1,200 ஆண்டுகள் பழமையான ஹிந்து கோயில் மீட்பு!

1,200 ஆண்டுகள் பழமையான ஹிந்து கோயில் மீட்பு!

Share it if you like it

பாகிஸ்தானில் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹிந்து கோயில், நீண்ட சட்டப் போராட்டத்துக்கு பிறகு கிறிஸ்தவ குடும்பத்தினரிடம் இருந்து மீட்கப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லாகூரில் அனார்கலி பஜார் என்கிற இடத்தில் வால்மீகி கோயில் இருக்கிறது. இக்கோயில் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 1992-ம் ஆண்டு இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, லாகூரில் இருந்த இந்த வால்மீகி கோயிலும், கிருஷ்ணன் கோயிலும் இடித்து சேதப்படுத்தப்பட்டது. வால்மீகி, கிருஷ்ணர் சிலைகளும் நொறுக்கப்பட்டன. சமையல் பாத்திரங்கள், பொருட்கள், நகைகள், சூறையாடப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டன. கோயிலுக்கும் தீ வைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் கோயிலுக்கு அருகே இருந்த பல கடைகளும் எரிந்து சாம்பலாகின.

இந்த சூழலில், இக்கோவிலை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ குடும்பம் ஒன்று ஆக்கிரமித்தது. இவர்கள் ஹிந்து மதத்துக்கு மாறிவிட்டதாகக் கூறி இக்கோயில் சொத்தை அனுபவித்து வந்தனர். மேலும், கோயில் வழிபாடு நடத்த வேறு யாரையும் அனுமதிக்கவில்லை. இதையறிந்த, பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்களை பராமரிப்பதற்காக தன்னாட்சி அதிகாரம் உடைய சொத்து அறக்கட்டளை வாரியத்தைச் சேர்ந்தவர்கள், இக்கோயிலை மீட்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால், கோயிலை ஆக்கிரமித்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

விசாரணையின்போது, அந்த கிறிஸ்தவக் குடும்பத்தினர், தற்போது நாங்கள் ஹிந்துக்களாக மதம் மாறிவிட்டோம். அதோடு, கடந்த 20 ஆண்டுகளாக கோயிலை நாங்கள்தான் நிர்வகித்து வருகிறோம் என்று கூறினர். இது தொடர்பாக விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒரு நபர் கமிஷனை நியமித்து விசாரிக்க உத்தரவிட்டது. இந்த விசாரணையின் முடிவில் கோயில் அரசுக்கு உரியது என்பதோடு, கோயிலை புனரமைப்பது அவசியம் என்றும் பரிந்துரை செய்தது. இதைத் தொடர்ந்து, நீண்ட சட்ட போராட்டத்துக்கு பிறகு கிறிஸ்தவ குடும்பத்தினரிடம் இருந்து வால்மீகி கோயில் மீட்கப்பட்டு, ஹிந்துக்கள் வழிபாடு செய்ய மீண்டும் திறக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து மீட்பு சொத்துகள் அறக்கட்டளை வாரியத்தின் செய்தித்தொடர்பாளர் அமிர் ஹஸ்மி கூறுகையில், “வால்மீகி கோயிலை ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தினர் கடந்த 20 ஆண்டுகளாக ஆக்கிரமித்து வைத்திருந்தனர். ஆனால், 2010 – 11-ம் ஆண்டுதான் கோயிலுக்கு உரிமையாளர்கள் என்று பதிவு செய்தனர். அந்த கிறிஸ்தவக் குடும்பத்தினரின் வாதங்களை நீதிமன்றம் ஏற்கவில்லை. ஆகவே, அரசிடமே கோயிலை ஒப்படைக்க உத்தரவிட்டது. இதையடுத்து, அந்த கிறிஸ்தவ குடும்பத்தினரிடம் இருந்து கடந்த மாதம் கோயிலை மீட்டது அரசு. இந்த வால்மீகி கோயில் ஹிந்துக்களுக்கு மட்டுமே உரியது. இக்கோயில் விரைவில் புனரமைக்கப்படும். இன்று இக்கோயிலில், ஹிந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவத் தலைவர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கூடி பூஜைகள் செய்தனர். ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்ட பிறகு முதல் முறையாக லாங்கர் உணவு வழங்கப்பட்டது” என்றார்.


Share it if you like it