பெரம்பலூரில் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து, தி.மு.க. நிர்வாகி ஒருவர் பேனர் வைத்திருப்பது, மோடிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை காட்டுவதாக அமைந்திருக்கிறது.
பாரத பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக பல்வேறு சேவைகளை செய்து வருகிறார். அந்த வகையில், தாழ்த்தப்பட்டோர் பட்டியல் இருக்கும் தங்களது சமூகத்தை தேவேந்திர குல வேளாளர்கள் என்று அறிவிப்பதோடு, பட்டியல் சமூகத்திலிருந்தும் நீக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இவர்களது கோரிக்கையை மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு நிறைவேற்றியது. அதேபோல நரிக்குறவர் சமூகத்தை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அச்சமூகத்தின் பிரதிநிதிகள் வலியுறுத்தி வந்தனர். இதையும் மோடி தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றி இருக்கிறது.
இதையடுத்து, நரிக்குறவர் சமூகத்தினர் பாரத பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டம் காரை மலையப்ப நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். தி.மு.க. கிளைச் செயலாளராக இவர், தமிழ்நாடு நரிக்குறவர் சமுதாய சங்கத்தின் மாநில பொதுச்செயலாளராகவும் இருக்கிறார். இவர்தான், நரிக்குறவர் சமூகத்தை பழங்குடியின பட்டியலில் சேர்த்ததற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து பாலக்கரை பகுதியில் டிஜிட்டல் பேனர் வைத்திருக்கிறார். இந்த பேனரில், பிரதமர் மோடி, பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகளின் போட்டோக்களையும் அச்சிட்டிருக்கிறார்.
மேலும், அந்த பேனரில் ‘நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்த பிரதமர், தமிழக முதல்வர், மத்திய, மாநில அமைச்சர்களுக்கு கோடான கோடி நன்றிகள்’ என்று தெரிவித்திருக்கிறார். தி.மு.க. பிரமுகர் ஒருவர் பிரதமர் மோடிக்கு பேனர் வைத்த விவகாரம், பெரம்பலூர் தி.மு.க.வினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதேசமயம், மக்கள் மத்தியில் பிரதமர் மோடிக்கு இருக்கும் செல்வாக்கை இது காட்டி இருக்கிறது. எனினும், இந்த பேனர் வைக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அகற்றப்பட்டும் இருக்கிறது. இதற்கு, தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் இருந்து சிவகுமாரை அழைத்து கண்டித்ததே காரணம் என்றும் கூறப்படுகிறது.