அர்ச்சகர் அறம் சொல்லும் அமைச்சரே..! பெரியபாளையம் கதை கேளுங்கள்…

அர்ச்சகர் அறம் சொல்லும் அமைச்சரே..! பெரியபாளையம் கதை கேளுங்கள்…

Share it if you like it

ஓம் சக்தி என்ற சொல்லுக்கு மகத்துவம் அதிகம். நமது முன்னோர்கள் சக்தி இல்லையேல் சிவம் இல்லை, சிவம் இல்லையே சக்தி இல்லை என்ற பொன்மொழியை நமக்கு விட்டு சென்றனர். ஒரு மனிதனுக்கு இந்த இரண்டுமே முக்கியம். அவன் ஜீவிக்க சிவன் வேண்டும். அவன் எந்த குறையில்லாமல் இருக்க சக்தி வேண்டும். ஆக இந்த இரண்டும் சரியாக இருந்தால் மனிதன் வாழ்க்கையின் எந்தவித துன்பம் இல்லாமல் வாழலாம். இந்த ஆனந்த வாழ்க்கை பெற நாம் நம் மனதிலும், எண்ணத்திலும் தவறான எண்ணங்களை அகற்றி தூய்மையான சிந்தனையை புகுத்தி தெய்வத்தின் மீது அதீத பற்று கொண்டால் நாம் இன்பமான இறை நிலையை அடையலாம். இந்த நிலையை அடைய பல திருத்தலங்களுக்கு சென்று அங்குள்ள தெய்வத்தினை வழிபட்டால் நம் எண்ணத்திலும்,மனதிலும் நல்ல சிந்தனையை பெறலாம். இந்த நல்ல சிந்தனையை தரக்கூடிய திருத்தலங்களில் ஒன்று தான் பெரியபாளையம் பவானி அம்மன் திருத்தலமாகும்.இத்திருத்தலத்தின்வரலாறற்றை இப்போது பார்ப்போம்.

சென்னையில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் பெரியபாளையம் உள்ளது. அங்கு அருள்மிகு ரேணுகாதேவி- பவானி அம்மனாக கொலு வீற்றிருக்கிறாள்.பாளையம் என்றால் படை வீடு என்று பொருளாகும். பெரிய படை வீடு என்பது தான் பெரியபாளையம் ஆகும். குடும்பம் குடும்பமாக வந்து இந்த பெரியபாளையம் அம்மனை தரிசனம் செய்கிறார்கள் பக்தர்கள். இந்த அம்மனும் அவர்களின் பாவங்களை தீர்த்து அருள் புரிகின்றாள். இந்த ஆலயத்திற்கு அம்மனை தரிசிக்க நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போகிறது. இந்த அம்மன் ஒரு கையில் சக்கரமும் மற்றொரு கையில் கபாலக்கிண்ணம் ஏந்தி நிற்கிறாள். இந்த கபால கிண்ணத்தில் மகாலட்சுமி, துர்க்கை, சரஸ்வதி ஆகிய மூவரும் அடங்கி இருப்பதாக தத்துவம் உண்டு. இத்தத்துவத்தின் பொருளானது கல்வி,செல்வம், வீரம் மூன்றையுமே அன்னை வழங்குகிறாள் என்பதை குறிக்கிறது. இந்த அம்மனை வணங்கினால் நீண்ட ஆயுள், ஆரோக்கியமான உடல் ,பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியத்தை அள்ளித் தரும் தாயாக மற்றும் மாங்கல்யத்தை நிலைத்திருக்கச் செய்யும் அன்னையாக காட்சி தருகிறாள்.

தல வரலாறு :

சில நூற்றாண்டுக்கு முன்பு ஆந்திராவிலிருந்து பலிஜா நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வளையல் விற்க சென்னைக்கு வருவார்கள். வளையல் உடன் குங்குமமும் மஞ்சளும் கொடுத்து ஆசீர்வதிப்பது அவர்களின் வழக்கம். அப்படி வந்த ஒரு வளையல் வியாபாரியால் தான் இந்த கோவில் கட்டப்பட்டது.அந்த வளையல் வியாபாரி வளையல்களை விற்று மீதமுள்ள வளையல்கள் உடன் ஒரு வேப்ப மரத்தடியில் வந்து ஓய்வெடுத்து அப்படியே உறங்கி விட்டார். பிறகு கண் விழித்து பார்க்கும் போது அருகிலிருந்த வளையல் மூட்டை காணவில்லை. பதறிப்போய் அதனை தேடினார். அருகில் ஒரு புற்று இருந்தது அந்த புற்றினுள் எட்டிப் பார்த்தார் அதில் அந்த வளையல் மூட்டை இருந்தது அதனை ஒரு கம்பியின் மூலம் எடுக்க முயற்சி செய்தார் ஆனால் எவ்வளவு முயன்றாலும் அதனை எடுக்க முடியவில்லை.

