ஜாதி என்பது கெட்டவார்த்தை அல்ல… பா.ம.க. தலைவர் அன்புமணி அதிரடி!

ஜாதி என்பது கெட்டவார்த்தை அல்ல… பா.ம.க. தலைவர் அன்புமணி அதிரடி!

Share it if you like it

ஜாதி என்பது தவறான சொல் அல்ல. அதில் நல்ல பழக்க வழக்கங்களும், வழிமுறைகளும் இருக்கின்றன என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை மயிலாப்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் 35-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகையில், “நாட்டில் விவசாயிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். கொள்முதல் விலை குறைவாக உள்ளது. அண்ணாவின் மதுவிலக்கு கொள்கையை பா.ம.க.தான் பின்பற்றுகிறது. நம் எதிரிகள் நம் மீது பொறாமை கொண்டு, எப்படியாவது நமக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஒரு ஜாதிக் கட்சி என்ற கருத்தை திணிக்கின்றனர். ஊடக சந்திப்பில் யாராவது ஒருவர் இப்படி கொளுத்திப் போடுகிறார்கள். இதையெல்லாம் நிறைய பார்த்துவிட்டோம்.

பாட்டாளி மக்கள் கட்சி எல்லா சமுதாயத்திற்கும், எல்லா மதத்திற்கும், எல்லா ஜாதிகளுக்கும், எல்லா இனத்திற்கும், எல்லா மொழிகளை சேர்ந்தவர்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் கட்சி. இந்தியாவிற்கு கொண்டு வந்த ஆம்புலன்ஸ் திட்டம், புகையிலை ஒழிப்பு இவையெல்லாம் ஜாதி பிரச்சனையா? நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஜாதி, மத, இன, மொழி ரீதியான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஜாதி என்பது  அருவருப்பான வார்த்தையாக உணரப்படுகிறது. ஜாதி என்பது ஒரு அழகான சொல்லாக நான் பார்க்கிறேன். ஜாதிய பிரச்னைகளையும், அடக்குமுறைகளையும் நாம் களையெடுக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், ஜாதிய அமைப்பில் நல்ல வழிகாட்டும் வழிமுறைகளும், ஆரோக்கியமான பழக்க வழக்கங்களும் இருக்கின்றன. இதையெல்லாம் நாம் கடைபிடிக்க வேண்டும். பெருமையாக பார்க்க வேண்டும்” என்றார்.

இவரது இந்த பேச்சுதான் தற்போது கடும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. அன்புமணி பேசுவதைப் பார்த்தால் பா.ம.க. ஜாதிக் கட்சிதான் என்பதை மெய்ப்பிப்பதுபோல் இருக்கிறது என்று நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it