ராமேஸ்வரம் அருகே கடற்கரையில் வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், க்யூ பிரிவு போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
கடந்த 2018-ம் ஆண்டு ராமேஸ்வரம் தங்கச்சிமடம் அந்தோணியர் கோயில் கடற்கரை பகுதியைச் சேர்ந்த மீனவர் எடிசன், தனது வீட்டின் பின்புறம் கழிவுநீர் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டினார். அப்போது, 3 அடி ஆழத்தில் ஏதோ சத்தம் கேட்க, கைகளால் மண்ணை தோண்டி பார்த்தனர். அங்கு ஒரு பெட்டி கண்ணில் தென்பட்டது. 3 அடியில் இருந்த பெட்டி, புதையலாக இருக்கலாம் என்று சந்தேகித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார் எடிசன். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் பெட்டியை சேதப்படுத்தாமல் வெளியே எடுத்து பார்த்தனர். சோதனையில், பெட்டியின் உள்ளே கண்ணிவெடி, கையெறி குண்டுகள், அதிநவீன துப்பாக்கிக்கு பயன்படுத்தும் தோட்டாக்கள் என ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இதேபோல 50 பெட்டிகள் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த நிலையில், ராமேஸ்வரம் அருகே கடற்கரையிலும் விடுதலைப் புலிகள் ஏராளமான வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராமேஸ்வரம் அருகேயுள்ள அக்காள்மடம் கடற்கரை பகுதியில் க்யூ பிரிவு போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.