சாமானியருக்கும் விருதுகள் வழங்கி கவுரவித்த மத்திய அரசு

சாமானியருக்கும் விருதுகள் வழங்கி கவுரவித்த மத்திய அரசு

Share it if you like it

“அங்கீகாரம்” என்பது அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்று. அது எந்த அளவில் இருந்தாலும், அதற்கென மரியாதை உள்ளது. தன் நலமின்றி ஒருவர் சேவைகள் செய்தாலும், விருதுகள் வழங்குவதன் மூலமாகவே, சமுதாயத்தில் அவர், அனைவராலும் அறியப் படுகின்றார்.

விளையாட்டு துறையைச் சேர்ந்தவர் எனில், “அர்ஜுனா விருது”, “துரோணாச்சாரியார் விருது”, “தியான் சந்த் கேல் ரத்னா விருது”, சினிமா துறையைச் சேர்ந்தவர் எனில், திரைத் துறைக்கான “மாநில விருது”, “தேசிய விருது” என ஒவ்வொரு துறைக்கும், ஒவ்வொரு விதத்தில், விருதுகள் வழங்கி, அவர்கள் சமுதாயத்தில் கவுரவிக்கப் படுகின்றார்கள்.

“ராஜீவ் காந்தி கேல் ரத்னா” விருது என இருந்ததை, தற்போதைய மத்திய அரசு, விளையாட்டு துறையில் உலகிலேயே சிறந்த ஹாக்கி வீரராக விளங்கிய, “தியான் சந்த்” பெயரில், அவருக்கு மரியாதை செய்யும் விதமாக, “தியான் சந்த் கேல் ரத்னா விருது” என இந்திய மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்து, அதன் மூலம் இந்திய ஹாக்கி அணி வீரரான, தியான் சந்திற்கு பெருமை சேர்த்து உள்ளது.

பல வகையான விருதுகள்:

இந்தியாவில் வழங்கப் படும் மிக உயர்ந்த விருது, “பாரத ரத்னா” விருது. 1954 ஆம் ஆண்டு முதல், இந்த விருது வழங்கப் பட்டு வருகின்றது. வருடத்திற்கு மூன்று பேருக்கு மட்டுமே, பாரத ரத்னா விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்பது விதி. இதுவரை 45 பேர் மட்டுமே, பாரத ரத்னா விருது வாங்கி உள்ளனர். பாரத ரத்னா விருது, பிரதமரால் பரிசீலிக்கப்பட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப் படும்.  அவர் ஒப்புதல் கிடைத்தவுடன், விருது பெற்றவரின் பெயர், அனைவரும் அறியும் வகையில் அறிவிக்கப் படும்.

அதற்கு அடுத்த நிலையில், உயர்ந்த விருது “பத்ம விபூஷன்” விருதும், “பத்ம பூஷன்” விருதும், “பத்மஸ்ரீ” விருதும் ஆகும். ஒரு குழு அமைக்கப் பட்டு, அந்தக் குழுவே, யாருக்கு விருது வழங்கப் பட வேண்டும் என்பதனை முடிவு செய்யும். தற்போது, யாரும் யாரையும் பரிசீலிக்கலாம், மேலும் தங்களின் சாதனைகளை தாங்களே பதிவிட்டு, தன்னுடைய பெயரையும் அவர்கள், அரசு தெரிவித்து உள்ள இணையதள முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

பத்ம விபூஷன் விருது:

இந்திய அரசால் வழங்கப்படும் இரண்டாவது உயர்ந்த விருது “பத்ம  விபூஷன்” ஆகும். 1954 ஆம் ஆண்டு முதல், இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றது. பதக்கத்துடன், பாராட்டு இதழும் அளிக்கப் படும் இந்த விருது, எந்த ஒரு துறையிலும் சிறந்தவராக விளங்கும் நபர்களுக்கு, வழங்கப் பட்டு வருகின்றது.

