ராமேஸ்வரம் கோயிலில் நடைபெற்றுவரும் ஆடித்திருவிழாவின் ஒரு பகுதியாக அம்பாள் ஏக சிம்மாசனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி, கோயில் யானை ராமலட்சுமி உடலில் வண்ணம் பூசி மிடுக்காக நடைபோட்டு ஊர்வலம் வந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புகழ்பெற்ற ராமநாதசுவாமி கோயில் அமைந்திருக்கிறது. இக்கோயிலில் ஆடித்திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், நிகழாண்டு கடந்த 13-ம் தேதி தங்கக் கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, பர்வதவர்த்தினி அம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
ஆடித் திருவிழாவின் 10-ம் நாளான கடந்த 22-ம் தேதி ஆடிப்பூரம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, ஆடித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித் திருக்கல்யாணம் தெற்கு வாசல் நந்தவனத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் கும்ப லக்னத்தில் சுக்லபட்ச பஞ்சமி திதியும், அஸ்த நட்சத்திரமும், சித்தயோகமும் கூடிய சுபயோக தினத்தில் பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் – ராமநாதசுவாமிக்கும் திருக்கல்யாண உற்சவ வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து நடந்த மஞ்சள் நீராடல் விழாவில், அம்பாள் ஏக சிம்மாசனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி, கோயில் யானை ராமலட்சுமி, உடலில் வண்ணம் பூசி, மிடுக்காக நடைபோட்டு ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கியது.