எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு “இந்தியா” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். பயங்கரவாத அமைப்பான இந்தியன் முஜாகிதீன் என்கிற பெயரிலும் இந்தியா இருக்கிறது. அதேபோல, கிழக்கிந்தியா கம்பெனி என்கிற பெயரிலும் இந்தியா இருக்கிறது என்று பிரதமர் மோடி கிண்டல் செய்திருக்கிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. ஆனால், மணிப்பூர் பிரச்னை காரணமாக இரு அவைகளும் தொடர்ந்து முடங்கி வருகின்றன. 4-வது நாளான இன்றும் இரு அவைகளும் முடங்கியது. இதனிடையே, இன்று காலை பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா மற்றும் பா.ஜ.க. எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “எதிர்க்கட்சிகள் திசை தெரியாமல் சென்று கொண்டிருக்கின்றன. அவர்கள் நீண்டகாலத்திற்கு எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டனர். அதுதான் அவர்களின் தலையெழுத்தாகவும் உள்ளது. இதுபோன்ற ஒரு குறிக்கோள் அற்ற எதிர்க்கட்சிகளை பார்த்ததே இல்லை. அவர்கள் கூட்டணிக்கு “இந்தியா” என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
பயங்கரவாத அமைப்பான இந்தியன் முஜாகிதீன் என்கிற பெயரிலும்கூட இந்தியா இருக்கிறது. அதேபோல, கிழக்கிந்தியா கம்பெனி என்கிற பெயரிலும் “இந்தியா” என்கிற பெயர் இருக்கிறது. மக்களை தவறாக வழிநடத்துவதற்கு நாட்டின் பெயரை பயன்படுத்தினால் மட்டும் போதாது. குறிக்கோளற்ற எதிர்க்கட்சிகளை பொருட்படுத்தவே தேவையில்லை. அதேசமயம், நாம் இன்னும் ஒரு ஆண்டில் நடப்பு ஆட்சியை பூர்த்தி செய்ய உள்ளோம். எனவே, மீண்டும் நாம் புத்துணர்வுடன் எழுச்சியுடன் செயல்பட்டு அடுத்த தேர்தலை சந்திக்க நம்மை கட்டமைக்க வேண்டும். 2024 தேர்தலில் மக்கள் ஆதரவுடன் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரும். நமது அடுத்த ஆட்சி காலத்தில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும்” என்றார்.