மகா சிவராத்திரியில் மனமுருகி பிரார்த்தனை செய்த மக்கள் : விண்ணை எட்டிய சிவ நாமம் !

மகா சிவராத்திரியில் மனமுருகி பிரார்த்தனை செய்த மக்கள் : விண்ணை எட்டிய சிவ நாமம் !

Share it if you like it

கோவை ஈஷா மையத்தில், நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய மகா சிவராத்திரி விழா இன்று காலை 6 மணி வரை உற்சாகமாகவும், வெகு விமர்சையாகவும் நடைபெற்றது. இது பக்தர்களுக்கு மிகுந்த மனமகிழ்ச்சியை தந்து வருகிறது.

சிவனுக்குரிய விரதங்களாக, மாத, நித்ய, யோக, மகா சிவராத்திரி என வருடமெல்லாம் பல சிவராத்திரிகள் இருந்தாலும், மகா சிவராத்திரி விரதம் சிறப்பானது என்பார்கள்.. மகா சிவராத்திரி நாளில், 3-ம் காலத்தில் ஈசனை வழிபட்டால் பாவங்கள் நம்மை விட்டுவிலகும் என்பது நம்பிக்கை.

குறிப்பாக, மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான 4 ஜாம வேளைகளில் சிவபெருமானை பூஜை செய்வது மோட்சத்தை வழங்கும் என்பது வழக்கமான ஐதீகமாக உள்ளது.. அந்த வகையில் தமிழகம் முழுவதுமுள்ள சிவாலயங்களில் நேற்றைய தினம் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

கோவையை பொறுத்தவரை, ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும். கோவை ஈஷா யோக மையத்தில் 30-வது ஆண்டு மகா சிவராத்திரி ஏற்பாடுகள், 2 நாட்களுக்கு முன்பிருந்தே கோலாகலமாக துவங்கியது.. நேற்று முன்தினம் முதல் இன்று அதிகாலை வரை கோலாகலமாக விழா நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இதையொட்டி ஈஷா யோகா மையம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. முக்கியமாக, விழா மேடையானது வாரணாசி கோவில் கோபுரங்களின் தோற்றத்துடன் கலர்ஃபுல்லாக வடிவமைக்கப்பட்டிருந்தது பக்தர்களை வெகுவாக ஈர்த்தது.

இந்த விழாவில் துணை ஜனாதிபதி மனைவி சுதேஷ் தன்கர், திரிபுரா கவர்னர் இந்திர சேனா ரெட்டி, பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித், மத்திய அமைச்சர் எல் முருகன், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, சினிமா பிரபலங்கள், மற்றும் பிற துறையை சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்றனர்.

விழாவில் பங்கேற்ற துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கூறும்போது, “கோவை ஈஷா யோகா மையத்தில் நடத்தப்படும் மகா சிவராத்திரி விழா உலகம் முழுவதும் உள்ள நவீன கால இளைஞர்களை ஈர்க்கும் வகையில் பிரமாண்டமாக நடத்தப்படுவது பாராட்டுகுரியது, இந்த விழாவில் நான் கலந்து கொள்வதை என் வாழ்வில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாகவும், பாக்கியமாகவும் உணர்கிறேன்” என்றார்.

நடிகர் சந்தானம் இந்த விழாவில் கலந்துக்கொண்டு கண்ணீர் மல்க சிவனை பிரார்த்தனை செய்யும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it