தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர், போலீஸார் முன்னிலையேயே பெண்ணை சரமாரியாகத் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பெரம்பலூர் நான்கு ரோடு அருகேயுள்ள பேரளி கிராமத்தைச் சேர்ந்த பூங்கொடி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது, அதே கிராமத்தில் வசிக்கும் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் படைகாத்தான் என்பவரின் மனைவி, 50,000 ரூபாயை பூங்கொடியிடம் கொடுத்து அந்நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார். ஆனால், அந்த நிறுவனம் திடீரென மூடப்பட்டு, தற்போது மீண்டும் செயல்பட்டு வருகிறது.
இந்த சூழலில், பூங்கொடியின் வீட்டுக்குச் சென்ற படைகாத்தான், பணம் கேட்டு தகராறு செய்திருக்கிறார். இதில், இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. தகவலறிந்த போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது, படைகாத்தானும், அவரது ஆதரவாளர்களும் சேர்ந்து போலீஸார் முன்னிலையிலேயே பூங்கொடியை சரமாரியாகத் தாக்கி இருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, இச்சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி. ஆதாரங்களுடன் பூங்கொடி போலீஸில் புகார் கொடுத்தும், போலீஸார் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அதிருப்தியடைந்த பூங்கொடி, ஆளும்கட்சியினர் என்பதால் குற்றவாளிகளை போலீஸார் காப்பாற்றுகின்றனர் என்று குற்றம்சாட்டி இருக்கிறார். மேலும், தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் படைகாத்தான் குடும்பத்தினரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.