மது பாட்டில்கள் உடைப்பு போராட்டம்: புதிய தமிழகம் அதிரடி முடிவு!

மது பாட்டில்கள் உடைப்பு போராட்டம்: புதிய தமிழகம் அதிரடி முடிவு!

Share it if you like it

 

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் முன்பு மது பாட்டில்கள் உடைப்பு போராட்டம் நடத்தப்படும் என புதிய தமிழக கட்சியின் நிறுவனர் கூறியுள்ளார்.

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கே.கிருஷ்ணசாமி. இவர், நேற்றைய தினம் நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :

தமிழக அரசு 500 டாஸ்மாக் கடைகளை மூடுமாறு உத்தரவிட்டுள்ளது. இது மது விலக்குக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகத் தோன்றினாலும், ஏற்கெனவே மூடப்பட்ட கடைகள், சரிவர விற்பனையாகாத கடைகள் போன்றவைதான் கணக்கு காட்டப்பட்டுள்ளன. இதில் வெளிப்படைத் தன்மை இல்லை. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, வரும் ஜூலை 15-ம் தேதி காமராஜர் பிறந்த நாளில், பெண்களை முன்னிறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் முன்பு மது பாட்டில்கள் உடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் செய்த செந்தில் பாலாஜி, வேறு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது உடல்நலத்தை காட்டி, அவரது ஊழலை மறைக்க திமுக முயல்கிறது. செந்தில் பாலாஜியிடம் சிபிஐ, ஆடிட்டர் ஜெனரல், அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, செந்தில் பாலாஜியை முதல்வர் காப்பாற்ற நினைப்பது, ஆட்சிக்கு அழகல்ல. அவரை முதலில் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும். இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.


Share it if you like it