நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மருத்துவம் படிக்க முடியவில்லை. இதனால், மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று தி.மு.க. கூறி வருகிறது. இந்த சூழலில், அதே நீட் தேர்வால் டாக்டராகி, தி.மு.க.வின் பொய் பிரசாரத்தை முறியடித்திருக்கிறார் போலீஸ்காரர் ஒருவர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேயுள்ள முதுகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் – இன்பவள்ளி தம்பதியின் மகன் சிவராஜ். தற்போது 24 வயதாகும் இவர், சென்னை ஆவடி சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். பென்னாகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்த சிவராஜ், 915 மதிப்பெண்கள் பெற்றார். இவருக்கு டாக்டராக வேண்டும் என்பது கனவாக இருந்தது. ஆனால், டாக்டராக இந்த மதிப்பெண் போதுமானதாக இல்லை. எனவே, அறிவியல் கல்லூரியில் சேர்ந்து, பி.எஸ்சி. வேதியியல் படிப்பு முடித்தார். பிறகு, போலீஸ் தேர்வு எழுதி பாஸாகி, 2020-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தார்.
எனினும், டாக்டராக வேண்டும் என்கிற அவரது கனவு மட்டும் நீடித்து வந்தது. ஆகவே, போலீஸ் பணியை செய்து கொண்டே நீட் தேர்வுக்கும் தயாராகி வந்தார். கடந்தாண்டு நீட் தேர்வு எழுதினாலும், போதிய மதிப்பெண் பெறவில்லை. 290 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார். ஆனாலும், மனம் தளராத சிவராஜ் தொடர்ந்து நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். நிகழாண்டு நடந்த நீட் தேர்வில் பங்கேற்று 400 மதிப்பெண்கள் பெற்று தனது கனவை நனவாக்கி இருக்கிறார். ஆம், சிவராஜ் அரசு பள்ளியில் படித்தவர் என்பதால், தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சீட் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவப் படிப்பை படிக்க உள்ளார் சிவராஜ்.
இதன் மூலம் தனது கனவை நனவாக்கி இருப்பதோடு, நீட் தேர்வு குறித்து தி.மு.க. செய்து வரும் பொய் பிரசாரத்தையும் முடியறித்திருக்கிறார். அப்புறமென்ன, லத்தி பிடித்த கையில் இனி ஸ்டெதஸ்கோப்பை பிடிக்கப் போகிறார் சிவராஜ்.