ராகுல் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு?!

ராகுல் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு?!

Share it if you like it

அவதூறு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, எம்.பி. பதவியில் இருந்தும் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு பாயலாம் என்று கூறப்படுகிறது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தார். கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது கோலார் நகரில் பேசிய ராகுல் காந்தி, திருடர்கள் அனைவருக்கும் மோடி என்கிற குடும்பப் பெயர் இருப்பது எப்படி என்று லலித் மோடி, நீரவ் மோடி மற்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை குற்றம்சாட்டி கூறியிருந்தார். இதை கண்டித்து குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த புர்னேஷ் மோடி என்பவர், சூரத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். மனுவில், தனது பேச்சின் மூலம் ஒட்டுமொத்த மோடி என்கிற சமூகத்தையே ராகுல் காந்தி இழிவுபடுத்தி விட்டார் என்று கூறியிருந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்கள் மக்கள் பிரதிநிதியாக இருக்க முடியாது என்கிற சட்டத்தின் கீழ் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இது ஒருபுறம் இருக்க, தான் பேசியதற்கு ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்புக் கேட்டால், வழக்கை ரத்து செய்து விடுவதாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ராகுல் காந்தி மன்னிப்புக் கோரவில்லை. இதையடுத்தே, அவருக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில், தகுதி இழப்பு நடவடிக்கைக்குப் பிறகு நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “நான் யாரிடமும் மன்னிப்புக் கேட்க மாட்டேன். மன்னிப்புக் கேட்பதற்கு எனது பெயர் சாவர்க்கர் இல்லை, என் பெயர் காந்தி” என்று கூறியிருந்தார். இந்த விவகாரம் இந்திய அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில், சாவர்க்கர் பற்றி ராகுல் காந்தி பேசி விவகாரம் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நேற்று விவாதத்துக்கு வந்தது. அப்போது, பதிலளித்து பேசிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, “பிரதமர் நரேந்திர மோடியையும், ஓ.பி.சி. சமூகத்தையும், ஹிந்துத்துவா சித்தாந்தவாதியான சாவர்க்கரையும் ராகுல் காந்தி அவமதித்திருக்கிறார். ஆகவே, அவர் தண்டிக்க வேண்டும். மேலும், சாவர்க்கர் மகாராஷ்டிராவிற்கு மட்டும் தெய்வம் அல்ல, அவர் முழு நாட்டிற்குமான அடையாளம். அப்படிப்பட்ட ஒருவரை இழிவுபடுத்தும் விதமாக, மன்னிப்புக் கேட்க தான் ஒன்றும் சாவர்க்கர் இல்லை என்று ராகுல் காந்தி கூறி தொடர்ந்து அவமதித்து வருகிறார். சாவர்க்கர் யாரென்று அவர் நினைக்கிறார்? ராகுல் காந்தி தொடர்ந்து இவ்வாறு பேசினால், அவர் சாலையில் நடமாடுவது கடினம்” என்று எச்சரித்திருக்கிறார்.

இதனிடையே, சாவர்க்கரை அவமதித்த விவகாரம் தொடர்பாக, ராகுல் காந்தி மீது மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் ஒரு அவதூறு வழக்கு பதிவு செய்யப்படவிருப்பதாக கூறப்படுகிறது.


Share it if you like it