அண்ணாமலை ரூட்தான் சரியானது: சி.டி.ரவி அதிரடி!

அண்ணாமலை ரூட்தான் சரியானது: சி.டி.ரவி அதிரடி!

Share it if you like it

பா.ஜ.க.வின் ஆதரவு இல்லாமல் அ.தி.மு.க.வால் செயல்பட முடியாது. தமிழகத்தைப் பொறுத்தவரை அண்ணாமலை செய்வதுதான் சரியான அரசியல் என்று தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் சமீபகாலமாகவே அ.தி.மு.க. – பா.ஜ.க. இடையே சலசலப்பு நிலவி வருகிறது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அ.தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இதனால், அண்ணாமலை அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறியதாக தகவல் வெளியாகி, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இதன் காரணமாக அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ஜ.க. விலகுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. தவிர, தென்காசியில் நேற்று முன்தினம் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, பா.ஜ.க. கூண்டை விட்டு பறக்கத் தயாராகி விட்டதாகவும், தமிழகத்தில் அரசியல் களம் மாறிவிட்டதாகவும் கூறியிருந்தார்.

இந்த சூழலில்தான், பா.ஜ.க.வின் ஆதரவு இல்லாமல் அ.தி.மு.க.வால் செயல்பட முடியாது என்று தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்திருக்கிறார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரவி, “பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சரியான பாதையில் அரசியல் செய்துகொண்டிருக்கிறார். தமிழகத்திற்கு அண்ணாமலை செய்யும் அரசியல்தான் சரியானது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை கூறியிருப்பது பா.ஜ.க.வுக்கு வலுசேர்ப்பதாக இருக்கிறது. அண்ணாமலை இதுபோன்ற கருத்துகளை கூறினால் மட்டுமே பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க அ.தி.மு.க.வினர், முன்வருவார்கள். ஏனெனில், பா.ஜ.க.வின் ஆதரவு இல்லாமல் அ.தி.மு.க.வால் செயல்பட முடியாது” என்று கூறியிருக்கிறார்.

அண்ணாமலைக்கு எதிராக வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலரும் பேசிவரும் நிலையில், அவருக்கு ஆதரவாக சி.டி.ரவி பேசியிருப்பது தமிழக பா.ஜ.க.வினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.


Share it if you like it