தேசியம் வளர்த்த பசும்பொன் தேவர்

தேசியம் வளர்த்த பசும்பொன் தேவர்

Share it if you like it

தேசியம் வளர்த்த பசும்பொன் தேவர்

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ‘பசும்பொன்’ என்ற சிற்றூரில், 1908 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி பிறந்தவர், முத்துராமலிங்கத் தேவர். அகில இந்திய பார்வர்ட் பிளாக் தலைவராக இருந்தவர், தேசியவாதி, அரசியலையும், ஆன்மீகத்தையும் தனது இரு கண்களாக பாவித்தவர்.

பார்வர்ட் பிளாக் கட்சியின், தேசிய துணைத் தலைவராக இருந்தவர். மூன்று முறை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டவர். மிகப் பெரும் நிலச்சுவான்தார் குடும்பத்தில் பிறந்தவர், தேவர். உக்கிர பாண்டித் தேவர், இந்திராணி தம்பதிக்கு ஒரே மகன். இவருக்கு ஜானகி என்ற சகோதரியும் இருந்தார்.

தேவர் பிறந்த சில காலத்திலேயே, அவரது தாயார் மரணமடைந்தார். அவரது சித்தியும், அடுத்த ஆண்டு மரணமடைந்தார்.1910ம் ஆண்டு முதல், தனது பாட்டி பார்வதியம்மாள் பராமரிப்பில், கள்ளுப்பட்டி கிராமத்தில் வளர்ந்தார், தேவர்.தேவரின் தந்தைக்கு, மிகவும் நெருங்கிய நண்பரான குழந்தைச்சாமி பிள்ளை, முத்துராமலிங்கத் தேவரை வளர்த்ததில், முக்கியப் பங்கு வகித்தார். பள்ளிக்கு அனுப்பி, படிக்க வைத்தார். கமுதியில் உள்ள ‘அமெரிக்கன் மிஷனரி’ பள்ளியில், படித்தார் தேவர்.

பின்னர், மதுரை திருப்பரங்குன்றம் பசுமலை உயர் நிலைப் பள்ளியில், படித்தார். பின்னர், மதுரை யூனியன் கிறிஸ்டியன் உயர் நிலைப் பள்ளியில் படித்தார். இருப்பினும், 1924ம் ஆண்டு, ‘பிளேக் நோய்’ தாக்கியதால், பள்ளி இறுதியாண்டுத் தேர்வை, எழுத முடியாமல் போனது. இந்த நிலையில், பசும்பொன் கிராமத்தில் தனது பூர்வீக சொத்து தொடர்பாக, பிரச்சினை ஏற்பட்டதால் அங்கு திரும்பினார், முத்துராமலிங்கத் தேவர். 1927ம் ஆண்டு, அந்த வழக்கு தேவருக்கு சாதகமாக முடிந்தது.

அந்த சமயத்தில் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் குற்ற பரம்பரைச் சட்டம் அமலில் இருந்து வந்தது. இது, தேவரை பெரும் வேதனை அடையச் செய்தது. இந்த நிலையில், அவர் அரசியலில் குதித்தார். இந்த சட்டத்தை நீக்குவதற்காக, அவர் ஆதரவு திரட்டத் தொடங்கினார். கிராமம் கிராமமாக சென்று, கூட்டங்களை நடத்தினார்.

இந்த நிலையில், 1929ம் ஆண்டு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த, 19 கிராமங்களைச் சேர்ந்த மறவர் சமுதாயத்தினரை, இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வந்தனர். இதை எதிர்த்து, மிகப் பெரிய அளவில் கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்தினார், தேவர். இந்த சட்டத்திற்கு, மறவர் சமுதாயத்தினர் யாரும் அடிபணிய வேண்டாம், என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, அவர்களும் போராட்டத்தில் குதிக்க, அந்த சட்டத்தை பகுதியாக விலக்கிக் கொண்டது, அப்போதைய சென்னை மாகாண பிரிட்டிஷ் அரசு.

தேவரின் தொடர் முயற்சிகளால், குறைந்தது 2000 கிராமங்கள், இந்த சட்டத்தின் கீழ் இருந்த நிலை மாறியது.