பிறகு அவர் ஊரில் உள்ள தன் வீட்டுக்கு சென்றார். இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது கனவில் அம்மன் தோன்றி அவரிடம் நான் ரேணுகாதேவி பெரியபாளையத்தில் பவானி அம்மன் ஆக உருவெடுத்து இருக்கிறேன் அங்கு எனக்கு ஆலயம் எழுப்பு என்று கூறினால். அந்த வளையல்கார தூக்கத்திலிருந்து எழுந்து தன் கனவில் வந்ததை வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிவித்தார். உடனே பெரிய பாளையத்திற்கு வந்து அந்த ஊர் மக்களுக்கு தன் கனவில் அம்மன் சொன்னதை சொன்னார். ஆனால் மக்கள் யாரும் நம்பவில்லை மக்கள் அந்தப் புற்றை அகற்ற பெரிய கடப்பாரை மூலம் அதனை வெட்டி எடுக்கும் போது ‘டங்’ என்ற சத்தத்துடன் குபு குபு குபு என்று ரத்தம் வரத்தொடங்கின. மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு எங்கிருந்து ரத்தம் வருகிறது என்று மண்ணை சற்று விலகி பார்க்கும்போது அங்கு சுயம்பு ஒன்று இருந்தது.

அதன் மேல் பகுதியில் இருந்துதான் ரத்தம் வழிந்தது உடனே வளையல் வியாபாரி தன்னிடமிருந்த மஞ்சளை எடுத்து ரத்தம் வரும் இடத்தில் வைத்து அழுத்தினார். மறுநிமிடம் ரத்தம் நின்று விட்டது.இதை அடுத்து அந்த இடத்தில் சுயம்புவை மூலமாக கொண்டு அம்பிகைக்கு கோவில் கட்டப்பட்டது. கோவில் கருவறையில் சுயம்பு மீது வெள்ளி கவசம் இடப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது. தற்போது அந்த கவசத்தை அகற்றிவிட்டு பார்த்தால் சுயம்பு உச்சியில் கடப்பாறை பட்ட காயத்தின் வடுவை காணலாம். இதுவே அந்தத் திருத்தலத்தின் வரலாறாகும். இக்கோவிலில் அர்ச்சகராக நாயுடு சமூகத்தினர் தான் இன்னமும் இந்த கோவிலுக்கு பூஜை செய்கிறார்கள் என்பது உண்மை. இன்றைக்கு இருக்கிற அரசியல் கட்சியினர் தங்களின் சுயலாபத்திற்காக மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை பரப்பும் வகையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை கொண்டு வருவோம் என்று தவறான செய்தியை மக்கள் மத்தியில் பறை சாற்றுகிறார்கள்.

அவர்களுக்கு எங்களின் சார்பாக ஒன்றைக் கூறிக் கொள்கிறோம். பெரிய பாளையத்தில் உள்ள பவானி அம்மன் திருக் கோயில் போன்று தமிழகத்தில் பல்வேறு திருத்தலங்களில் அர்ச்சகராக பிராமணர் மட்டும் அல்லாமல் மற்ற ஜாதியினரும் அர்ச்சகராக இருக்கிறார்கள் என்பதை ஆதாரத்துடன் இந்தப் பதிவின் வாயிலாக நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். அது மட்டுமல்ல இந்த பவானி அம்மன் கோவில் அறநிலை துறைக்கு உட்பட்ட கோவில்களில் ஒன்றாகும் என்பதை தெளிவாக பதிவிடுகிறோம். இந்த கோவிலுக்கு ஆடி , ஆவணி மாதம் முழுவதும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அம்மனை தரிசிப்பார்கள். அதிலும் வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை,வாரத்தின் கடைசி நாளான சனிக்கிழமை பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். தன்னை நம்பி நாடி வரும் லட்சோப லட்ச பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை வாரி வாரி வழங்கி ஆசீர்வதித்து கொண்டிருக்கிறாள் பெரியபாளையத்து பவானி அம்மன் ஓம் சக்தி


Share it if you like it