூ துரை, ஊமைத்துரையை உடனே தன்னிடம் ஒப்படைக்கும்படி மருது பாண்டியர்களை கேட்டுக்கொண்டான். ஆனால், ஊமைத்துரையை ஆங்கிலேயரிடம் ஒப்படைக்க முடியாது என மறுத்தனர். ஆங்கிலேயப் படையுடன் போரிட மருது பாண்டியர்களின் இருபதாயிரம் பேர் கொண்ட படை தயரானது. ஆக்னியூ துரையும் ஆங்கிலேயப் படைகளை பல பகுதிகளிலிருந்தும் வரைவைத்தான்.

ஊமைத்துரை சிவகங்கையில் புரட்சிப் படைக்குத் தலைமை ஏற்றார். மதுரையை ஆங்கிலேயரிடமிருந்து மீட்க முயற்சி செய்து தோல்வியடைந்தார். பின்னர் விருப்பாட்சி என்ற இடத்தில் பாளையத்தில் 4000 பொதுமக்களைத் திரட்டி ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் பெரும் தடைகளை ஏற்படுத்தினார். மேஜர் ஜோன்ஸ் ஊமைத்துரையைச் சமாளிக்க முடியாமல் திரும்பினான். ஆனால், 14-10-1801 அன்று நடைபெற்ற போரில் ஊமைத்துரையை, கர்னல் ஜேம்ஸ் இன்னஷூம், மேஜர் பரோஷூம் தோற்கடித்தனர். பின்னர் வத்தலகுண்டில் இருபடைகளுக்கும் பெரும் போர் நடைபெற்றது. மூன்று நாட்கள் தீவிரமாக புரட்சியாளர்கள் போர் புரிந்தனர். பல புரட்சியாளர்கள் வீரமரணமடைந்தனர். இறுதியில் ஊமைத்துரையும், 65 புரட்சியாளர்களும் ஆங்கிலேயப் படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.

ஊமைத்துரையும், அவரது இளைய சகோதரர் செவத்தையாவும் 16-11-1801 ஆம் நாள் பாஞ்சாலங்குறிச்சியில் கொடூரமான முறையில் தூக்கிலிடப்பட்டனர். தமது விடுதலை தாகத்திற்காக ஊமைத்துரை தூக்குமரத்தை தழுவினார்.! அவரது தியாகம் இம்மண்ணுள்ளவரை போற்றப்படும்!


Share it if you like it