மத மாற்றத்தைத் தடுத்த முன்னாள் பஞ்சாயத்து தலைவரை போலீஸார் கைது செய்ததை கண்டித்து, அந்த கிராம மக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்தே, தமிழகத்தில் மத மாற்றம் உள்ளிட்ட தேச விரோத செயல்கள் அரங்கேறி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. சமீபத்தில்கூட தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்த, அரியலூர் மாணவி லாவண்யா, மத மாற்றத்துக்கு நிர்பந்திக்கப்பட்டு, மறுத்ததால் கொடுமைப்படுத்தப்பட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பாரத தேசம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவத்தை கண்டித்து, வி.ஹெச்.பி., பா.ஜ.க., இந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளும், தேச பக்தர்களும், நடுநிலையாளர்களும் நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தின் சுவடு மறைவதற்குள், மற்றொரு மத மாற்ற சம்பவம் அரங்கேறி இருப்பதும், அதை கண்டித்த முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் கைது செய்யப்பட்டிருப்பதும் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகாவில் அமைந்திருக்கிறது திம்மியம்பட்டி கிராமம். இக்கிராமத்தில் வசிக்கும் மக்களை கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி, ஒரு கும்பல் பிரசாரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் கணேஷ் பிரபு, மத மாற்ற கும்பலை கண்டித்திருக்கிறார். உடனே, அக்கும்பல் கணேஷ் பிரபு மீது போலீஸில் பொய்யான புகார் ஒன்றை கொடுத்திருக்கிறது. போலீஸாரும் என்ன நடந்தது என்பதை விசாரிக்காமலேயே கணேஷ் பிரபு மீது பொய்யான வழக்கை பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
இதை கண்டித்து, திம்மியம்பட்டி கிராம மக்கள் தங்களின் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். மேலும், போலீஸாரின் இச்செயலை கண்டித்து இன்று (ஜன. 30) மாலை 3 மணியளவில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். மத மாற்றத்தைத் தடுத்தவரை விசாரணை இன்றி போலீஸார் கைது செய்திருக்கும் இச்சம்பவமும், அதைத் தொடர்ந்து ஊர் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருப்பதும்தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.