காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக களமிறங்கிய பஞ்சாப்
இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ஒருபகுதியாக இருக்கும் பஞ்சாப் மாநிலத்தை ‘காலிஸ்தான்’ என்ற பெயரில் தனிநாடாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பல தசாப்தங்களாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் இந்த பயங்கரவாதிகள் தங்கள் அமைப்புகளுக்கு நிதி திரட்டி சுதந்திரமாக செயல்பட்டு வருகிறார்கள்.
தேசவிரோத செயல்களில் ஈடுபடும் இந்த அமைப்புகளில் ஒன்று தான் ‘வாரீஸ் பஞ்சாப் டே’. பஞ்சாப்பில் நடிகர் தீப் சித்து என்பவரால் வாரீஸ் பஞ்சாப் டே என்ற இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. நடிகர் தீப் சித்து கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த அமைப்பை தற்போது, அம்ரித்பால் சிங் என்பவர் நடத்தி வருகிறார்.
யார் இந்த அம்ரித்பால் சிங்
காலிஸ்தான் ஆதரவாளரான அம்ரித்பால் சிங் துபாயில் இருந்து செயல்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு இந்தியா வந்தார். அவருக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஐ.எஸ்.ஐ அமைப்பின் ஆதரவுடனும் காலிஸ்தான் தலைவர்களின் உத்தரவின் பேரிலும் அவர் இந்தியா வந்ததாக கூறப்படுகிறது.
பஞ்சாபில் போதை மருந்துக்கு அடிமையானவர்களை குறிப்பாக இளைஞர்களை மீட்டெடுக்க நடத்தப்படும் போதை ஒழிப்பு மையங்கள் மூலம் இளைஞர்களை மூளை சலவை செய்து தேசவிரோத செயல்களில் ஈடுபடுத்த அம்ரித்பால் சிங் தூண்டுவதாக உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன. முக்கியமாக அவர் இளைஞர்களை மனித வெடிகுண்டுகளாக மாற்ற பயிற்சி அளித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தியாவுடன் நேரடியாக மோத முடியாத பாகிஸ்தான், அம்ரித்பால் சிங் போன்ற பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்பி அவர்கள் மூலம் நம் நாட்டில் சட்ட ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி செய்வதாக உளவு அறிக்கைகள் கூறுகின்றன.
இந்த சூழ்நிலையில் கடந்த பிப்ரவரி 24ம் தேதி கடத்தல் வழக்கு ஒன்றில் அம்ரித்பாலின் நெருங்கிய கூட்டாளியான, லவ்பிரீத் சிங் என்பவரை போலீசார் கைது செய்தபோது பஞ்சாபில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வாரீஸ் பஞ்சாப் டே அமைப்பினர் அவரை விடுவிக்க கோரி போராட்டம் நடத்தினர். மேலும் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அஜ்னாலா காவல் நிலையத்திற்குள் தடையை மீறி, பயங்கர ஆயுதங்களுடன் தடுப்புகளை உடைத்து கொண்டு உள்ளே புகுந்தனர். அவர்களை தடுக்க முயன்றபோது 6 காவலர்கள் காயமடைந்தனர். பின் லவ்பிரீத் சிங் விடுவிக்கப்படுவார் என போலீசார் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து அம்ரித்பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீது பல விமர்சனங்கள் எழுந்தன. பஞ்சாபில் சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டு உள்ளதாக பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அதற்கு பதிலளித்த முதல்வர் பகவந்த் மான் சிங் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என உறுதி அளித்தார்.
தேடுதல் வேட்டையில் பஞ்சாப் போலீசார்
இந்த சம்பவங்களை தொடர்ந்து பஞ்சாபில் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது கைது நடவடிக்கை பாய்ந்தது. அம்ரித்பாலின் நிதி தொடர்பான விசயங்களை கவனித்து கொள்ளும் தல்ஜீத் சிங் கால்சி என்பவர் அரியானா மாநிலத்தின் குர்கான் பகுதியில் வைத்து பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் அவரது ஆதரவாளர்கள், உதவியாளர்கள் சிலரும் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அம்ரித்பால் சிங்கை கைது செய்ய பஞ்சாபின் 7 மாவட்டங்களை சேர்ந்த போலீசார் அடங்கிய ஒரு சிறப்பு படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அம்ரித்பால் சிங் தலைமையில் காலிஸ்தான் ஆதரவு பேரணி நடைபெறவிருந்த நாளுக்கு முன்னதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் அம்ரித்பால் சிங் போலீசார் கண்களில் மண்ணை தூவி விட்டு பாதுகாப்பு வாகனங்களுடன் ஜலந்தரின் ஷாகோட் பகுதிக்கு சென்று அங்கிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றில் தப்பித்து சென்றார். அதனால் அம்ரித்பால் சிங் தப்பியோடிய நபராக அறிவிக்கப்பட்டார். அவர் தப்பித்து செல்ல பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் இருந்த வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இதற்கிடையில் அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் ஷாகோட் பகுதிக்கு அனைவரும் ஒன்று திரண்டு வரும்படி வீடியோ வெளியிட துவங்கினர். இதனால் ஏற்படக்கூடிய பதற்றத்தை தடுக்க பஞ்சாபில் 24 மணி நேரத்திற்கு மொபைல் மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டன.