1934ம் ஆண்டு, அபிராமம் நகரில் மாநாடு ஒன்றைக் கூட்டினார், முத்துராமலிங்கத் தேவர். அதில் முத்துராமலிங்கத் தேவர், வரதராஜுலு நாயுடு, பெருமாள் தேவர், சசிரவர்ண தேவர், நவநீத கிருஷ்ண தேவர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, இந்த சட்டத்தையே நீக்குவதற்காக போராடுவது, என தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் சட்டத்தை நீக்குவதற்குப் பதில், மிகத் தீவிரமாக இதை பயன்படுத்த ஆரம்பித்தது, அப்போதைய அரசு. அப்போது சென்னை மாகாணத்தை ஆண்டு கொண்டிருந்தது, நீதிக் கட்சியாகும்.

தனித்துப் போராடினால் வெற்றி பெற முடியாது, காங்கிரஸுடன் இணைந்து போராடுவது என தீர்மானித்தார் தேவர். இதையடுத்து, 1936ம் ஆண்டு, அவர் பர்மாவிலிருந்து திரும்பியதும், தென் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கினார்.

இந்த சமயத்தில் நடந்த மாவட்ட போர்டு தேர்தலில், முதுகுளத்தோர் தொகுதியில் போட்டியிட்டு ‘நீதிக் கட்சி’ வேட்பாளரை வீழ்த்தினார். இது தான் அவர் அரசியலில் பெற்ற முதல் வெற்றி.

அதன் பின்னர், மாகாண போர்டு தேர்தலில் நின்றார். இந்த சமயத்தில், ராஜபாளையம் ராஜா பி.எஸ்.குமாரசாமியும் போட்டியில் குதித்தார். இதனால், யாரை ஆதரிப்பது என்பதில், காங்கிரசாரிடையே மோதல் வெடித்தது.

இதையடுத்து குறுக்கிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, இரு தரப்பையும் சமாதானப் படுத்தி, ஒற்றுமையை ஏற்படுத்தினார். தேவர் தேர்தலிலிருந்து விலகி, குமாரசாமிக்கு ஆதரவு தெரிவித்தார்.

அதன் பின்னர், காங்கிரஸ் கட்சிக்கு முக்குலத்தோர் சமுதாயத்தினரின் ஒட்டுமொத்த ஆதரவையும் திரட்டும் முயற்சியில் வேகமாக ஈடுபட்டார், தேவர். இதனால், நீதிக் கட்சி பெரும் பீதியடைந்தது. இதையடுத்து, ராமநாதபுரத்தை விட்டு வெளியேறக் கூடாது என முத்துராமலிங்கத் தேவருக்கு தடை விதிக்கப்பட்டது. பொது இடங்களில் பேசவும் தடை விதிக்கப்பட்டது.

1937ம் ஆண்டு, நடந்த சட்டசபைத் தேர்தலில் ,ராமநாதபுரம், தொகுதியில் போட்டியிட்டார், தேவர். இதில், பெரும் வெற்றி பெற்றார். ராமநாதபுரம் மன்னரை, இந்தத் தேர்தலில் தோற்கடித்தார் தேவர்.

1939ம் ஆண்டு, காங்கிரஸ் தலைவராக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தேர்வு செய்யப் படுவதை, பட்டாபி சீதாராமையா எதிர்த்தார். ஆனால், போஸுக்கு தேவர் முழு ஆதரவு தெரிவித்தார். மேலும், தென்னிந்தியா முழுவதும், போஸுக்காக ஆதரவு திரட்டினார்.

ஆனால், காந்தியின் ஆதரவுடன் போட்டியிட்ட சீதாராமையாவுக்கு பலம் கூடியது. இதனால், போஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டவுடன், ராஜினாமா செய்ய நேரிட்டது. இதையடுத்து, பார்வர்ட் பிளாக் கட்சியைத் தொடங்கினார், போஸ். குற்றப் பரம்பரைச் சட்டத்தை, காங்கிரஸ் அரசு நீக்காததால், அதிருப்தியில் இருந்து வந்த தேவர், போஸுக்கு ஆதரவாக செயல்பட்டார். மதுரைக்கு, சுபாஷ் சந்திர போஸ் வந்த போது, மிகப் பிரமாண்டமான கூட்டத்தைக் கூட்டி, வரவேற்பு அளித்தார். தேவருக்கு கூடிய கூட்டத்தையும், அவருக்கு இருந்த செல்வாக்கையும் பார்த்து, காங்கிரஸ் தலைவர்கள் மிரண்டனர்.