பத்ம பூஷன் விருது:

இந்திய அரசால் வழங்கப்படும் மூன்றாவது உயர்ந்த விருது, “பத்ம பூஷன்” விருது ஆகும். எந்த ஒரு துறையிலும் சாதித்து, சிறந்து விளங்கும் நபர்களுக்கு, இந்த விருது வழங்கப் படுகின்றது.

பத்மஸ்ரீ விருது:

இந்திய அரசால் வழங்கப்படும் நான்காவது உயரிய விருது “பத்மஸ்ரீ” ஆகும். கலை, கல்வி, தொழில், இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சமூக சேவை மற்றும் பொது வாழ்வில் சிறப்பாக பங்களித்த குடிமக்களுக்கு வழங்கப்படும் இந்த விருதானது, பதக்கம் மற்றும் பாராட்டு இதழும் வழங்கப் படும்.

வெளிப்படைத் தன்மையான அனுகுமுறை:

தற்போதைய மத்திய அரசு, வெளிப்படைத் தன்மையுடன், இத்தகைய உயரிய விருதினை வழங்கி வருவதை, அனைவரும் மனதார பாராட்டி வருகின்றனர். சிலருக்கு மட்டுமே விருது வழங்கப்படும் என்று இருந்த நிலையை மாற்றி, குறிப்பாக ஆளும் கட்சியினருக்கு அனுகூலமாக இருப்பவர்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்பட்டு இருந்த நடைமுறையை மாற்றி, உண்மையிலேயே சரியான திறமையான நபர்களைத் தேடி கண்டுபிடித்து, இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளை, மத்திய அரசு வழங்கி வரும் நடைமுறையினை, அனைவரும் கட்சி சார்பற்று, பாரபட்சமின்றி பாராட்டி வருகின்றனர்.

2021 பத்ம விருதுகள்:

2021 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள், ஜனவரி மாதம் அறிவிக்கப் பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் உட்பட ஏழு பேருக்கு “பத்ம விபூஷன்” விருது அறிவிக்கப் பட்டது. 10 பேருக்கு “பத்ம பூஷன்” விருது அறிவிக்கப் பட்டது. பிரபல பட்டிமன்ற நடுவரான சாலமன் பாப்பையா உட்பட 102 பேருக்கு, “பத்மஸ்ரீ” விருதுகள் அறிவிக்கப் பட்டன.

29 பெண்கள், 1 திருநங்கை மற்றும் மறைந்த 16 பேர் உட்பட, பல்வேறு துறையில் சாதனை புரிந்த, மொத்தம் 119 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப் பட்டன.

பத்ம விபூஷன் விருது பெற்றவர்கள்:

1. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே

2. மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்

3. பெல்லே மொனப்பா ஹெக்டே

4. மறைந்த நரிந்தர் சிங் கபானி

5. மவுலானா வஹிதுதீன் கான்

6. பி.பி. பால்

7. சுதர்ஷன் சாஹூ

பத்ம பூஷன் விருது பெற்றவர்கள்:

1. கிருஷணன் நாயர் சாந்த குமாரி சித்ரா

2. மறைந்த அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாய்

3. சந்திரசேகர் கம்பரா

4. முன்னாள் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன்

5. நிபேந்த்ரா மிஸ்ரா

6. மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான்

7. மறைந்த குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்

8. மறைந்த கல்பே சாதிக்

9. ரஜ்னிகாந்த் தேவிதாஸ் ஷ்ரோஃப்

10. தர்லோசான் சிங்

பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள்:

1. ஸ்ரீதர் வேம்பு

2 சாலமன் பாப்பையா

3. மறைந்த திருவேங்கடம் வீரராகவன்

4. மறைந்த பி. சுப்ரமணியன்

5. மறைந்த கே.சி. சிவசங்கர்

6. பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத்

7. பாப்பம்மாள்

இவர்களையும் சேர்த்து மொத்தம், 102 பேர் பத்ம ஸ்ரீ விருதுக்கு பெற்றார்கள். மொத்தத்தில், பல்வேறு துறையில் சாதனை புரிந்த, 119 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப் பட்டன.

