மகளிர் ஆணையம் நோட்டீஸ்: மன்னிப்புக் கேட்ட காங். எம்.பி.!

மகளிர் ஆணையம் நோட்டீஸ்: மன்னிப்புக் கேட்ட காங். எம்.பி.!

Share it if you like it

ஜனாதிபதி திரௌபதி முர்மு குறித்து காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இழிவான கருத்துக் கூறிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், அவருக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதனிடையே, பகிரங்க மன்னிப்புக் கேட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி.

ஜனாதிபதியாக இருந்த ராம்நாத் கோவிந்த் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, நாட்டின் புதிய ஜனாதிபதியாக பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு, கடந்த 25-ம் தேதி பதவியேற்றார். இந்த சூழலில், மக்களைவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி.யும், அக்கட்சியின் மக்களவைத் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஜனாதிபதி திரௌபதி முர்முவை ராஷ்டிரபத்னி என்று குறிப்பிட்டார். இதற்கு ஹிந்து மொழியில் தவறான அர்த்தம் இருப்பதாகவும், உள்நோக்கத்துடனேயே ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இவ்வாறு பேசியிருப்பதாகவும் கூறி, பா.ஜ.க.வினர் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

மேலும், மக்களைவையிலேயே அவரது பேச்சுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கடுமையாகச் சாடினார். அப்போது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்தும் கடுமையாக விமர்சித்தார். மேலும், இவ்வாறு கூறியதற்காக சோனியா மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் பா.ஜ.க.வினர் வலியுறுத்தினர். அதோடு, ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் பதவியை பறிக்க வேண்டும் என்றும் கச்சை கட்டினர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகி பூதாகரமாக வெடித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அந்த நோட்டீஸில், இந்த விவகாரம் தொடர்பாக ஆகஸ்ட் 3-ம் தேதி காலை 11.30 மணிக்கு விசாரணை நடைபறுெம். அப்போது, தனது கருத்து தொடர்பாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆணையத்தின் விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. மேலும், ஆதிர் ரஞ்சன் கருத்து மிகவும் இழிவானது. பெண்களை அவமரியாதை செய்யும் விதத்தில் இருக்கிறது என்று கூறியுள்ள ஆணையம், இது தொடர்பாக சோனியா காந்திக்கும் தனியே கடிதம் எழுதி இருக்கிறது. அக்கடிதத்தில் ஆதிர் ரஞ்சன் மீது உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி இருக்கிறது.

இந்த நிலையில்தான், தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டு ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதி இருக்கிறார் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி. இதன் மூலம் தன் மீதான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.


Share it if you like it