நாம் எவ்வளவோ கண்டித்தாலும், தண்டித்தாலும் பாகிஸ்தான் திருந்துவதாக இல்லை. தொடர்ந்து பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வருகிறது என்று இந்திய வெளியுறவுத்துறை ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து நமது வெளியுறவுத் துறையின் 2022-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில், “நமது மற்ற அண்டை நாடுகளை போலவே, பாகிஸ்தானுடனும் இயல்பான உறவு இருக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. ஆனால், பாகிஸ்தான் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதந்தை ஊக்குவித்து வருகிறது. நமது நாட்டுக்கு எதிராக தொடர்ந்து வன்முறையில் ஈடுபட பயங்கரவாதிகளை தூண்டி விட்டு வருகிறது. எல்லையை தாண்டுவது, ஆயுதங்களை கடத்துவது, தாக்குதல் நடத்துவது போன்றவற்றில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து ஆதாரங்களுடன் தகவல்களை பகிர்ந்து வருகிறோம்.
மும்பையில் 2008-ல் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டோர் மீது எந்தவொரு நடவடிக்கையும் பாகிஸ்தான் அரசு எடுக்கவில்லை. அதேசமயம், தனது நாட்டில் உள்ள அரசியல் மற்றும் பொருளாதார பிரச்னைகளை திசை திருப்புவதற்காக, நமது நாடு குறித்து பொய்ப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் என்பது நம் நாட்டின் ஒரு பகுதி. ஆகவே, எங்களுடைய உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று பல சந்தர்ப்பங்களில் பல்வேறு இடங்களில் கூறியிருக்கிறோம். ஆனாலும், ஜம்மு காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் தொடர்ந்து பேசி வருகிறது.
பாகிஸ்தானுடன் இயல்பான உறவு வைத்திருக்கவே விரும்புகிறோம். இதற்கு பயங்கரவாதம் இல்லாத, வன்முறை இல்லாத சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறோம். இதை உருவாக்க வேண்டிய பொறுப்பு பாகிஸ்தானிடமே உள்ளது. அதேபோல, மற்றொரு அண்டை நாடான சீனாவுடனான நம்முடைய உறவும் சிக்கலானதாகவே உள்ளது. 2020-ல் கிழக்கு லடாக்கில் எல்லையை மாற்றியமைக்கும் தன்னிச்சையான முயற்சியில் சீனா இறங்கியது. இதையடுத்து, எல்லையில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டுள்ளன. படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பாக, துாதரக உறவு வாயிலாகவும், ராணுவம் வாயிலாகவும் தொடர்ந்து பேசி வருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.