அதிர்வை தாங்கும் திறன் எனது அரசுக்கு இல்லை. இதனால், பாகிஸ்தானில் நினைத்த மாற்றத்தைக் கொண்டுவர முடியவில்லை என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தனது தோல்வியை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
பாகிஸ்தானில் அரங்கேறிவரும் தீவிரவாத செயல்கள், அந்நாட்டுக்கும் அண்டை நாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றன. இந்த சூழலில், இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி 2018-ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தது. இம்ரான்கான் பிரதமராக இருந்து வருகிறார். இவரது அரசு, ஊழல் மற்றும் அதிகாரத்துவ பிரச்னைகளால் சிதைக்கப்பட்ட அமைப்புக்கான மாற்றாக கருதப்பட்டது. ஆனால், இம்ரான்கான் ஆட்சிக்கு வந்தது முதலே அந்நாடு பொருளாதார ரீதியில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.
எனவே, நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இம்ரான்கான் அரசு எந்த நடவடிக்கைகளையும், முயற்சிகளையும் எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அற்கேற்றார்போல், உயர்ந்து வரும் எரிவாயு விலை மற்றும் மின்சாரக் கட்டணங்கள் இம்ரான்கான் அரசின் மீது அழுத்தத்தை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்தான், அளித்த வாக்குறுதிப்படி நாட்டில் புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு வருவதில் தனது அரசு தோல்வியடைந்து விட்டதாக பிரதமர் இம்ரான்கான் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
அதாவது, பாகிஸ்தானில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இம்ரான்கான், “பதவியேற்ற புதிதில் புரட்சிகரமான மாற்றங்களை கொண்டுவர விரும்பினேன். ஆனால், நமது நிர்வாக அமைப்பிற்கு அதிர்வைத் தாங்கும் திறன் இல்லை. அரசாங்கம் மற்றும் அமைச்சகங்களாலும் எதிர்பார்த்த முடிவுகளை வழங்க முடியவில்லை. இதனால், நினைத்த மாற்றத்தை கொண்டுவர முடியவில்லை. குறிப்பாக, அரசுக்கும், நாட்டு நலனுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லாதது மிகப்பெரிய பிரச்னை” என்று தனது தோல்வியை ஒப்புக் கொண்டிருக்கிறார்.