திராவிட மாடலின் புதிய பரிணாமமாக பழனி நகராட்சி பகுதியில் அடிபைப் குழாயுடன் சேர்ந்து தார்ச்சாலை அமைக்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் கேலி, கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறது. இதனால், பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகத்தில் நடக்கும் கூத்துகள் ஏராளம். ஒருபுறம் சட்டம் ஒழுங்கி சந்தி சிரிக்கிறது. இன்னொரு புறம் மக்கள் வரிப்பணத்தை டிசைன் டிசைனாக கொள்ளையடிக்கும் படலம் நடந்து வருகிறது. 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாததால் எப்படியெல்லாம் சம்பாதிப்பது என்பதிலேயே தி.மு.க.வினர் குறியாக இருக்கிறார்கள். இதனால், 1 லட்சம் ரூபாய் டெண்டருக்கு 30 சதவிகிதம் கமிஷன் கேட்பதாக கான்ட்ராக்டர் ஒருவர் புலம்பிய வீடியோ மற்றும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, டெண்டர் எடுக்கும் கான்ட்ராக்டர்களும் பணிகளை ஏனோதானோ என்று தரமற்ற வகையில் செய்கின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, தமிழகம் முழுக்கு தி.மு.க. நிர்வாகிகளே கான்ட்ராக்டர் அவதாரம் எடுத்திருக்கிறார்கள். இவர்கள், கழிவுநீர் ஓடிக்கொண்டிருக்கும் கால்வாயிலேயே புதிய கால்வாய் அமைப்பது, சிமென்ட்டே கலக்காமல் பள்ளிகளில் காம்பவுன்ட் சுவர் கட்டுவது, பள்ளி வாயிலில் மாணவர்கள் செல்ல முடியாத அளவுக்கு கால்வாய் அமைப்பது என பல்வேறு காமெடிகளை அரங்கேற்றி வருகின்றனர். இவ்வாறு கட்டிய கழிவுநீர் கால்வாய்கள், காம்பவுன்ட் சுவர்கள் அடுத்த சில நாட்களிலேயே இடிந்து விழுந்த சம்பவம் அரங்கேறியது. இதுமட்டுமா, சாலையின் நடுவில் இருக்கும் மின்கம்பங்களை அகற்றாமல் அப்படியே புதிய தார்ச்சாலை அமைப்பது, வீதிகளின் ஓரமாக நிற்கும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அப்புறப்படுத்தாமல், அதன் மீதே சிமெண்ட் மற்றும் தார்ச்சாலை அமைப்பது அலப்பரைகளை கொடுக்கிறார்கள்.
இந்த நிலையில்தான், பழனியில் சாலையோரம் இருந்த அடிபைப் குழாய் மீதே தார்ச்சாலையை அமைத்திருக்கிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி 7-வது வார்டுக்கு உட்பட்டது கீழ் வடம்போக்கி தெரு. இப்பகுதியில் சாலையின் ஓரத்தில் குடிநீருக்காக அடிகுழாய் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த அடிபைப்பில்தான் அப்பகுதி மக்கள் குடங்கள், பாத்திரங்களை வைத்து தண்ணீர் பிடித்து வந்தனர். இந்த சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் புதிதாக தார்ச்சாலை அமைத்திருக்கிறார்கள். ஆனால், பழைய சாலையை அகற்றாமல், அதன் மீதே புதிய சாலையை அமைத்திருக்கிறார்கள். இதனால், சாலையின் உயரம் அதிகரித்திருக்கிறது.
இதன் காரணமாக, அடிகுழாயின் பெரும் பகுதி சாலைக்குள் புதைந்து விட்டது. ஆகவே, அடிகுழாயில் பாத்திரங்களை வைத்து தண்ணீர் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள், அதிகாரிகளிடம் முறையிட்டிருக்கிறார்கள். அதற்கு அதிகாரிகள் முறையான பதில் அளிக்கவில்லையாம். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், சாலை அமைத்தவர்கள், பழைய சாலையை அப்புறப்படுத்தாமல் அதன் மீதே புதிதாக சாலை போட்டு விட்டார். அடிகுழாயின் உயரத்தையும் அதிகரிக்கவில்லை. இதனால் எங்களால் தண்ணீர் பிடிக்க முடியவில்லை. இதனால் அரசு பணம்தான் வீணாகிறது. இதுதான் திராவிட மாடல் சாலை போல என்று வேதனையுடன் தெரிவித்தார்கள்.