பிரதமர் நரேந்திர மோடி தனது 107 வது அத்தியாயமான “மனதின் குரல்” நிகழ்ச்சியில் நேற்று பேசினார். அதில் பல நிகழ்வுகள் மற்றும் மனிதர்கள் குறிப்பிட்டு பேசினார். குறிப்பாக தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவரை பாராட்டி பேசியுள்ளது, தமிழ் மக்களை வியப்பிற்குள்ளாக்கியுள்ளது. பிரதமர் மோடி பேசியதாவது :- தமிழகத்தின் கோயம்புத்தூரை சேர்ந்த லோகநாதன் வெல்டராகவும் மற்றும் சமூக ஆர்வலராகவும் உள்ளார். சூலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் லோகநாதன் கடந்த 25 வருடங்களாக 1500 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வியை தொடர உதவியுள்ளார். சிறு வயதில் குழந்தைகள் கிழிந்த ஆடைகளை அணிந்திருப்பதை பார்த்து அவர் மிகவும் வேதனைப்பட்டார். பின்னர் அவர் அத்தகைய ஏழை குழந்தைகளுக்கு உதவ உறுதிமொழி எடுத்து, அவர்களுக்காக தனது சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை வங்கியில் சேமித்து வைத்து குழந்தைங்களின் செலவிட்டு வருகிறார். தனது பணியினை முடித்துவிட்டு நலனுக்காக கழிப்பறைகளை சுத்தம் செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை குழந்தைகளின் நலனுக்காக செலவிட்டு வருகிறார். இவ்வாறு பாராட்டி பிரதமர் மோடி பேசினார்.
இதுதொடர்பாக லோகநாதன் கூறியதாவது :- பிரதமர் மோடி என்னை பாராட்டினார். அது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். மன் கி பாத் நிகழ்ச்சியில் எனது பெயரை பிரதமர் மோடி குறிப்பிட்டதையடுத்து எனது குடும்பத்தினர் எனது நண்பர்கள் மற்றும் எனது சகாக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த 25 வருடங்களாக பள்ளி மாணவர்களின் மேல் படிப்பிற்கு உதவி செய்து வருகிறேன்.கல்வியின் மூலம் மட்டுமே நம் தேசத்திலும், நம் குடும்பங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று பேசினார்.
டைம்ஸ் ஆப் இந்தியா சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை கெத்து ஹீரோஸ் என்கிற தலைப்பில் தனது சிறப்பு பத்தியில் லோகநாதனை சிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.