பள்ளி மாணவர்களை கொத்தனார், சித்தாளாக்கிய தலைமை ஆசிரியர்… பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி!

பள்ளி மாணவர்களை கொத்தனார், சித்தாளாக்கிய தலைமை ஆசிரியர்… பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி!

Share it if you like it

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களை கொத்தனார், சித்தாள் போல கட்டட வேலையில் ஈடுபடுத்திய சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது ஆலக்குடிமுளை ஊராட்சி. இங்குள்ள உயர்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு முன்னாள் மாணவர் அருண் சூசை என்பவர் 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார். இந்த கட்டட பணிக்கு ஒப்பந்ததாரர் நியமிக்காமல், பள்ளி வளர்ச்சிக் குழுவினரும், தலைமை ஆசிரியர் சரவணன் தலைமையில் கட்டி வருகிறார்கள். அதாவது, கொத்தனார்கள் சிலர் வேலை பார்த்தாலும், கல் எடுக்க, மண் எடுக்க, சுவற்றுக்கு தண்ணீர் பிடிக்க, கலவை போட போன்ற வேலைகளுக்கு பள்ளி மாணவர்களை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு, மாணவர்களை எதற்காக கட்டட வேலை செய்ய அனுமதித்தீர்கள் என்று கேள்வி எழுப்பியதோடு, எங்கள் பிள்ளைகளை படிக்கத்தான் பள்ளிக்கு அனுப்பினோம். சித்தாள் வேலை செய்ய அனுப்பவில்லை என்று ஆவேசமாக கூறியிருக்கிறார். மேலும், ஒப்பந்தம் விட்டு பள்ளி கட்டடத்தை கட்டாமல், ஏன் தலைமை ஆசிரியரே முன் நின்று கட்டடத்தை கட்டுகிறார் என்றும் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பள்ளி வளர்ச்சி குழுத் தான் இப்பள்ளியை கட்டி வருவதாக கூறிய தலைமை ஆசிரியர் சரவணன், “நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. பள்ளி மாணவர்கள் தாங்களாக முன்வந்து வேலை பார்த்தார்கள். அவர்களாக விருப்பப்பட்டுத்தான் வேலை பார்த்தார்கள். எனினும், இது யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார். எனினும், மாணவர்களை கொத்தனார், சித்தாள் வேலைக்கு பயன்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it