பஞ்சாப் மாஜி முதல்வர் பா.ஜ.க.வில் ஐக்கியம்!

பஞ்சாப் மாஜி முதல்வர் பா.ஜ.க.வில் ஐக்கியம்!

Share it if you like it

பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், தனது கட்சியை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டதோடு, தானும் இணைந்தார்.

பஞ்சாப் முன்னாள் முதல்வராக இருந்தவர் கேப்டன் அமரீந்தர் சிங். காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர், கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பதவி விலகினார். பின்னர், பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்கிற புதிய கட்சியை தொடங்கி, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். எனினும், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. அதேசமயம், கேப்டன் அமரீந்தர் சிங் உட்பட அவரது கட்சியினர் அனைவரும் தோல்வியடைந்தனர். இதன் பிறகு, அரசியலை விட்டு ஒதுங்கி சிறிது காலம் ஓய்வில் இருந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் டெல்லி சென்ற கேப்டன் அமரீந்தர் சிங், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதனால், அமரீந்தர் சிங் பா.ஜ.க.வில் இணையப் போவதாக தகவல்கள் வெளியானது. இதை மெய்ப்பிக்கும் வகையில், கேப்டன் அமரீந்தர் சிங் பா.ஜ.க.வில் இணையப்போவதாக, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும் கடந்த வாரம் அறிவித்தார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், அமரீந்தர் சிங் இன்று பா.ஜ.க.வில் இணையவிருப்பதாக உறுதியான தகவல் கிடைத்தது.

அதன்படி, இன்று காலை பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்ற கேப்டன் அமரீந்தர் சிங், மாலை தனது கட்சியை பா.ஜ.க.வுடன் இணைத்துவிட்டு, மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், கிரன் ரிஜூ, பா.ஜ.க. தலைவர் சுனில் ஜகார், பஞ்சாப் மாநில பா.ஜ.க. தலைவர் அஸ்வனி ஷர்மா ஆகியோர் முன்னிலையில் தானும் இணைந்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, யாத்திரை மேற்கொண்டிருக்கும் நிலையில், அவரது கட்சித் தலைவர்கள் பலரும் பா.ஜ.க.வில் இணைந்து வருவது, கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it