கண்ணதாசன் ஆத்திகரானது எப்படி?!

கண்ணதாசன் ஆத்திகரானது எப்படி?!

Share it if you like it

1971-ம் ஆண்டு… காஞ்சிபுரம் காமகோடி மடத்திற்கு எதிரில் ஒரு அலங்கார மேடை. தமிழகத்தில் இன்று விஷ விருட்சமாக நிற்கும் போலி நாத்திகத்தின் வேர்களை பரவச் செய்த அமைப்பின் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. மேடையில் பேசிய ஒரு இளைஞர் நாவில் தமிழ் விளையாடுகிறது, பேச்சில் செட்டிநாட்டிற்கே உரித்தான நையாண்டி.

சனாதன தர்மம் துவங்கி, கடவுள் நம்பிக்கை வரை அனைத்தையும் சரமாரியாக வசைபாடுகிறார் அந்த இளைய பேச்சாளர். குறிப்பாக, காஞ்சி மடத்தில் உறையும் வாழும் தெய்வமான காஞ்சி முனிவரையும், அவரது சொற்கணைகள் தாக்கின. அவர்தான் வணங்காமுடி என்று பெயர்பெற்ற கவிஞர் கண்ணதாசன். இந்தக் கூட்டம் முடிந்து, சாண்டோ சின்னப்ப தேவருடன் காரில் செல்கிறார்கள். வழியில் கார் விபத்துக்கு உள்ளாகிறது. சின்னப்ப தேவருக்கு பெரிதாக காயம் இல்லை. கவிஞருக்கோ படுகாயம். ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்.

மறுநாள், சின்னப்ப தேவர் காஞ்சி மடத்திற்குச் சென்று பெரியவாளை தரிசித்து, விபத்து நடந்த விவரத்தைச் சொல்கிறார். கண்ணதாசனும் கூட இருந்ததாக தேவர் கூறவில்லை. ஆனால், பெரியவா தானாகவே “கண்ணதாசன் எப்படி இருக்கான்?” என்று கேட்டார். அதிர்ந்து போனார் சின்னப்ப தேவர். இதன் பிறகு, விபூதி பிரசாதம் கொடுத்து கண்ணதாசனுக்கு இட்டுவிட்டு, தலையணையின் கீழ் வைக்கச் சொல்கிறார் பெரியவா. தேவருக்கு தர்ம சங்கடம். கண்ணதாசன் தனது நாத்திகப் போக்கில் வேண்டாம் என்று ஏதேனும் சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று சிந்திக்கிறார்.

“தயங்காமல் கொண்டுபோய் பூசு. சூரியனை சில சமயம் மேகம் மறைப்பது போல் நாத்திக மேகம் இதுவரை அவனை மறைத்திருந்தது. இனி அவன் சூரியனாகத் திகழ்வான்” என்றார் காஞ்சி முனி. மேலும், கண்ணதாசனின் தாத்தா, கொள்ளுத் தாத்தா போன்றோர் செய்த கோவில் திருப்பணிகள் பற்றியும் கூறி, தேவரைத் தெளியவைத்து அனுப்பினார் பெரியவா. தேவர் மருத்துவமனைக்கு வந்தபோது, கண்ணதாசனுக்கு நினைவு வந்திருக்கவில்லை. சொன்னபடியே, விபூதியை பூசிவிட்டு தேவர் வீடு சென்றார்.

அடுத்த நாள் கண்ணதாசன் கண்விழித்தார், உடனே “ஒரு கண்ணாடி வேண்டும்” என்று கேட்டுத் தனது முகத்தைப் பார்த்தார். ஒருவேளை, விபத்தில் முகத்தில் ஏதேனும் காயம் இருக்குமா என்ற எண்ணம். அவருக்கு அப்படி எந்தக் காயமும் ஏற்படவில்லை என்பதுடன், நெற்றியில் துலங்கிய திருநீற்றையும் காட்டியது கண்ணாடி. அதுபற்றி விசாரித்தார் கண்ணதாசன். உடன் இருந்தவர்கள் தயங்கியபடியே பெரியவா விபூதி கொடுத்த விஷயத்தை விளக்கினர். உடனே கவிஞர் வாய்விட்டு அழத் துவங்கினார்

