கண்ணதாசன் பிறந்த தினம் இன்று!

கண்ணதாசன் பிறந்த தினம் இன்று!

Share it if you like it

கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

கண்ணதாசனின் இயற்பெயர்  முத்தையா.  தமிழ்நாடு, சிறுகூடல்பட்டியில் தன வணிகர் மரபில் பிறந்தார். தாய் விசாலாட்சி ஆச்சி, தந்தை சாத்தப்பனார். இவருடன் உடன்பிறந்தோர் 8 பேர். சிறு வயதில் இவரை ஒருவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதி புதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் 14 வயதுப் பையனாகச் சென்னை வந்தார் கவிஞர். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா பீச்சில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டிருக்கிறார் கவிஞர்.

நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. காலையில் நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும். இரவு மண்ணடி வரை நடந்து போக முடியாது. அதனால் பீச்சில் படுத்துக் கொள்ள அனுமதிகேட்ட அந்தப் பதினாறு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது. “”படு…படுக்கணும்னா நாலணா கொடு” என்று காவல் மிரட்டியது. நாலணாவுக்கு வழியின்றி கலங்கிய கண்களுடன் காந்தி சிலையிலிருந்து நடந்திருக்கிறார் கவிஞர். அவர் வளர்ந்து கவியரசர் கண்ணதாசன் என்று பெயர் பெற்று “சுமைதாங்கி’ என்ற சொந்தப்படம் எடுக்கிறார். கதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்தி சிலையைத் தேர்ந்தெடுத்தார்.

நள்ளிரவு ஷூட்டிங். ஆனால் படத்தில் இரவு 7 மணி மாதிரி இருக்க பீச் ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வர வேண்டும். ஏழு கார்களை நிற்க வைத்து மாறி மாறி ஒன்றன் பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள். வீட்டில் இந்தப் படத்தைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்த கவிஞர் தன் பின்ளைகளைப் பார்த்துச் சொல்லியிருக்கிறார். சிறு வயதிலேயே எழுத்தின் மீது தீராத ஆர்வம். சிறு சிறு புத்தகங்கள் வாசிக்கக் கிடைத்தன. பத்திரிகைகளில் கதை எழுத வேண்டும் என்பது அவரது கனவு. 16 வயதில் வீட்டுக்குத் தெரியாமல் சென்னைக்கு கிளம்பி வந்தார் கண்ணதாசன். சந்திரசேகரன் என்று புனைப் பெயர் சூடிக்கொண்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புத் தேடினார். ஆனால், சென்னை அவருக்கு பல கொடுமையான அனுபவங்களைத் தந்தது.  ஒரு நிறுவனத்தில் உதவியாளராக வேலை கிடைத்தது. அந்நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே கதைகள் எழுதத் தொடங்கினார். 

கிரகலட்சுமி என்ற பத்திரிகையில் ”நிலவொளியிலே” என்ற அவரது முதல் கதை வெளிவந்தது. முதல் கதையை அச்சில் கண்ட உத்வேகத்தில், இன்னும் தீவிரமாக எழுதத் தொடங்கினார். ஒரு நண்பரின் பரிந்துரையோடு, புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த திருமகள் என்ற பத்திரிகையில், “ப்ரூப் திருத்துனர்” வேலை கேட்டார். நேர்க்காணலில், பத்திரிகையின் அதிபர், உங்கள் பெயரென்ன? என்று கேட்டார். அப்போது அந்த நொடியில் அவர் அவரது பெயரை ”கண்ணதாசன்” என்று பதில் சொன்னார். முத்தையா, கண்ணதாசனாக மாறியது அந்தத் தருணத்தில் தான்.   

கண்ணதாசனின் திறமையால் ஒருநாள் இதழுக்கு தலையங்கம் எழுதச் சொன்னார். இந்திய தேசிய ராணுவம் பற்றி கண்ணதாசன் எழுதிய தலையங்கம், பத்திரிகை அதிபரை பெரிதும் கவர்ந்தது. உடனடியாக பத்திரிகையின் ஆசிரியராக பணி அமர்த்தப்பட்டார். அப்போது அவருக்கு வயது 17.  பிறகு திரை ஒலி, சண்டமாருதம், தென்றல், தென்றல் திரை உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றினார். கண்ணதாசன் என்ற பத்திரிகையை அவரே நடத்தினார். அனைத்து பத்திரிகைகளிலும் அவரது கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் வெளிவந்தன. 

