பஞ்சாப் ராணுவ முகாமில் பயங்கரவாத தாக்குதல்? 4 வீரர்கள் பரிதாப பலி!

பஞ்சாப் ராணுவ முகாமில் பயங்கரவாத தாக்குதல்? 4 வீரர்கள் பரிதாப பலி!

Share it if you like it

பஞ்சாப் ராணுவ முகாமில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் புகுந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

காஷ்மீர், பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களும் பாகிஸ்தான் எல்லைக்கு மிக அருகில் அமைந்திருக்கின்றன. இப்பகுதிகளில் அடிக்கடி தீவிரவாதிகள் ஊடுருவலும், தாக்குதலும் நடைபெறுவது வாடிக்கை. இதனால், இவ்விரு மாநிலங்களும் நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் மிகுந்தவையாக கருதப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படைத் தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 7 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில்தான், தற்போது பஞ்சாப் ராணுவ முகாமில் பயங்கரவாத தாக்குதல் அரங்கேறி இருக்கிறது.

பஞ்சாப் மாநிலம் பதிண்டா பகுதியில் அமைந்திருக்கும் ராணுவ முகாமில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதையடுத்து, ராணுவ வீரர்களும், அதிகாரிகளும் விரைந்து சென்ற பார்த்தபோது, அங்கு 4 ராணுவ வீரர்கள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தனர். இதனால், உஷாரான ராணுவத்தினர், பஞ்சாப் முழுவதும் உள்ள ராணுவ முகாம்கள் மற்றும் காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, பதிண்டா ராணுவ முகாமுக்கு கூடுதல் ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால், யாரும் பிடிபடவில்லை.

இதையடுத்து, பதிண்டா முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் ராணுவத்தினர் கொண்டு வந்திருக்கிறார்கள். இது தீவிரவாதத் தாக்குதலாக இருக்குமா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதேசமயம், பஞ்சாப் பதிண்டா ராணுவ முகாமில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 28 குண்டுகள் நிரம்பிய ஒரு துப்பாக்கி காணாமல் போய் விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே, இத்தாக்குதலில் சக ராணுவ வீரர்கள் யாரேனும் ஈடுபட்டிருக்க வாய்ப்பிருப்பதாக போலீஸார் கருதுகின்றனர். எனவே, ராணுவ முகாமின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.


Share it if you like it