முதலில் நாட்டுக்குச் சேவை செய்யுங்கள்’ என நம்பிக்கையூட்டி துருக்கிக்கு அனுப்பி வைத்த மனைவியின் செயலை பலர் பாராட்டி வருகின்றனர்.
கடந்த வாரம் 6-ம் தேதி அதிகாலை 3:30 மணியளவில் துருக்கி நாட்டில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது. அதன் ரிக்டர் அளவு 7.8 என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து, ஆயிரகணக்கான அடுக்குமாடிக் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அந்தவகையில், இன்று துருக்கி நாடே மிகப்பெரிய பேரழிவை சந்தித்துள்ளன. இந்த, நிலநடுக்கத்தில் சுமார் 35,000-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். பலியின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
துருக்கியின், அண்டை நாடுகளும் நிலநடுக்கம் காரணமாக பெரும் அழிவை சந்தித்துள்ளன. இந்த நிலையில், துருக்கி மற்றும் சிரியாவுக்கு இந்தியா 99 பேர் கொண்ட மீட்பு குழு ஒன்றை அனுப்பியுள்ளது. இந்திய ராணுவ வீரர்களும் மீட்புப்பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையில், கூட நம்பிக்கை தரும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.
அந்த வகையில், இந்திய ராணுவ வீரருக்கு வந்த நற்செய்தியை குறிப்பிட்டு சொல்லலாம். அதாவது, உத்தரப்பிரதேச மாநிலம் ஹபூரைச் சேர்ந்தவர் ஹவில்தார் ராகுல் சவுத்ரி. இவர், இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது, மனைவி கர்ப்பமாக உள்ளார். அருகில், இருந்து தனது மனைவியை கவனித்து கொள்ள வேண்டிய நிலை இவருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், துருக்கியை நிலநடுக்கம் புரட்டி போட்டுள்ளது. இதையடுத்து, மத்திய அரசு தனது ராணுவ மீட்பு குழுவை துருக்கிக்கு அனுப்பி வைக்க முடிவு செய்து இருந்தது.
இந்த குழுவில், ஹவில்தார் ராகுல் சவுத்ரியின் பெயரும் இடம் பெற்று இருந்தது. மேலும், அவரின் பாஸ்போர்ட்டையும் தேர்ந்தெடுத்து முத்திரையிடப்பட்டு இருக்கிறது. இந்த கடினமான சூழலில், துருக்கிக்கு செல்வதா? அல்லது மனைவியின் அருகில் இருப்பதா? என ராணுவ வீரர் தவிப்பில் துடித்துள்ளார். தனது கணவரின் நிலையை அறிந்து கொண்ட மனைவி `முதலில் நாட்டுக்குச் சேவை செய்யுங்கள்’ என நம்பிக்கையூட்டி அவரை அனுப்பி வைத்து இருக்கிறார்.
இந்த நிலையில், ஹவில்தார் ராகுல் விமானத்தில் ஏறியபோது, அவரது மனைவி ஆபரேஷன் தியேட்டருக்குள் கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார். இதையடுத்து, சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் ஹவில்தார் மனைவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. துருக்கியில் இறங்கிய உடனேயே ஹவில்தாருக்கு குழந்தை பிறந்த நற்செய்தி கிடைத்துள்ளது. இக்கட்டான சூழலிலும், தன் கணவனை மீட்புப்பணிக்கு அனுப்பி வைத்த மனைவியின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.