தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுக்கிறது. இந்தியா மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்று ஐ.நா.வில் இந்தியா குற்றம்சாட்டி இருக்கிறது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீவிரவாதத்தால் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் குறித்த கருத்தரங்கம் நடந்தது. இதில் கலந்துகொண்ட ஐ.நா.வுக்கான இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி, “இந்தியாவில் மும்பை மற்றும் பதான்கோட் ஆகிய இடங்களில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உள்நாடு மற்றும் வெளிநாடுளைச் சேர்ந்த ஏராளமானோர் பலியானார்கள். இவர்களது மரணத்துக்கும், இந்தியாவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கும் இன்னும் நீதி கிடைக்கவில்லை. இத்தாக்குதல்களை நடத்தியவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது.
ஆனால், அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதல் நடத்திய தீவிரவாதி ஒசாமா பின்லேடனை, 20 வருடங்கள் கடந்த நிலையிலும் இன்னும் அவனை தியாகி என்று சில நாட்டுத் தலைவர்கள் புகழ்ந்து வருகிறார்கள். ஹக்கானி பயங்கரவாத அமைப்புக்கு பாகிஸ்தான் ஆதரவளிக்கிறது. இந்த அமைப்புடன் அல்கொய்தா, ஐ.எஸ்.-கே போன்ற அமைப்புகள் இணைந்து தீவிரவாத செயல்களில் ஈடுபடுகின்றன. மும்பைத் தாக்குதலுக்கு காரணமான லஷ்கர்-இ-தொய்பாவுக்கு, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இதை ஆதாரங்களுடன் இந்தியா பலமுறை தெரிவித்தும், ஐ.நா. பொதுச் செயலர் வெளியிட்டுள்ள பயங்கரவாத தடுப்பு அறிக்கையில் இடம் பெறவில்லை. எனவே, எதிர்வரும் காலத்திலாவது உறுப்பு நாடுகள் அளிக்கும் விபரங்கள் ஐ.நா. அறிக்கையில் இடம் பெறும் என்று நம்புகிறோம்” என்று கூறியிருக்கிறார்.