“அய்யோ போன வாரம்தானே அவரது சன்னதி முன்னால் மேடை அமைத்து, அந்த மகானை கண்டபடி திட்டினேன்! என் மீதா இவ்வளவு கருணை!” என்று மனம் வருந்தினார். கூடவே ஒரு சங்கல்பமும் பிறந்தது. உடல் நலமானவுடன், வீட்டிற்கு போகாமல், நேரடியாக காஞ்சிப் பெரியவரை தரிசிப்பது என்று முடிவு செய்தார். அதன்படி, தரிசனமும் செய்தார். அப்போது,

“பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்ற

தீர்த்தப் பெருக்கு திருவாசகத்தின் உட்கருத்து;

கூர்த்த மதியால் மெய்ஞானக் கருத்துணர்த்தும்

முழுமூர்த்தம்; கலிமொய்க்கும் இவ்வுலகைக் காக்கவந்த

கண்கண்ட தெய்வம்; எம்மதத்தோரும் சம்மதத்துடன்

தம்மதத் தலைவனென தொழுதேத்தும்

தெய்வக் கமலக் கழல்; தொழுவோம் வாரீர்!”

என்ற கவிதையையும் எழுதி பெரியவா பாதத்தில் சமர்பித்து வாசித்தார். துறவின் உச்சம் இந்தப் புகழை ஏற்கவில்லை.
“அனந்த கோடி அற்புத லீலா சாகித்ய மாயமானுஷாய நமோ நமஹ! அர்த்தநாரி திருவண்ணாமலை சேஷாத்ரி மஹானுக்கல்லவா இது பொருந்தும்!”
என்று கூறி, அவரையும் தரிசிக்கச் சொன்னார். இப்படி இருபுறம் 2 மகான்களால் தாக்குண்ட கண்ணதாசனின் நாத்திகம் இருந்த இடம் தெரியாமல் போனது. சிறிது நாட்களில் ஹிந்து மதத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணமும் உருவானது.

இதுபற்றி பெரியவாளிடம் கேட்டபோது, “நம்ம சம்பிரதாயம், தர்மம் எல்லாம் அர்தம் இல்லாததுன்னு ரொம்ப பேர் பிரசாரம் செய்கிறார்கள். நீ அதுக்கு எல்லாம் என்ன அர்த்தம்ன்னு எழுதலாமே?” என்று தனக்கே உரிய பாணியில் வினவினார் காஞ்சி மகான். அப்போது உருவானதுதான் அர்தமுள்ள இந்துமதம். பெரியவா முன்பு சொன்ன நாத்திக மேகம் விலகி, கண்ணதாசன் எனும் கதிரவன் சுடரொளி விட்டுப் பிரகாசிக்கத் துவங்கினான். ஒருவேளை, புரட்சி, நாத்திகம் என்ற சிந்தனையில் மட்டுமே உழன்று கிடந்தால், தனது கவிதையே காணாமல் போயிருக்கும் என்று கண்ணதாசனே கூறுகிறார்.

“புரட்சி என்ற பேரில் குருட்டுத்தனமான நாத்திக மனப்போக்குத் தொடர்ந்திருந்தால், எனது எழுத்துக்கள் சுருங்கி, கருத்துக்கள் சுருங்கி, என் பெயரும் சுருங்கியிருக்கும். நான் சிறிது காலம் மட்டுமே இடையில் நாத்தீகனாக இருந்தேன்” எனும் கண்ணதாசன், தனது அந்நாளைய சகாக்களைத் தோலுரிக்கவும் தயங்கவில்லை. “நாத்திக வாதத்தில் பணம் கிடைப்பதால், ஒரு சிலர் மட்டுமே, தங்களை ‘இங்கர்சாலின் மாப்பிள்ளை’களாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், சமுதாயத்தை ஏமாற்றாத எந்தச் சராசரி மனிதனும், இந்துமதத் தத்துவத்தை விட்டு விலகிச் செல்ல முடியாது!” என்று தனது நிலைப்பாட்டின் உண்மைத்தன்மையை விளக்குகிறார். பாமர மக்களும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வண்ணம் இந்துமத தத்துவங்கள், பழக்கங்களின் பொருளை எடுத்து இயம்பின இந்நூலின் 10 பாகங்கள். தனிப்பட்ட முறையில், அர்தமுள்ள இந்துமதம் கண்ணதாசனை அர்தமுள்ள கண்ணதாசனாக மாற்றியது என்றும் கூறலாம்.

கட்டுரையாளர்: ராகவேந்திரன் SS


Share it if you like it