சமீபத்தில் டெல்லியில் அமைந்துள்ள பாராளுமன்றம் பாதுகாப்பு அத்துமீறல் விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டதால் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவை சேர்ந்த எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் 141 பேர் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனை கண்டித்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி, ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர் அவை நடவடிக்கையின் போது செய்வதை போன்று கிண்டலடித்து அனைவரின் முன்னிலையிலும் செய்து காட்டினார். இதனை மிகவும் உற்சாகமாக அங்கிருந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தனது செல்போனில் வீடியோ எடுத்தார். இதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளதாவது: துணை ஜனாதிபதி தன்கர் அவமானப்படுத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது. பாராளுமன்ற வளாகத்தில் நடந்த சம்பவத்தை பார்த்து மனம் நொந்து போனேன். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கண்ணியம், மரியாதையை கடைபிடிக்க வேண்டும்; விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகளுக்கு கருத்து சுதந்திரம் இருந்தாலும் கண்ணியத்துடன் கருத்துகளை கூற வேண்டும். அதுதான் நாங்கள் பெருமைப்படும் பாராளுமன்ற பாரம்பரியம். அதை அவர்கள் நிலைநாட்ட வேண்டும் என்று இந்திய மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.