பழனி கோயில் கருவறைக்குள் அமைச்சர்கள், அதிகாரிகள்: ஆகம விதி மீறல்… பக்தர்கள் அதிர்ச்சி!

பழனி கோயில் கருவறைக்குள் அமைச்சர்கள், அதிகாரிகள்: ஆகம விதி மீறல்… பக்தர்கள் அதிர்ச்சி!

Share it if you like it

பழனி பாலதண்டாயுதபாணி கோயிலில், கும்பாபிஷேகத்துக்கு முந்தைய நாள் கருவறை திறக்கப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் அரசு அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர் என சுமார் 400-க்கும் மேற்பட்டோர் கருவறைக்குள் சென்று தரிசனம் செய்த விவகாரம் கடும் சர்ச்சையே ஏற்படுத்தி இருக்கிறது.

முருகனின் அறுபடை வீடுகளில் 3-வது படைவீடு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்திருக்கிறது. இக்கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 27-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பழனி கோயிலில் இருக்கும் நவபாஷாண சிலையை பாதுகாக்கும் வகையிலும், புதுப்பிக்கும் வகையிலும் ஓய்வுபெற்ற நீதியரசர் பொங்கிலியப்பன் தலைமையில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கோவை சிரவை ஆதீனம், பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார், இந்து சமய அறநிலையத்துறை ஸ்தபதி தட்சிணாமூர்த்தி, பழனி கோயில் குருக்கள் கும்பேஸ்வரர், திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி, பழனி எம்.எல்.ஏ. ஐ.பி.செந்தில்குமார், பழனி நகர் மன்றத்தலைவர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இக்குழு, பழனி கோயில் கருவறை மற்றும் மூலஸ்தானத்தில் செய்யவேண்டிய பணிகள் மற்றும் நவபாஷாண முருகனின்‌ திருமேனியை பாதுகாக்கும் வகையில் பணிகள் குறித்தும், ஆகம விதிகளுக்கு உட்பட்டு ஆய்வு செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, கும்பாபிஷேகம் தொடர்பாக சிலை பாதுகாப்பு குழுவினர் பலமுறை மலைக்கோயிலுக்குச் சென்று வந்தனர். தொடர்ந்து, கும்பாபிஷேக பணிகள் நிறைவடைந்து, கடந்த 27-ம் தேதி காலை கும்பாபிஷேகம் நடந்தது. ஆனால், கும்பாபிஷேகம் நடப்பதற்கு முந்தைய நாளான ஜனவரி 26-ம் தேதி மாலை மூலவர் சிலை அமைந்துள்ள கருவறைக்குள் அமைச்சர்கள் சேகர்பாபு, சக்கரபாணி, அரசு அதிகாரிகள், மற்றும் இவர்களின் குடும்பத்தினர் சென்று தரிசனம் செய்திருக்கிறார்கள்.

தகவலறிந்த பக்தர்கள் விரைந்து வந்து பார்த்திருக்கிறார்கள். அப்போது, கோயில் கருவறைக்குள் ஏராளமானோர் இருந்திருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, கோயில் கருவறைக்குள் நுழைந்ததை கண்டித்து சாபமும் விட்டனர். மேலும், இதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றம் செய்து விட்டனர். அந்த வீடியோவில், கோயில் கருவறைக்குள் நுழையும் வாசற்படியில் அமைச்சர் சேகர்பாபு சட்டை அணியாமல் நிற்பதும், உள்ளே குன்றக்குடி அடிகளார் உள்ளிட்ட சிலர் நிற்பதும் தெரிகிறது‌. மேலும், திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி உள்ளிட்ட சிலர் கோயில் கருவறைக்குள் இருந்து வெளியே வருவதும் தெரிகிறது.

அதோடு, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன், கோயில் இணை ஆணையர் நடராஜன் ஆகியோரிடம் பக்தர்கள் வாக்குவாதம் செய்வதும், தொடர்ந்து நீங்கள் செய்வது தவறு. இதுவரை பழனி கோவில் வரலாற்றில் நடக்காத சம்பவங்கள் அனைத்தையும் ஆகமவிதியை மீறி செய்கிறீர்கள். இதை பழனியாண்டவன் பொறுத்துக்கொள்ள மாட்டான் என்று ஆவேசமாக கத்தி கோஷமிடுவதும் வீடியோவில் பதிவாகி இருக்கிறது. இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் தி.மு.க. அரசுக்கு சாபம் விட்டு வருகின்றனர்.


Share it if you like it