பிரதமர் மோடி குறித்து அவதூறு: ராகுல் காந்திக்கு உரிமை மீறல் நோட்டீஸ்!

பிரதமர் மோடி குறித்து அவதூறு: ராகுல் காந்திக்கு உரிமை மீறல் நோட்டீஸ்!

Share it if you like it

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசிய காங்கிரஸ் மூத்த ராகுல் காந்திக்கு நாடாளுமன்றச் செயலாளர் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இதற்கு பிப்ரவரி 15-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31-ம் தேதியிலிருந்து நடந்து வருகிறது. இந்த சூழலில், பிப்ரவரி 7-ம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியும், அதானியும் விமானத்தில் ஒன்றாக செல்வது போன்ற படத்தைக் காட்டியதோடு, அதானி குழுமம் தற்போது 8 முதல் 10 துறைகளில் இயங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டு வெறும் 8 பில்லியன் டாலராக இருந்த அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு, தற்போது 140 பில்லியன் டாலராக எப்படி உயர்ந்தது என கேள்வி எழுப்பினார்.

மேலும், அதானியுடன் எத்தனை முறை ஒன்றாக வெளிநாட்டு பயணம் செய்தீர்கள்? உங்கள் பயணத்தில் எத்தனை முறை அதானி உங்களுடன் இணைந்து கொண்டார்? வெளிநாட்டில் எத்தனை முறை நீங்கள் சந்தித்துக் கொண்டீர்கள்? அதானி எத்தனை வெளிநாட்டு ஒப்பந்தங்கள் எடுத்துள்ளார்? கடந்த 20 ஆண்டுகளில் அதானி பா.ஜ.க.வுக்கு எவ்வளவு பணம் கொடுத்திருக்கிறார் என்று பல கேள்விகளை எழுப்பினார். அதோடு, இந்தியாவின் வெளியுறவு கொள்கையே அதானிக்காக மாற்றப்பட்டது. அதானி குழுமம் ட்ரோன் தயாரிப்பில் ஈடுபட்டதே இல்லை. ஆனால், மோடி இஸ்ரேல் சென்றவுடனேயே அதானிக்கு அந்த ஒப்பந்தம் கிடைக்கிறது. ஆஸ்திரேலியா சென்ற உடன் எஸ்.பி.ஐ. வங்கி 1 பில்லியன் கடன் வழங்குகிறது என்றும் குற்றம்சாட்டினார்.

இதற்கு அவையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பா.ஜ.க. பிரமுகர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “ராகுல் காந்தியின் வாதம் அநாகரீகமாகவும், அவதூறாகவும், ஆதாரமின்றியும் உள்ளதால், அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படும்” என்றார். மறுநாள் மக்களவை தொடங்கியதும் ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்க வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி.க்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனிடையே, பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில், “ஆதாரம் இல்லாத, அவதூறான, குற்றம் சாட்டப்பட்ட அறிக்கைகளை விதிகளுக்கு மீறி ராகுல் காந்தி வெளியிட்டிருக்கிறார். விதி எண் 353-ன் கீழ் மக்களவை சபாநாயகர் மற்றும் பிரதமருக்கு முறையான முன் அறிவிப்பு இல்லாமல் இதனை வெளியிட்டிருக்கிறார். எனவே, அவையின் கண்ணியம், தவறான, இழிவான, அநாகரீகமான, மக்களவைக்கு விரோதமான மற்றும் குற்றம் சாட்டப்பட்ட அறிக்கைகளை ராகுல் காந்தி எம்.பி. வழங்கி இருக்கிறார். ஆகவே, பிரதமர் மோடி குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்ததின் மூலம், ராகுல் காந்தி மக்களவையை அவமதித்திருக்கிறார். இது முழுக்க முழுக்க சபையின் செயல்பாடுகளை மீறுவதாக உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான், பிரதமர் மோடி குறித்து அவதூறான கருத்துக்களை கூறியதாக, ராகுல் காந்திக்கு மக்களவை செயலகம் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. மேலும், இந்த நோட்டீஸுக்கு பிப்ரவரி 15-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தெரிவித்திருக்கிறது.


Share it if you like it