போலந்து நாட்டிலும் அமெரிக்காவைச் சேர்ந்தவர் இந்தியர்கள் ஒட்டுண்ணிகள், ஊடுருவல்காரர்கள் என்று இந்தியரை விமர்சித்த சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்திராணி பானர்ஜி, தனது நண்பர்களுடன் ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்றிருந்தார். அங்கு உணவு அருந்தி விட்டு, தங்களது காரை எடுப்பதற்காக பார்க்கிங்கிற்கு வந்தனர். அப்போது, மதுபோதையில் இருந்த மெக்சிகோவைச் சேர்ந்த அமெரிக்கப் பெண், இந்தியர்களை பார்த்தால் எனக்கு வெறுப்பாக இருக்கிறது என்றும், இன ரீதியாகவும் வசைப்பாடி, தாக்குதலிலும் ஈடுபட்டார். இந்த சம்பவத்தை அப்பெண்கள் வீடியோ எடுத்து வெளியிட்டனர். இது வைரலானதைத் தொடர்ந்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த நிலையில்தான், அமெரிக்காவை சேர்ந்த ஒருவர், போலாந்து நாட்டிலும் இந்தியரை இனரீதியாக கடுமையாக விமர்சித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்தும், அந்த இந்தியர் யார் என்பது குறித்த விவரமும் தெரியவில்லை. ஆனால், அவரை திட்டிய அமெரிக்காவைச் சேர்ந்த நபர்தான் இந்த வீடியோவை எடுத்ததாகத் தெரிகிறது. அந்த நபர், தன்னை அமெரிக்காவைச் சேர்ந்தவன் எனவும், வெள்ளை இனத்தைச் சேர்ந்தவன் எனவும் அடையாளப்படுத்தி கொண்டு, இந்தியரை பார்த்து, நீ ஏன் போலந்தில் வசிக்கிறாய்? என்று கேள்வி எழுப்புகிறார்.
பதிலுக்கு அந்த இந்தியரோ, என்னை ஏன் வீடியோ எடுக்கிறாய் என்று கேட்டதற்கு, அந்த நபர், ‘காரணம் நான் அமெரிக்கன். அமெரிக்காவிலும் உன்னைப் போன்றவர்கள் ஏராளமானோர் உள்ளனர். போலந்திற்கு ஏன் வந்துள்ளாய்? போலந்திலும் ஊடுருவலாம் என நினைக்கிறாயா? உங்களுக்கு சொந்த நாடு உள்ளது. உங்களது நாட்டிற்கு திரும்பி செல்ல மாட்டீர்களா. எங்களின் கடின உழைப்பை எடுத்துக் கொள்ள வெள்ளைக்காரர்களின் நிலத்திற்கு ஏன் வந்துள்ளீர்கள் என ஐரோப்பியர்கள் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். உங்களது சொந்த நாட்டை கட்டமைக்காதது ஏன்? ஒட்டுண்ணியாக இருப்பது ஏன்?
எங்களது இனத்தை படுகொலை செய்கிறீர்கள். நீங்கள் ஊடுருவல்காரர்கள். சொந்த நாட்டிற்கு செல்லுங்கள் ஊடுருவல்காரர்களே. ஐரோப்பாவிற்கு நீங்கள் தேவையில்லை. போலந்து, போலந்து நாட்டினருக்கே. நீங்கள் போலந்து நாட்டை சேர்ந்தவர் இல்லை’ என்றும் ஆவேசமாகக் கூறுகிறார்கள். ஆனால், அதற்கு அந்த இந்தியர் எந்த பதிலையும் சொல்லாமல் சென்ற நிலையில், அந்த அமெரிக்கர் விடாமல் இந்தியரை விரட்டி விரட்டிச் சென்று திட்டுகிறார். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி இந்தியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.