ஜல்ஜீவன் திட்டத்துக்கு தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் சிக்கந்தர் 15 சதவிகிதம் கமிஷன் கேட்டதாக ஆடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சிக்கு உட்பட்ட 1,840 குடும்பங்களுக்கு ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் விநியோகம் செய்வதற்காக 1.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டு, பணி நிறைவடையும் நிலையில் இருக்கிறது. ஆனால், இப்பணிகளின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால், கான்ட்ராக்டருக்கு பில் பாஸாகவில்லை. இதுகுறித்து கான்ட்ராக்டர் ஜான் விசாரித்தபோது, தி.மு.க.வைச் சேர்ந்த திருமயம் ஊராட்சி மன்றத் தலைவர் சிக்கந்தர், கமிஷனை எதிர்பார்த்து பணிக்கு முட்டுக்கட்டை போடுவது தெரியவந்தது.
இந்த நிலையில்தான், மேற்கண்ட பணிகள் மற்றும் நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டுவதற்கு ஊராட்சி மன்றத் தலைவர் சிக்கந்தர் 15 சதவிகிதம் கமிஷன் கேட்பதாக, வார்டு உறுப்பினர் பழனியப்பன், கான்ட்ராக்டர் ஜான் என்பவரிடம் கேட்டிருக்கிறார். இது தொடர்பான ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தி.மு.க.வினர் மக்கள் நலப்பணிகளிலும் இதுபோன்ற அராஜகத்தில் ஈடுபடுவது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.