ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. தலைவரை கொலை செய்ய முயன்ற, சென்னையைச் சேர்ந்த கூலிப்படையினர் 2 பேர் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டவர் தரணி முருகேசன். இவரது வீடு ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் இருக்கிறது. இந்த சூழலில், நேற்று முன்தினம் நடந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தரணி முருகேசன், இரவு 9 மணியளவில் தனது வீட்டில் அமர்ந்து கட்சிக்காரர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிளில், முகக்கவசம் அணிந்தபடி வந்த இருவர், தரணி முருகேசனின் வீட்டிற்கு அருகில் நின்றுகொண்டிருந்த அவரது காரில் மோதினர். சத்தம் கேட்டு, தரணி முருகேசனின் மேலாளரான எல்.கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் உள்ளிட்ட சிலர், ஓடிவந்து பார்த்தனர்.
அப்போது, இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், முகக்கவசம் அணிந்த இருவரும் தாங்கள் வைத்திருந்த பெரிய அரிவாளை எடுத்து அவர்களை வெட்டினர். இதில், கணேசனுக்கு வெட்டி விழுந்தது. அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்த பா.ஜ.க.வினர், மர்ம நபர்களை பிடித்து கேணிக்கரை போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில், பா.ஜ.க. முன்னாள் மாவட்டத் தலைவர் கதிரவன், வழக்கறிஞர் சண்முகநாதன் ஆகியோர் தரணி முருகேசனை கொலை செய்ய கூலிப்படையை அனுப்பியது தெரியவந்தது. இதையறிந்த பா.ஜ.க.வினர், மேற்கண்ட இருவரையும் கைது செய்ய வலியுறுத்தி, தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, பிடிபட்ட மர்ம நபர்களிடம் நடத்திய விசாரணையில், சென்னை எண்ணூரைச் சேர்ந்த மோகன், புதுவண்ணாரப்பேட்டை சுரேஷ் என்பதும், கூலிப்படையாகச் செயல்பட்டதும் தெரியவந்தது. மேலும், ராமநாதபுரம் எம்.எஸ்.கே. நகரைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஸ்வரன் அழைத்ததின் பேரில் தரணி முருகேசனை கொலை செய்ய வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, மோகன், சுரேஷ், விக்னேஸ்வரன், வழக்கறிஞர் சண்முகநாதன், கதிரவன், கதிரவனின் ஓட்டுநர் பாலமுருகன் என்ற சேட்டை பாலா ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மோகன், சுரேஷ், பாலமுருகன் ஆகியோரை கைது செய்தனர். விக்னேஸ்வரன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது.
சென்னையைச் சேர்ந்த மோகன் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 18 வழக்குகளும், சுரேஷ் மீது 8 வழக்குகளும், விக்னேஸ்ரவன் மீது பல வழக்குகளும், பாலமுருகன் மீது 5 வழக்குகளும் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. பா.ஜ.க. மாவட்டத் தலைவரை கொலை செய்ய முயன்ற இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.