பூங்கா தொழிலாளர்களை வாட்டி வதைக்கும் தி.மு.க. அரசு: பெண் ஊழியர் உயிரிழப்பால் பெரும் பரபரப்பு!

பூங்கா தொழிலாளர்களை வாட்டி வதைக்கும் தி.மு.க. அரசு: பெண் ஊழியர் உயிரிழப்பால் பெரும் பரபரப்பு!

Share it if you like it

ஊட்டி பூங்கா ஊழியர்கள் நடத்திவரும் போராட்டத்தில், உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டிருந்த பெண் தொழிலாளி உயிரிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான பூங்கா மற்றும் பண்ணைகளில் 900 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்களது சிறப்பு காலமுறை ஊதியத்தை, காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த சில மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கடந்த 23-ம் தேதி முதல் பணிகளை புறக்கணித்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஊழியர்களிடம் நடத்திய 3 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தோட்டக்கலை துறை இணை இயக்குனர் கருப்புசாமி, உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால் 10-ம் தேதி முதல் உண்ணாவிரதம் மற்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தின்போது 3 பெண்கள் திடீரென மயக்கமடைந்தனர். இதைத் தொடர்ந்து, 3 பேரும் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கவலைக்கிடமாக இருந்த 2 பெண்களை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேரத்தனர்.

இவர்களில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பணியாற்றிய அங்கம்மாள் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இவருக்கு தாவரவியல் பூங்காவில் அஞ்சலி செலுத்திவிட்டு, 26-வது நாளாக நேற்றும் ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போதும், இரு பெண்கள் உட்பட 3 பேர் மயக்கமடைந்தனர். இவர்களை மீட்டு ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி போராட்டக் குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பூங்கா ஊழியர்களின் தினக்கூலியை, 500 ரூபாயாக உயர்த்தி தர உறுதி அளிக்கப்பட்டது. அதேபோல, போராட்டம் நடந்த நாட்களுக்கு சம்பளம், காலமுறை ஊதியம் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உயிரிழந்த பூங்கா ஊழியரின் வாரிசுக்கு வேலை அளிக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.


Share it if you like it