இந்த நிலையில், அப்போது பிரபலமான மதுரா கோட்ஸ் வழக்கை, தேவருக்கு எதிராக கையில் எடுத்த காங்கிரஸ் அரசு, தேவரை மதுரையை விட்டு போகக் கூடாது என தடை விதித்தது. ஆனால், அதை மீறி 1940ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் பசும்பொன் கிராமத்துக்குக் கிளம்பினார், தேவர். இதையடுத்து, அவரை கைது செய்து, திருச்சி சிறையில், 18 மாதங்கள் அடைத்தனர்.

பின்னர் விடுதலையான அவரை, மீண்டும் கைது செய்தனர். 1945ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி தான், அவரை விடுவித்தனர்.இந்த நிலையில், 1946ம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபைக்குத் தேர்தல் நடந்தது. தேவர் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு போட்டியின்றி வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலுக்குப் பின்னர், குற்றப் பரம்பரைச் சட்டம் நீக்கப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், 1948ம் ஆண்டு போஸுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள், பார்வர்ட் பிளாக் பிரிவைச் சேர்ந்தவர்களை காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கினர். இதனால் பார்வர்ட் பிளாக் கட்சி தனி எதிர்க்கட்சியாக மாறியது. தமிழக பார்வர்ட் பிளாக் தலைவராக, தேவர் நியமிக்கப்பட்டார். தனது வாழ்நாள் முழுவதும், அவரே தமிழக தலைவராக செயல்பட்டார்.

1952ல் நடந்த லோக்சபா மற்றும் சட்டசபைத் தேர்தலில், தேவர் போட்டியிட்டார். லோக்சபாவுக்கு அருப்புக்கோட்டையிலும், சட்டசபைக்கு முதுகுளத்தூரிலும் போட்டியிட்டு, இரண்டிலும் வென்றார். பின்னர், லோக்சபா தொகுதியை ராஜினாமா செய்து விட்டார்.

1963ஆம் ஆண்டு, அக்டோபர் 29 ஆம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார், முத்துராமலிங்கத் தேவர், அவரின் மரணத்திற்குப் பிறகு, தனது உடலை, சொந்த ஊரான பசும்பொன்னில் தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

அதன்படி, அங்கு கொண்டு செல்லப்பட்ட உடலுக்கு, லட்சோப லட்சம் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

புளிச்சி குளத்தில் தேவரது எஸ்டேட்டில், அன்புடன் வளர்த்த இரண்டு மயில்கள், தேவரது உடல் புஷ்ப பல்லாக்கில் ஊர்வலம் வருகிற போது, உயரப் பறந்து சத்தமிட்டு கூவிக் கொண்டே வந்தது. அனைவரும், அந்த மயில்கள் கத்திக் கதறுவதைக் கண்டு, கண் கலங்கினர். தேவரது உடல் அடக்கம் செய்யப்பட்டதும், அந்த மயில்கள் இரண்டும், பொத்தென்று கீழே விழந்து இறந்தது.

சொத்துக்கள் பெரும் பகுதியை, பட்டியலின மக்களுக்கு எழுதிக் கொடுத்தவர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர். அவரின் கொள்கைகளை, என்றென்றும் நினைவில் வைத்துக் கொள்ள உதவுவது, ‘தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்’ என்கிற, அவரது முழக்கம் தான்.

அவரது பிறந்த நாளும், நினைவு நாளும் ஒரே நாளில் வருவதால், அதை குரு பூஜையாக அனுசரித்து, பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில், மக்கள் அனைவரும்அஞ்சலி செலுத்துகின்றனர்.

  • S. பாண்டியன்

Share it if you like it