57 ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆட்சியைப் பார்த்து மக்கள் சலித்துவிட்டனர் – அன்புமணி ராமதாஸ் !

57 ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆட்சியைப் பார்த்து மக்கள் சலித்துவிட்டனர் – அன்புமணி ராமதாஸ் !

Share it if you like it

பரபரப்பான தேர்தல் பிரச்சாரங்களுக்கு மத்தியில் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டியின் சில பகுதிகள்:

பாமக வலியுறுத்தியபடி வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீட்டை அதிமுக அரசு வழங்கியது. அப்படி இருந்தும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்காதது ஏன்?

வன்னியர்கள் தனி இடஒதுக்கீட்டுக்காக 44 ஆண்டுகளாகப் போராடிவருகிறோம். 2019இல் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாமக முன்வைத்த 10 நிபந்தனைகளில் சாதிவாரிக் கணக்கெடுப்பு, வன்னியர் இடஒதுக்கீடு ஆகியவையும் அடக்கம். அதற்கு அதிமுக ஒப்புக்கொண்டது.

2019 இல் நடைபெற்ற 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் வென்று அதிமுக ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. அவற்றில் 5 தொகுதிகளில் அதிமுக வெல்ல பாமக ஆதரவே காரணம். ஆனாலும், அவர்கள் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முன்வரவில்லை. தொடர் போராட்டம் நடத்திய பிறகே இடஒதுக்கீடு வழங்கினர்.

2021இல் தேர்தல் அறிவிப்புக்கு இரண்டு மணி நேரம் முன்பு 10.5% இடஒதுக்கீட்டுக்காக அவசர அவசரமாகச் சட்டம் கொண்டுவந்தனர். அதை முறையாகவும் முழு மனதுடனும் வழங்காமல், ஏராளமான குறைகளுடன்தான் வழங்கினர். அதனால் இடஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

நல்ல நோக்கத்தில் இடஒதுக்கீட்டை அதிமுக வழங்கியிருந்தால், ரத்து செய்யப்பட்டவுடன் பாமகவுடன் இணைந்து போராடியிருக்க வேண்டும். இடஒதுக்கீடு வழங்கும்படி திமுக அரசை வலியுறுத்தி இருக்க வேண்டும். ஆனால், அதிமுக வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எங்கும் கூறவில்லை. இதிலிருந்தே அதிமுகவின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளலாம். திமுகவும் அப்படித்தான்.

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் இதுவரை இடஒதுக்கீடு வழங்காமல் வன்னியர்களுக்குத் திமுக துரோகம் செய்கிறது. வன்னியர்களுக்குச் சமூகநீதியை மறுப்பதில் இரண்டு கட்சிகளும் ஒற்றை நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.

பாமக-பாஜக கூட்டணி எதை முன்னிறுத்தி தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்கிறது?

தமிழ்நாட்டில் 2026 இல் திமுக-அதிமுக ஆகிய கட்சிகள் இல்லாத ஆட்சி என்பதுதான் எங்களின் பரப்புரை உத்தி. சமூகநீதி, மாநிலத் தன்னாட்சி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, மகளிருக்கு அதிகாரம், நதிகள் இணைப்பு, வரி சீர்திருத்தங்கள் உள்ளிட்ட வாக்குறுதிகளை மக்களிடம் வழங்கி பரப்புரை செய்வோம். பாமக தேர்தல் அறிக்கையில் இதுகுறித்து விரிவாக விளக்கியுள்ளோம்.

அப்படியெனில், தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுடன் இனி பாமக கூட்டணி அமைக்காது என்று எடுத்துக்கொள்ளலாமா?

தமிழ்நாட்டில் கடந்த 57 ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் ஆட்சியைப் பார்த்து மக்கள் சலித்துவிட்டனர். நல்ல நிர்வாகம் தர வேண்டும் என்பதுதான் அக்கட்சி நிறுவனர்களின் நோக்கமாக இருந்தது. அதை இன்றைய தலைமைகள் மறந்துவிட்டன.

அதிகாரத்தை வைத்து வியாபாரம் செய்யத் தொடங்கிவிட்டன. அதனால் ஊழல் தலைவிரித்தாடுகிறது. சீனா, சிங்கப்பூர், ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுடன் போட்டியிட்டு வளரும் அளவுக்குத் தமிழ்நாட்டில் இயற்கை வளமும் மனிதவளமும் உள்ளது.

ஆனால், உத்தரப் பிரதேசத்துடனும் பிஹாருடனும் போட்டியிடும் அளவுக்குத் தமிழகத்தை இக்கட்சிகள் பின்னுக்குக் கொண்டுசென்றிருக்கின்றன. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். அதற்காக இரண்டு கட்சிகளுக்கும் மாற்றான அரசை நாங்கள் ஏற்படுத்துவோம். அதை எவ்வாறு சாத்தியப்படுத்துவோம் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்.

பாமகவின் முதன்மையான கோரிக் கைகளில் சாதிவாரிக் கணக்கெடுப்பும் ஒன்று. ஆட்சிக்கு வந்தால் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவோம் என்று காங்கிரஸ் கூறுகிறது. ஆனால், அதற்கு எதிரான நிலைப்பாட்டில் பாஜக இருக்கிறதே?

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த மாட்டோம் என்று பாஜக எங்காவது கூறியிருக்கிறதா? பிறகு, எந்த அடிப்படையில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு எதிரான நிலைப்பாட்டில் பாஜக இருக்கிறது என்று கூற முடியும்? மத்தியில் ஆட்சிக்கு வந்தால், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவோம் என்று இப்போது தேர்தலுக்காகப் பேசிவரும் காங்கிரஸ், சுமார் 60 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது அதைப் பற்றி எப்போதாவது கூறியது உண்டா?

2009இலிருந்து தேர்தல் களத்தில் பெரிய வெற்றியைப் பெற பாமக தடுமாறுகிறது. இது கூட்டணி அமைப்பதில் பாமகவின் பின்னடைவைக் காட்டுகிறதா?

தமிழ்நாட்டில் இன்றும் அரசியலைத் தீர்மானிக்கும் சக்தி பாமகதான். பாமகவின் வாக்குகள்தான் வெற்றி, தோல்வியைத் தீர்மானிப்பவையாக உள்ளன. ஒவ்வொரு தேர்தலிலும், ஏதேனும் ஓர் அம்சம் வெற்றி, தோல்வியைத் தீர்மானிப்பதாக மாறலாம். அதனால், பாமக அங்கம் வகிக்கும் கூட்டணி தோல்வியடைய நேர்ந்திருக்கலாம். பல நேரம் பாமக அங்கம் வகிக்கும் கூட்டணியில், பாமகவின் வாக்குகள் கூட்டணிக் கட்சிகளுக்குச் செல்கின்றன. ஆனால், கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் பாமகவுக்கு வருவதில்லை. இதுவும் பாமகவின் பின்னடைவுக்கு ஒரு காரணம். எனினும், இது தற்காலிகம்தான்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *