அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் முதல்வரிடம் உதவி கேட்டு தொடர்பு கொண்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் மேற்கு வங்க முதல்வராக இருப்பவர் மம்தா பேனர்ஜி. இவரது, கட்சியை சேர்ந்தவர் பார்த்தா சாட்டர்ஜி. இவர், மாநில தொழில் துறை அமைச்சராக தற்போது இருந்து வருகிறார். இதனிடையே, கடந்த 2016 ஆம் ஆண்டு கல்வி அமைச்சராக இவர் இருந்த போது, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனத்தில் மிகப்பெரிய முறைகேடு செய்ததாக இவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டன. அந்த வகையில், சி.பி.ஐ. தீவிர விசாரணையை மேற்கொண்டன. இதையடுத்து, இம்முறைகேட்டில் ரூ.100 கோடி அளவுக்கு ஊழல் நடந்து உள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, மேற்கு வங்க மாநிலத்தில் சுமார் 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையை நடத்தி இருந்தனர். இந்த நிலையில் தான், பார்த்தா சட்டர்ஜியின் கூட்டாளியும், பிரபல மாடலுமான அர்பிதா முகர்ஜி என்பவரது வீட்டில் ரூ.20 கோடி ரூபாயை அமலாக்கத்துறையினர் அண்மையில் பறிமுதல் செய்து இருந்தனர்.
இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அமைச்சர் முதல்வரை மூன்று முறை தொடர்பு கொண்டு இருக்கிறார். அந்த வகையில், ’அரெஸ்ட் மெமோ’வில் கூறப்பட்டு இருப்பதாவது ; அதிகாலை 1:55 மணிக்கு அமைச்சர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, 2:33 மற்றும் 3:37 மணிக்கு அவர் முதல்வரை தொடர்பு கொண்டார். ஆனால், முதல்வர் அவரது அழைப்பினை ஏற்கவில்லை. இதனை தொடர்ந்து, மீண்டும் காலை 9:35 மணிக்கு மம்தாவை போனில் தொடர்பு கொண்டு இருக்கிறார். ஆனால், முதல்வர் அப்போதும் அழைப்பை எடுக்கவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட பார்த்தா சட்டர்ஜிக்கு திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கோல்கட்டாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.