நான் 3-வது முறையாக பிரதமராகும்போது, உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றிக் காட்டுவேன் என்று பிரதமர் மோடி சூளுரைத்திருக்கிறார்.
டெல்லியில் செப்டம்பர் மாதம் ஜி20 தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் கட்டடம் சுமார் 2,700 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைக்கப்பட்டது. 3-வது தளத்தில் பாரத் மண்டபம் என்கிற பெயரில் 7,000 பேர் அமரக்கூடிய வகையில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இப்புதிய கட்டடத்தை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, “நான் முதன்முறையாக ஆட்சியில் அமரும்போது இந்தியா உலக பொருளாதாரத்தில் 10-வது இடத்தில் இருந்தது.
எனது 2-வது பதவி காலத்தில் 5-வது பெரிய பொருளாதார நாடாக முன்னேறி இருக்கிறது. நான் 3-வது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கும்போது இந்தியாவை 3-வது இடத்திற்கு கொண்டு செல்வேன். கடந்த 5 ஆண்டுகளில் 13.5 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீட்டெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இதனை கடந்த 9 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியின் நலத்திட்டங்களே சாத்தியமாக்கியது. கடமை பாதையை போல பாரத் மண்டபம் என்கிற பெயர் மாற்றத்திற்கும் சிலர் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். நல்ல விஷயங்களை தடுத்து, அதன் மீது அவதூறு பரப்புவதே சிலரது குணம்” என்று கூறினார்.