கவிதைகள் மூலம் அடையாளம் கிடைத்த பிறகு, திரைப்படங்களுக்கு பாடல் எழுத வேண்டும் என்ற எண்ணம் கண்ணதாசனுக்கு ஏற்பட்டது. சண்டமாருதம் பத்திரிகை நிறுத்தப்பட்ட பிறகு, மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் கண்ணதாசனும் சேர்க்கப்பட்டார். கதை இலாகா சந்திப்புகளில் கருணாநிதியின் நட்பு கிட்டியது. அதன் வழி திராவிட இயக்கத்தின் மீது ஆர்வம் அதிகமானது.
 
பிறகு பத்திரிகை பணிகளை உதறிவிட்டு முழுமூச்சாக திரைப்படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்புத் தேடினார். ஜூபிடர் நிறுவன தயாரிப்பில், தான் இயக்கிய கள்வனின் காதலி படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கொடுத்தார் கே.ராம்நாத். இந்த பாடல் தான் கண்ணதாசனின் முதல் பாடல். அதன்பிறகு, அடுத்த 30 ஆண்டுகள் திரைத்துறையை முற்றுமுழுதாக ஆளுமை செய்தார் கண்ணதாசன். 

கதை, வசனம், தயாரிப்பு என சகல துறைகளிலும் இயங்கினார்  இசையமைப்பாளர்கள் எல்லாம் தங்கள் இசையில் அவருடைய பாடல் இடம் பெறுவதை பெருமையாகக் கருதினர். தொடக்கத்தில் திராவிட இயக்கத்தில் தீவிரமாக இயங்கிய கண்ணதாசன் பிற்காலத்தில் இந்து மதத்தில் பற்றுடையவரானார். கம்பரின் செய்யுளிலும்,பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர். அண்ணாவின் திராவிட கழகத்தில் இருந்த கண்ணதாசன் 1961 ஏப்ரல் 9 இல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார்.

படைப்புகள்- அர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்,திரைப்படப்  பாடல்கள், மாங்கனி. கவிதை நூல்கள்- பொன்மழை (ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ்ப்பாடல் வடிவம்), கண்ணதாசன் கவிதைகள் – 6 பாகங்களில் * பாடிக்கொடுத்த மங்களங்கள் * கவிதாஞ்சலி * தாய்ப்பாவை* ஸ்ரீகிருஷ்ண கவசம், சுருதி சேராத ராகங்கள், முற்றுப்பெறாத காவியங்கள் , பஜகோவிந்தம், கிருஷ்ண அந்தாதி, கிருஷ்ண கானம். புதினங்கள்- அவளுக்காக ஒரு பாடல், அவள் ஒரு இந்துப் பெண், சிவப்புக்கல் மூக்குத்தி, ரத்த புஷ்பங்கள், சுவர்ணா சரஸ்வதி, நடந்த கதை, மிசா, சுருதி சேராத ராகங்கள், முப்பது நாளும் பவுர்ணமி, வாழ்க்கைச்சரிதம்- எனது வசந்த காலங்கள், வனவாசம் (பிறப்பு முதல் தி.மு.க.விலிருந்து பிரியும் வரை, எனது சுயசரிதம் (வனவாசத்தின் விடுபட்ட பகுதிகள்,மனவாசம் (காங்கிரசு கட்சியில் இருந்த காலத்தின் வாழ்க்கை)கட்டுரைகள்- கடைசிப்பக்கம், போய் வருகிறேன், அந்தி, சந்தி, அர்த்தஜாமம், நான் பார்த்த அரசியல், எண்ணங்கள், வாழ்க்கை என்னும் சோலையி.  நாடகங்கள் – அனார்கலி, சிவகங்கைச்சீமை, ராஜ தண்டனை.
இவை தவிர கவிஞர் கண்ணதாசன் பகவத் கீதைக்கு உரை எழுதியுள்ளார், அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிக்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார்.
விருதுகள்- சாகித்ய அகாதமி விருது (சேரமான் காதலி படைப்பிற்காக)

மறைவு:

உடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24 இல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22இல் எரியூட்டப்பட்டது.

தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. இங்கு கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அரங்கம் ஒன்று உள்ளது. இங்கு 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

கண்ணதாசன் எழுதிய பெரும்பாலான பாடல்கள் அவரின் அனுபவத்தில் விளைந்தவை.  இன்றைக்கும் பலருக்குத் தாலாட்டாக, பலரின் துயரங்களுக்கு ஆறுதலாக, மனம் தொய்ந்து கிடக்கும் பலருக்கு உத்வேகமாக இருப்பவை கண்ணதாசனின் பாடல்கள். 36 ஆண்டுகள் கடந்தும் கண்ணதாசன் இன்னும் நம் மத்தியில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர் அவர்.

திருமதி. சுதா உப்பிலிஸ்ரீனிவாசன்


Share it if you like it