பஞ்சாப்பில் பிரதமர் மோடியை கொலை செய்ய சதி நடந்ததாக மத்திய உளவு அமைப்புகளில் ஒன்றான ரா பிரிவு முன்னாள் அதிகாரி ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்.
மத்திய உளவுத்துறையில் ரா பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆர்.எஸ்.என்.சிங். தீவிரவாத நடவடிக்கைளை பிரித்து மேய்வதில் கில்லாடி. மிகவும் திறமையான அதிகாரி என்று பெயரெடுத்தவர். இவர்தான் பஞ்சாப்பில் பாரத பிரதமர் மோடியின் காரை வழிமறித்தது ஒரு படுகொலை முயற்சியே என்று உறுதியாகக் கூறியிருக்கிறார். இதற்கு உதாரணமாக, ராஜிவ் காந்தி படுகொலையை ஒப்பிடுகிறார். அதாவது, விடுதலைப் புலிகள் ராஜிவ் காந்தியை கொலை செய்வதற்கு முன்பு, அத்திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்று ஒத்திகை பார்த்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.
ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூருக்கு வருவதற்கு முன்பு அதே இடத்தில் வி.பி.சிங் கலந்துகொண்ட கூட்டம் நடந்தது. அப்போது, விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிவராசனும், தணுவும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு, வி.பி.சிங்குக்கு மாலை அணிவித்து ஒத்திகை பார்த்தனர். ஆகவே, இது நடக்கக் கூடிய திட்டம்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, அப்படியே ராஜிவ் காந்தி கொலை திட்டத்தையும் அரங்கேற்றி விட்டார்கள் விடுதலைப் புலிகள்.
அதேபோலவே, பஞ்சாப்பிலும் பிரதமரை கொல்ல ஒத்திகை பார்க்கப்பட்டிருக்கிறது என்கிறார் சிங். அதாவது, பஞ்சாப்பில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், பிரதமர் மோடி நிச்சயமாக ஹெலிகாப்டரில் செல்ல வாய்ப்பில்லை. மாறாக சாலை மார்க்கமாகவே செல்வார். அப்போது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவரை மடக்கி, கொலை செய்ய வேண்டும் என்பதுதான் எதிரிகளின் திட்டம். இதற்காக, பிரதமர் வருவதற்கு முதல்நாள் பக்காவாக ஒத்திகை பார்க்கப்பட்டிருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவலை தெரிவித்திருக்கிறார் ஆர்.எஸ்.என்.சிங்.
மேலும், ராஜிவ் காந்தி மேடையை நோக்கி போகும்போது காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் ஒருவர்கூட அவருடன் செல்லவில்லை. அதேபோல, பஞ்சாப்பிலும் அம்மாநில முதல்வர், டி.ஜி.பி. உள்ளிட்டோர் பிரதமரை வரவேற்க வரவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, பிரதமரின் கார் மேம்பாலத்தில் மறிக்கப்பட்டவுடன் அவருடன் இருந்தவர்கள் பஞ்சாப் முதல்வரை தொடர்புகொள்ள முயன்றிருக்கிறார்கள். ஆனால், அவர் போனை எடுக்கவே இல்லை. தொடர்ந்து, பஞ்சாப் டி.ஜி.பி.க்கு போன் செய்திருக்கிறார்கள். அவரும் எடுக்கவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது, இது பிரதமரை கொல்ல நடந்த சதி என்று உறுதியாகக் கூறமுடியும்.
அதற்கேற்றார்போல, பிரதமர் மறிக்கப்பட்ட மேம்பாலம், பாகிஸ்தானிலிருந்து வெறும் 20 கி.மி. தொலைவில்தான் இருக்கிறது. பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தி இருந்தால் மேம்பாலத்தில் நின்றிந்த பிரதமரின் கான்வாய் முற்றிலுமாகச் சிதறியிருக்கும். அதேபோல, பிரதமர் அந்தக் கூட்டத்தினரை சமாதானப்படுத்தி விட்டு, தொடர்ந்து பயணித்திருந்தால் மனித வெடிகுண்டு தாக்குதல் கூட நடத்தி இருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில், அப்பகுதியில்தான் சமீபத்தில் 5 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து கைப்பற்றப்பட்டிருக்கிறது. ஆனால், யார் செய்த புண்ணியமோ தெரியவில்லை, பிரதமர் அந்த இடத்திலிருந்து திரும்பிவிட்டார். ஒட்டுமொத்தத்தில் எதிரிகளின் சூழ்ச்சி முடியறிக்கப்பட்டு விட்டது.