காந்தஹார் விமானக் கடத்தலில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி ஒருவன், பாகிஸ்தானில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான்.
1999 டிசம்பர் 24-ம் தேதி நேபாள் நாட்டின் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து 179 பயணிகள், 11 ஊழியர்களுடன் ஏர் இண்டியா விமானம் டெல்லிக்கு புறப்பட்டது. ஆனால், இந்த விமானம் சிறிது நேரத்திலேயே பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் 5 பேரால் கடத்தப்பட்டது. காத்மாண்டு நகரிலிருந்து முதலில் அமிர்தசரஸுக்குச் சென்ற இந்த விமானம், பின்னர் பாகிஸ்தானின் லாகூர், அரபு நாடான துபாய் என பல நகரங்களுக்கு பயணித்து, கடைசியாக தாலிபான்களின் ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஆப்கானிஸ்தான் நாட்டின் காந்தஹார் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
இதன் பிறகு, இந்திய அரசால் கைது செய்யப்பட்டிருக்கும், 3 முக்கியத் தீவிரவாதிகளை விடுவித்தால்தான், விமானத்தையும், பயணிகளையும் விடுவிக்க முடியும் என்று தலிபான்கள் நிபந்தனை விதித்தனர். மேலும், இந்திய அரசை பணிய வைப்பதற்காக, 25 வயதான ரூபின் கத்யால் என்ற இளைஞரை தீவிரவாதிகள் கத்தியால் குத்தியும், துப்பாக்கியால் சுட்டும் கொன்றனர். எனவே, வேறு வழியில்லாமல் 3 தீவிரவாதிகளையும் விடுவித்தது வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசு.
இந்த சம்பவத்தின்போது, ரூபினை சுட்டுக்கொன்ற கொடூர செயலை அரங்கேற்றிய தீவிரவாதிதான் மிஸ்திரி ஸஹூர் இப்ராகிம். இவன், பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் வசித்து வந்தான். இவன்தான் கடந்த மார்ச் 1-ம் தேதி அக்தர் காலனி பகுதியில் சென்றபோது, பைக்கில் வந்த இரு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தலையில் சுடப்பட்டிருக்கிறான். இதில், பலத்த காயமடைந்த அவன், அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தான். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்து விட்டான்.
இவனது இறுதிச் சடங்கில் ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத இயக்கத்தின் நிறுவனரான மசூத் அஸாரின் தம்பியும், அந்த அமைப்பின் தற்போதைய தலைவருமான ராஃப் அஸ்கர் உள்ளிட்ட தீவிரவாதிகள் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம், தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடுதான் பாகிஸ்தான் என்பது மீண்டும் ஊர்ஜிதமாகி இருக்கிறது. ஏற்கெனவே, மும்பைத் தாக்குதல் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.