கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பெரிய காட்டுப்பாளையம் கிராமத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு அரசு தொகுப்பு வீடு இருளர் சமூகத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திரன் உயிரிழந்ததால் அவரது மகன் வடிவேலு அந்த வீட்டைப் பூட்டி வைத்து விட்டு வெளிமாவட்டத்திற்கு வேலைக்குச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த வீடு கொஞ்ச நாட்களாக உபயோகப்படுத்தாமல் இருந்துள்ளது. இதனை சாதகமாக எடுத்துக்கொண்டு அந்த இடத்தை அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு ஒதுக்கலாம் என ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு வடிவேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம், வடிவேலுவை மிரட்டியுள்ளார்.
இதனால் இச்சம்பவம் தொடர்பாக காடாம்புலியூர் காவல் நிலையத்தில் வடிவேல் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமலே அலட்சியமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வடிவேலு தரப்பில் போலீசாரை கண்டித்து போராட்டம் அறிவித்துள்ளனர்.
இந்த போராட்ட அறிவிப்புக்குப்பின், ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம், வடிவேலு குடும்பத்தை மிரட்டுவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.