சாமானியருக்கும் பத்ம விருதுகள்:

மராச்சி சுப்புராமன்:

லட்சக்கணக்கான மீனவ குடும்பங்களுக்கு, குறைந்த செலவில் கழிப்பறை வசதிகளை நிறுவி, அதன் மூலமாக சுகாதாரத்தை நிலை நாட்டிய, திருச்சியை சேர்ந்த சமூக சேவகர்.

திருவேங்கடம் வீரராகவன்:

வடசென்னையில் வெறும் ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் புரிந்து, ஏழை எளிய மக்களுக்கு தொண்டாற்றி, மறைந்த மருத்துவர்.

ஹரேகலா ஹாஜப்பா:

ஆரஞ்சு பழம் விற்று, அதன் மூலம் கிடைக்கும் தினசரி வருவாயை வருடக் கணக்கில் சேர்த்து வைத்து, அந்த பணத்தைக் கொண்டு, கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே உள்ள “ஹரேகலா” கிராமத்தில், இலவசமாக ஓரு பள்ளிக்கூடம் தொடங்கினார். கல்வி அறிவு இல்லாத மக்களுக்கு, கல்வியறிவு ஏற்படுத்த பெரிதும் முயன்றார். ஏழைக் குழந்தைகளுக்கு, கல்வியறிவு பெற்று தருவதில், வெற்றியும் பெற்று உள்ளார்.

துளசி கவுடா:

காடுகளின் கலைக் களஞ்சியம்” (Forest Encyclopaedia), என பெருமையுடன் அழைக்கப் படுபவர், தனது 12 வயதில் ஆரம்பித்த செடிகள் நடும் பணியானது, கடந்த 60 வருடங்களாக தொடர்ந்து செய்து வருகின்றார். தற்போது, தனது 72 வயதிலும், தான் நட்ட, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களைத் தொடர்ந்து பராமரித்து வருகின்றார்.

முகம்மது ஷெரீஃப்:

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த சமூக சேவகரான, முகம்மது ஷெரீஃப் அவர்கள், இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, கேட்பாரற்ற இறந்த மனித சடலங்களை, அவர்களின் மதச் சம்பிரதாயப்படி, இறுதி சடங்குகள் செய்து வைத்து உள்ளார். கடுமையான பொருளாதார நெருக்கடி இருந்த போதிலும், தொடர்ந்து இந்தப் பணியை செய்து வருகின்றார்.

மஞ்சம்மா ஜோகதி:

வாழ்க்கை உருமாறி, திருநங்கை ஆனதால், கடுமையான பசி, வறுமையை எதிர் கொண்ட போதிலும், மஞ்சம்மா அவர்கள், “ஜோகதி” நடனக் குழுவில், நடனமாடும் பயிற்சி பெற்று, நடனக் கலைஞர் ஆனார். மக்கள் மத்தியில், அந்த நடனத்தை பிரபலமாக்கி, தனக்கென அங்கீகாரம் பெற்று, பத்ம விருது பெற்ற முதல் திருநங்கை ஆனார்.

இது போல, இன்னும் நிறைய சாமானியர்கள், மத்திய அரசால் அங்கீகரிக்கப் பட்டு, அவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு உள்ளது.

பத்ம விருது என்றாலே, வசதி படைத்தவர்களுக்கும், யாரேனும் பெரிய பொறுப்பில் உள்ளவர்களின் சிபாரிசு இருந்தால் தான் கிடைக்கும் என்ற நிலையை மாற்றி, தற்போது யாரும் அறிந்திராத, தெரிந்திராத, ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கும் பத்ம விருது கிடைக்கிறது.

இதன் மூலமாக, மத்திய அரசு, பத்ம விருதிற்கு, மேலும் பெருமை சேர்த்து உள்ளதாக, பொது மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • .ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

Share it if you like it