ஜாதிய வன்மம்: தி.மு.க. அமைச்சரை கண்டித்து போராட்டம்!

ஜாதிய வன்மம்: தி.மு.க. அமைச்சரை கண்டித்து போராட்டம்!

Share it if you like it

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த எம்.பி.யையும், குறவர் சமூகத்தைச் சேர்ந்த வன வேங்கை கட்சித் தலைவரையும் நிற்க வைத்து பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரை கண்டித்து குறவர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உட்பட அக்கட்சியின் மூத்த தலைவர்களும், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் எதற்கெடுத்தாலும் சமூகநீதி, சமூகநீதி என்று வாய்கிழியப் பேசிவருகின்றனர். ஆனால், அந்த சமூகநீதியை நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடிக்காமல், ஜாதிய வன்மத்தோடு நடந்து கொள்வதும் தி.மு.க.வினர்தான். இது பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபணமாகி இருக்கிறது. உதாரணமாக, கடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை ஜாதிய ரீதியில் துன்புறுத்துவதோடு, அவர்களை தங்களது கைப்பாவையாக வைத்திருக்கின்றனர். குறிப்பாக, ஊராட்சி மன்றத் தலைவர்களாக வெற்றிபெற்றவர்களின் நிலைதான் மிகவும் பரிதாபம். அவர்களுக்கு அமர்வதற்கு நாற்காலி கொடுப்பதில்லை, கோப்புகளை கையாள அனுமதிப்பதில்லை, அலுவலக சாவியை கொடுப்பதில்லை என ஏராளமான புகார்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

அவ்வளவு ஏன், கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை, தனக்கு சரிக்குச் சமமாக உட்கார வைக்காமல் பிளாஸ்டிக் நாற்காலியை போட்டு அமரவைத்து சர்ச்சையைக் கிளப்பினார் தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர் ராஜகண்ணப்பன். அதேபோல, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, அத்துறையில் பணிபுரியும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகளை, ஜாதியைச் சொல்லி திட்டியது மிகப்பெரிய அளவில் பரபரப்பை கிளப்பியது. சமீபத்தில் ஒரு அரசு நிகழ்ச்சியில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய பெண் தலைவரை, ஏம்மா நீ எஸ்.சி.தானே என்று மேடையிலேயே கேட்டு, ஜாதிய வன்மத்தைக் காட்டியது பெரும் பேசுபொருளானது. அதேபோல, நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் மேடையில் பேசும்போது, வன்னியர்னா நீயும் பறையர் மாதிரிதான் என்று ஈரோடு ராமசாமி சொன்னதாகக் கூறி, தனது ஜாதிய வன்மத்தை வெளிப்படுத்தினார்.

மேலும், எம்.பி.யாக இருக்கும் தயாநிதி மாறன், தலைமைச் செயலாளர் எங்களை தாழ்த்தப்பட்டவர்களைப் போல நடத்தினார் என்று செய்தியாளர்களிடம் ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்து, ஜாதிய வன்மத்தைக் காட்டினார். இப்படி தி.மு.க. தலைவர்கள் பலரும் பட்டியல் சமூகத்தினரை அவமதித்து வரும் சூழலில்தான், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த எம்.பி.யையும், வன வேங்கை கட்சியின் தலைவரையும் நிற்க வைத்து பேசி, தனது ஜாதிய வன்மத்தைக் காட்டி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அதாவது, குருவிக்காரர்கள், நரிக்குறவர்களை, குறவர்கள் சமூகத்தில் இணைத்து பழங்குடியினர் பட்டியலில் (எஸ்.டி.) சேர்க்கும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதை கண்டித்தும், குஜராத் மாநிலத்தை பூர்விகமாகக் கொண்டவர்களை, தமிழ்குடி குறவர் பட்டியலோடு சேர்க்கும் முடிவை கைவிட வலியுறுத்தியும் வன வேங்கை கட்சியினர் கடந்த ஒரு வாரமாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மலையடிப்பட்டியில் இப்போராட்டம் நடந்து வந்தது. இதையறிந்த அத்தொகுதியின் எம்.எல்.ஏ.வான தி.மு‌.க.வைச் சேர்ந்த தங்கப்பாண்டியன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, முதல்வர் ஸ்டாலினை சந்திக்க வைத்து கோரிக்கைகளை எடுத்துச் சொல்ல நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும், இது தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனை கடந்த 23-ம் தேதி சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள அவரது இல்லத்தில் வன வேங்கை கட்சித் தலைவர் இரணியன் மற்றும் மாநில நிர்வாகிகள் சந்தித்தனர். இந்த நேரத்தில், தென்காசி எம்.பி. தனுஷ்குமார் அமைச்சரின் இல்லத்துக்கு வந்திருந்தார். அப்போது, வன வேங்கை கட்சி நிர்வாகிகளையும், தனுஷ்குமார் எம்.பி.யையும் நிற்க வைத்தே அமைச்சர் பேசி, ஜாதிய வன்மத்தைக் காட்டி இருக்கிறார். இது தொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து, மலையடிப்பட்டி வன வேங்கை கட்சியினர், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை கண்டித்து ராஜபாளையத்தில் டிஜிட்டல் பேனர் வைத்தனர். இந்த பேனரை நேற்று மாலையில் போலீஸார் அகற்றி இருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த வன வேங்கை கட்சியினர் 300-க்கும் மேற்பட்டோர், பட்டியலின மக்களுடன் ராஜபாளையத்தில் திரண்டு நேற்று இரவு திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு சாலைமறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டனர். அப்போது, காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் லேசான தடியடி நடத்தி இருக்கிறார்கள். இச்சம்பவம் ராஜபாளையத்தில் நேற்று இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில், அமைச்சரை கண்டித்தும், போலீஸாரின் அத்துமீறலை கண்டித்தும் தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, சிவகங்கை, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வனவேங்கை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால், பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.


Share it if you like it