மணிப்பூர் கலவரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சித்த விவகாரத்தில், எழுத்தாளர், பதிப்பாளர் மற்றும் பேச்சாளருமான பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் பத்ரி சேஷாத்ரி. எழுத்தாளர், பதிப்பாளர், மேடை பேச்சாளர், அரசியல் விமர்சகர் என பன்முக திறமை கொண்டவர். பா.ஜ.க. ஆதரவாளரும், வலதுசாரி சிந்தனையாளருமான இவர், மணிப்பூர் கலவரம் குறித்து பல்வேறு தனியார் செய்தி நிறுவனங்களின் நிகழ்ச்சிகள், யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்து வந்தார். அந்த வகையில், சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த பத்ரி சேஷாத்ரி, “மணிப்பூர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட், உங்களால் செய்ய முடியாவிட்டால் நாங்கள் இறங்கி செய்வோம் என்று கூறியிருக்கிறது.
நமது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட், கையில் துப்பாக்கியை தூக்கிக்கொண்டு மணிப்பூர் சென்று ஏதாவது அமைதியை கொண்டுவர முடியுமா என்று நீங்கள் பாருங்கள். சும்மா சம்மந்தம் சம்மந்தமில்லாமல் ஏதாவது பேசவேண்டியது. நீதிமன்றமான நீங்கள் அரசாங்கத்திற்குள் நுழையமுடியுமா? மத்திய மாநில அரசுகள் செய்து கொண்டிருப்பதில் என்ன குறை கண்டீர்கள்? அது ஒரு மலைப்பாங்கான பகுதி. மிகவும் சிக்கலான நிலப்பரப்பு. அதற்குள் கொலை நடக்கத்தான் நடக்கும்” என்று கூறியிருந்தார்.
இதையடுத்து, பத்ரி சேஷாத்ரி மீது பெரம்பலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கவியரசு போலீஸில் புகார் அளித்திருந்தார். இதன் பேரில் பெரம்பலூர் மாவடடம் குன்னம் போலீஸார் இன்று காலை சென்னையில் வைத்து பத்ரி சேஷாத்ரியை கைது செய்தனர்.
பத்ரி கைதுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “புகழ்பெற்ற பதிப்பாளர், மேடைப் பேச்சாளர் பத்ரி சேஷாத்ரியை தமிழக காவல்துறை இன்று அதிகாலை கைது செய்திருப்பதை தமிழக பா.ஜ.க. வன்மையாக கண்டிக்கிறது. சாமானிய மக்களின் கருத்துக்களை எதிர்கொள்ள திராணியற்று கைது நடவடிக்கையை மட்டுமே நம்பி இருக்கிறது இந்த ஊழல் தி.மு.க. அரசு. ஊழல் தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை செயல்படுத்துவது ஒன்று மட்டும்தான் தமிழக காவல்துறையின் பணியா?” என்று பதிவிட்டிருக்கிறார்.