சொந்த வீடு மட்டுமல்ல, அரசு பங்களாவும் போச்சு: ராகுலின் பரிதாப நிலை!

சொந்த வீடு மட்டுமல்ல, அரசு பங்களாவும் போச்சு: ராகுலின் பரிதாப நிலை!

Share it if you like it

52 வயதாகியும் எனக்கு சொந்த வீடுகூட இல்லை என்று சொன்ன ராகுல் காந்தி, தற்போது அரசு பங்களாவையும் காலி செய்ய வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, கர்நாடக மாநிலம் கோலாரில் தேர்தல் பிரசாரம் செய்தார் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி. அப்போது, திருடர்கள் எல்லோருக்கும் எப்படி மோடி என்பது பொதுவான பெயராக இருக்கிறது என்று நக்கலாகக் கூறினார். இது ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவமரியாதை செய்வது போல் இருப்பதாகக் கூறி, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அவரது எம்.பி. பதவி பறிபோனது. இதனால், அரசு பங்களாவையும் காலி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் ராகுல் காந்தி. அதாவது, எம்.பி.யாக இருக்கும் அனைவருக்கும் டெல்லியில் அரசு பங்களா ஒதுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 2004-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உ.பி.யின் அமேதி தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யானார் ராகுல் காந்தி. இதைத் தொடர்ந்து, 2005-ம் ஆண்டு துக்ளக் லேனில் அவருக்கு அரசு பங்களா ஒதுக்கப்பட்டது. அப்போதிருந்து இந்த பங்களாவில்தான் ராகுல் காந்தி வசித்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது ராகுலின் எம்.பி. பதவி பறிபோயிருக்கிறது. ஆகவே, எதிர்வரும் ஏப்ரல் 22-ம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்யும்படி மக்களவை வீட்டு வசதிக் குழு ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. எம்.பி.யாக இருப்பவர் தனது பதவியை இழந்த 1 மாதத்திற்குள் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்பது விதிமுறை. அதன்படி இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாக மக்களவை வீட்டு வசதிக் குழு தெரிவித்திருக்கிறது. இதற்கு இன்று பதிலளித்த ராகுல் காந்தி, ”எனக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவை காலி செய்கிறேன். கடந்த 20 ஆண்டுகளாக இங்கு கழித்த நினைவுகள் மகிழ்ச்சியானவை. நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்ததன் மூலம் இந்த வாய்ப்பை வழங்கிய மக்களுக்கு நன்றி. பங்களாவை காலி செய்வதற்காக எனக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் உள்ள அம்சங்களுக்கு நான் கட்டுப்படுவேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

இதில் சோகம் என்னவென்றால், கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் 85-வது மாநாடு சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்தது. இம்மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, எனக்கு 52 வயதாகிறது. இதுவரை சொந்த வீடுகூட இல்லை. நான் சிறு வயதாக இருந்தபோது நாங்கள் குடியிருந்த வீட்டை எனது தாயார் காலி செய்து கொண்டிருந்தார். ஏன் என்று கேட்டதற்கு இது நம்ம வீடு இல்லை என்று சொன்னார்கள். நான் அதுவரை அது எங்கள் வீடு என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். பிறகு, இப்போது நாம் எங்கே செல்கிறோம் என்று எனது தாயாரிடம் கேட்டேன். தெரியவில்லை என்று சொன்னார். இதுவரை எனக்கு சொந்த வீடுகூட இல்லை என்று வேதனையுடன் கூறியிருந்தார். இதை ராகுல் காந்தி கூறி 1 மாதம்தான் ஆகிறது. அதற்குள் அரசு பங்களாவையும் காலி செய்ய வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதுதான் வேதனை.


Share it if you like it