மேலும் அமிர்தசரஸ் மாவட்டத்தில் அம்ரித்பாலின் சொந்த ஊரான ஜல்லுப்பூர், கைரா கிராமத்தில் போலீசார், துணை ராணுவ படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர். ஆங்காங்கே போராட்டம் நடத்த முயன்ற அம்ரித்பால் சிங் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பஞ்சாப்பில் அம்ரித்பால் சிங்கின் மாமா மற்றும் வாகன ஓட்டுனர் நேற்றிரவு போலீசாரிடம் சரணடைந்து உள்ளனர். இதனை போலீசார் உறுதி செய்து உள்ளனர்.
இந்த வழக்கில் தொடர்ந்து கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை மொத்தம் 112 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 34 பேர் வரை கைது செய்யப்பட்டனர். தப்பியோடிய அம்ரித்பால் சிங்கை கைது செய்வதற்காக தேடும் பணி நடந்து வருகிறது .
இந்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கையாக மொபைல் மற்றும் இணைய சேவைகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நகரங்களில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.
பஞ்சாப் நிலவரத்தை கவனத்தில் கொண்டு யூனியன் பிரதேசமான சண்டிகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மார்ச் 22ம் தேதி வரை மக்கள் ஆயுதங்களை கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அம்ரித்பால் சிங் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஆனால் போலீசார் தரப்பில் இருந்து இந்த தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
வெளிநாடுகளில் வளரும் காலிஸ்தான் அமைப்புகள்
காலிஸ்தான் பயங்கரவாதிகள் உலகம் முழுவதும் பல நாடுகளில் செயல்பட்டு வருகிறார்கள். அதில் குறிப்பாக கனடாவில் சமீபகாலமாக காலிஸ்தான் பயங்கரவாதிகளின் எண்ணிக்கையும் செல்வாக்கும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதற்கு கனடா நாட்டின் அரசு தரப்பிலும் ஆதரவு கிடைப்பது தான் வேதனை.
இதற்கு உதாரணமாக கனடாவின் புதிய ஜனநாயக கட்சி தலைவரான ஜக்மீத் சிங் பஞ்சாபில் அம்ரித்பால் சிங் மீதான கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பஞ்சாபில் நடக்கும் இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக கனடா அதிபர் ஜஸ்டின் டிரூடோ குரல் கொடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.
கனடாவில் நடக்கும் காலிஸ்தான் ஆதரவு நடவடிக்கைகளுக்கும் அதற்கு கனடா அரசு காட்டும் அலட்சியத்திற்கும் இந்தியா தரப்பில் பலமுறை கண்டனங்களும் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் லண்டனில் இந்திய தூதரகம் முன்பாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். தூதரகம் முன்பிருந்த தேசிய கொடியை கீழே இறக்கி அவமானப்படுத்தவும் முயற்சித்துள்ளனர். ஆனால் அங்கிருந்த பாதுகாவலர்கள் அதை தடுத்துவிட்டனர். இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டப்படுவதாக பிரிட்டிஷ் அரசாங்கத்தை குற்றம்சாட்டியுள்ளது.
இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கவும் நாட்டின் அமைதியை சீர்குலைக்கவும் உலக அளவில் பல சதித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் இந்த காலிஸ்தான் பயங்கரவாதம். நம் தேச நலனில் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கும் வரை அம்ரித்பால் சிங் போன்ற தேசவிரோதிகளால் என்றும் வெற்றி பெற முடியாது. இவர்கள் விரிக்கும் சதிவலையில் அப்பாவி இளைஞர்கள் சிக்காமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.